இந்தோனேசியாவில் கொடூரமான மரண தண்டனையை எதிர்நோக்கும் யாழ் தமிழன்.

379

 

அவுஸ்திரேலியப் பிரஜையான மயூரன் சிவகுமாரன் என்ற தமிழரின் மனுக்கள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டு, அவர் மரணதண்டனையை எதிர்கொள்வதற்கான அதிபாதுகாப்புச் சிறைக்கு இன்று மாற்றப்படவுள்ளார்.

இந்தோனேசியாவில் வைத்து 2005ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தனது 24 வயதில், போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் மயூரன் சிவகுமாரன்  கைது செய்யப்பட்டார்.

2006ம் ஆண்டு மரணதண்டனை இவருக்கு விதிக்கப்பட்டிருந்தது. அதற்கெதிராக கொடுக்கப்பட்ட கருணைக் கோரிக்கை மனு இந்த ஆண்டு ஜனவரி மாத இறுதியில் நிராகரிக்கப்பட்டிருந்தது.

மயூரனின் கருணை மனுவை நிராகரித்த இந்தோனேசிய ஜனாதிபதி, தற்போது போதைப்பொருள் கடத்தல்களுக்காக கடந்த காலங்களில் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள 64 பேருக்கும் தண்டனையை நிறைவேற்றுமாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்தோனேசிய நடைமுறைப்படி மரணதண்டனை கைதிகள் சுட்டுக் கொல்லப்படுவார்கள். 12 பேர் கொண்ட குழு ஒவ்வொரு கைதிக்கும் நியமிக்கப்படும். மூன்று காவலர்களின் துப்பாக்கிகளில் சத்தம் மாத்திரம் வருகின்ற சன்னங்களும் இருக்கும்.

அனைவரும் ஒரே நேரத்தில் துப்பாக்கிப் பிரயோகத்தினை மேற்கொள்வார்கள். உண்மையான சன்னங்கள் எந்தத் துப்பாக்கியில் இருந்து சென்றன என்பது துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொள்பவர்களுக்கு தெரியாது. இது ஒரு கொடுரமான மரணதண்டனை முறையாகக் கருதப்படுகின்றது.

இந்தநிலையில், அவுஸ்திரேலியா அதீத அழுத்தத்தைப் பிரயோகிக்காதவிடத்து இந்த வார இறுதிக்குள் இந்த மரண தண்டனைகள் நிறைவேற்றுப்பட்டுவிடும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

எனினும், அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர், மரண தண்டனை தொடர்பில் தங்களது அரசு தங்களினாலான அழுத்தத்தைக் கொடுக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

நுசாகம்பங்கனொன் என்ற தீவிலியே இவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படவுள்ளது. அந்தத் தீவிற்கு இன்று மாற்றப்படும் இவர்களிற்கு மரணதண்டனை நிறைவேற்றப்படுவதற்கு 72 மணித்தியாலங்களிற்கு முதலே இதுதொடர்பாக தெரிவிக்கப்படும்.

இந்தத் தீவிற்கு புறப்படுவதற்கு தயாராகிவிட்ட மயூரன் சிவகுமாரன் தனது ஆடைகள் மற்றும் உபயோகித்த பொருட்களை ஏனைய சிறைக்கைதிகளிற்கு பகிர்ந்தளித்துள்ளார். அத்துடன், நன்றாக நடவுங்கள், அவதானமாக இருங்கள் என அறிவுரை கூறியதாக தெரிவிக்கப்படுகிறது.

பாலி-9” என்ற குறியீட்டுப் பெயரில் அழைக்கப்படும் ஒன்பது பேரடங்கிய குழுவில் ஒருவராக இருந்த மயூரன் சிவகுமாரன் சிறையில் இருந்த போது அங்கே பல மாறுதல்களைக் கொண்டு வந்திருந்தார்.

தான் அவுஸ்திரேலிய பல்கலைக்கழகமொன்றில் கலைப்பட்டதாரியாகச் சிறப்புத் தேர்வு பெற்றதோடு, சிறைச்சாலையில் ஆங்கிலம், கணனி, கணனி வரைகலை, கணக்கியல் போன்ற பாடங்களை கற்பித்ததோடு தானிருந்த சிறைப் பகுதிக்கான தலைமை சிறைக்கைதியாக ஏனையவரை வழிநடத்தும் பொறுப்பையும் மேற்கொண்டு வந்தார்.

அத்தோடு தங்களது சித்திரங்கள், வரைகலைகள் விற்பதற்கான வியாபார நிறுவனமொன்றையும் ஆரம்பித்து, அதனூடே தங்களது தயாரிப்புக்களை விற்பனை செய்தும் வந்துள்ளார்.

இந்த நிலையில் இவர்களின் விடுதலைக்கு ஆதரவாக அவுஸ்திரேலியாவில் கடந்த மாதம் மெழுகுவர்த்திப் போராட்டம் இடம்பெற்றுள்ளது.

SHARE