தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலையிலிருந்து மக்களை பாதுகாக்கும் சர்வதேச பொறிமுறை ஒன்றை உருவாக்குமாறு கோரி வட மாகாணசபையில் மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் முன்மொழிந்திருந்த பிரேரணை…
.. மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், கூட்டமைப்பின் தலைமைப்பீடம் குறித்த விடயம் தொடர்பாக ஆராய்ந்து வருவதாக முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மேற்படி கோரிக்கையினை அடிப்படையாக கொண்ட பிரேரணை கடந்த மே மாதம் எம்.கே.சிவாஜிலிங்கத்தினால் உருவாக்கப்பட்டு சபைக்கு கொண்டுவரப்பட்ட நிலையில் ஒரு அமர்வில் சிவாஜிலிங்கம் கலந்து கொள்ளாமலும் மற்றய அமர்வுகளில் ஒத்திவைக்கப்பட்டும் இருந்த நிலையில்,
குறித்த பிரேரணை கடந்த 14வது மாகாணசபை அமர்வில் எடுத்துக் கொள்ளப்பட்டபோது, ஐ.நா விசாரணைக் குழுவிற்கு சமர்ப்பிக்கும் வகையில் திருத்தங்களுடன் 15வது அமர்வில் சமர்ப்பிக்குமாறு முதலமைச்சர் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில் திருத்தப்பட்ட பிரேரணை இன்றைய தினம் நடைபெற்ற 15வது அமர்வில் எடுத்துக் கொள்ளப்பட்டபோது, கடந்த சில தினங்களுக்கு முன்னர் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் 8 பேர் கொண்ட உயர்மட்டக் குழு வவுனியாவில் கூடி ஆராய்ந்ததன், பிரகாரம் குறித்த பிரேரணையினை பிற்போடுமாறு தமக்கு கட்சியின் தலைமை உத்தரவு வழங்கியிருப்பதாகவும், சிவாஜிலிங்கம் முன்மொழிந்திருக்கும் பிரேரணையில் தமிழ் மக்கள் மீது இனப்படுகொலை இடம்பெற்றது என நம்புவதாக மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது.
அது எங்கே நடைபெற்றது? யாருக்கு நடைபெற்றது? என்பன போன்ற விடயங்கள் இல்லாமையினால், முழுமையான தரவுகளுடன் ஐ.நா சபைக்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைமைப்பீடம் வழங்கும் வரையில் குறித்த பிரேரணையினை பிற்போடுமாறு முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் வேண்டுகோள் விடுத்தார்.
இதன் பின்னர் குறித்த விடயம் தொடர்பில் சபையில் பேசிய சிவாஜிலிங்கம் இனப்படுகொலை என்ற வசனத்தை பாவிப்பதற்கு கூட்டமைப்பு அஞ்சுகின்றதா? என கேள்வி எழுப்பினார்.
அதற்குப் பதிலளித்த முதலமைச்சர், இனப்படுகொலை என்ற வசனத்தை பாவிப்பதற்கு நாம் அஞ்சவேண்டிய அவசியம் எமக்கு கிடையாது. அவ்வாறு அஞ்சப் போவதுமில்லை. என குறிப்பிட்டார்.
இதனையடுத்து தன்னுடைய பிரேரணையினை முதலமைச்சர் குறிப்பிட்டதைப் போன்று பிற்போடுவதாக கூறிய சிவாஜிலிங்கம், 2வது பிரேரணையான ஐ.நா சபையின் சர்வதேச விசாரணைக்கு, இலங்கை அரசாங்கம் ஒத்துழைக்க வேண்டும் என்ற பிரேரணையினை முன்மொழிந்தார்.
இதற்கமைவாக குறித்த பிரேரணை சபையில் எதிர்ப்பின்றி ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.