இன்று ஆடிப்பெருக்கு – எதை வாங்கினால் பல மடங்கு பெருகும்!

156
ஆடி மாதத்தில் வரும் மிக முக்கியமான நாளாக ஆடிப்பெருக்கு விழா கருதப்படுகிறது. இந்த நாளில் நல்ல காரியங்களை துவக்கினாலும், எந்த மங்கல பொருளை வாங்கி வைத்தாலும் அது பல மடங்காக பெருகும் என்பது நம்பிக்கை.
அதனால் தான் ஆடிப் பெருக்கு நாளில் விதைகள் விதைத்து விவசாயத்தை துவங்குவது, வீட்டில் மங்கல பொருட்களை வாங்கி வைத்தல், திருமணம் போன்ற சுப காரிய பேச்சுக்களை துவக்குவது ஆகியவற்றை மக்கள் மேற்கொள்கிறார்கள். ​
தமிழர்களின் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்று ஆடிப்பெருக்கு பண்டிகையாகும். ஆடி மாதத்தில் அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கும் முக்கியமான விழாக்களில் ஒன்று ஆடிப் பெருக்கு விழா. ஆடி மாதத்தில் 18 வது நாளை ஆடிப்பெருக்கு என கொண்டாடுகிறோம்.
ஆடிப்பெருக்கு, ஆடி 18 ம் பெருக்கு, பதினெட்டாம் பெருக்கு என பல பெயர்களில் இந்த மக்கள் அழைக்கிறார்கள்.
ஆடி மாதம் என்பது மழைக்காலத்தின் துவக்கமாகும். இந்த மாதத்தில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் அதிக மழை பெய்து காவிரியில் புது வெள்ளம் கரை புரண்டு ஓடி வரும். காவிரியில் நீர் பெருகி வரும் நாளையே ஆடிப்பெருக்கு நாளாக நாம் கொண்டாடுகிறோம்.
இந்த நாளை அடிப்படையாக வைத்தே விவசாயிகள் விதை விதைத்து, உழவு பணிகளை துவக்குவார்கள். இதை குறிப்பிடும் வகையிலேயே “ஆடிப்பட்டம் தேடி விதை” என முன்னோர்கள் சொல்வார்கள்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த ஆடிப் பெருக்கு தினம் 2023 ஆம் ஆண்டில் ஆகஸ்ட் 3 ஆம் திகதி வியாழக்கிழமை அன்று வருக்கிறது.
துவிதியை திதியும், பிற்பகல் வரை அவிட்டம் நட்சத்திரமும் பிறகு சதயம் நட்சத்திரமும் வருகிறது. வியாழக்கிழமை என்பதால் அன்று காலை 10.45 முதல் 11.45 வரை மட்டுமே நல்ல நேரம் உள்ளது.
காலை 6 முதல் 07.30 வரை எமகண்டமும், பகல் 01.30 முதல் 3 வரை ராகு காலமும் உள்ளது. இதனால் காலை 07.35 மணிக்கு மேல் வழிபாட்டினை தொடங்கி, பகல் 01.15 மணிக்கு முன்னதாக முடித்து விடுவது நல்லது.
இந்த நாளில் பெண்கள் தாலி சரடு மாற்றிக் கொள்ளும் வழக்கம் உள்ளது. புதுமண தம்பதிகள் தங்களின் திருமண மாலையை ஆற்றில் விட்டு, தண்ணீர் பொங்கி வருவதை போல் தங்களின் திருமண வாழ்வும், மகிழ்ச்சியும் பொங்கி, பெருகி வர வேண்டும் என காவிரி அன்னையை வேண்டிக் கொள்வார்கள். ​
திருமணமாகாத பெண்களும் ஆடிப் பெருக்கு நாளில் காவிரி தாயையும், அம்மனையும் வழிபட்டால் விரைவில் அவர்களுக்கு திருமண பாக்கியம் கூடி வரும் என்பது ஐதீகம். இந்த நாளில் ஆற்றங்கரையிலும், குளக்கரைகளிலும் மக்கள் சிறப்பு வழிபாடு நடத்துவது வழக்கம்.
அப்படி ஆற்றங்கரை அல்லது குளக்கரையில் சென்று வழிபட முடியாதவர்கள் வீட்டிலேயே அம்மனுக்கு சர்க்கரை பொங்கல் படைத்து வழிபடலாம். வேப்பிலை மாலை சாற்றி வழிபடலாம்.
ஆடிப் பெருக்கு நாளில் விரதமிருந்து அம்மனை வழிபட்டால் 16 வகையான செல்வங்களும் நம்முடைய வாழ்வில் குறைவின்றி பெருகி வரும்.
SHARE