இமயமலை ரகசியம் வெளியிட்ட ஆராய்ச்சியாளர்

505

கருத்துகள்

மண்ணில் கிடைக்கும் தாதுப் பொருள்களையும் பூமிக்கடியில் புதையுண்ட உயிர்களின் படிமங்களையும் ஏராளமாகச் சேகரித்து ஆராய்ந்து வெளியிட்டவர்  டி.என்.வாடியா. இமயமலை தொடர்பாக மேற்கொண்ட ஆராய்ச்சி, வாடியாவை புகழின் உச்சிக்குக் கொண்டு சென்றது. அவரது உழைப்பு பூமிக்குக் கீழே  இருப்பவைகளைக் காணும் கண்ணாக விளங்கியது. வாடியா, 1883ம் ஆண்டு, அக்டோபர் 25ம் திகதி குஜராத்தின் சூரத் நகரில் பிறந்தார். பள்ளியில் அனைத்துப்  பாடங்களிலும் முதல் மாணவனாகத் திகழ்ந்தார்.

வாடியாவுக்கு படிக்கும் காலத்திலேயே ஓவியம் வரைவதில் தீவிர ஆர்வம் இருந்தது. ஆனால் இது அவரது சகோதரருக்கு பிடிக்கவில்லை. வாடியா ஒரு  விஞ்ஞானியாக வேண்டும் என்பதுதான் அவரது விருப்பம். வாடியாவும் சகோதரரின் ஆசையை நிறைவேற்ற, விஞ்ஞானத்தின் மீது கவனத்தைத் திருப்பினார்.  பள்ளிப் படிப்பை முடித்து விட்டு, பரோடா கல்லூரியில் உயிரியல் பாடப் பிரிவில் சேர்ந்தார். அடுத்து பி.எஸ்ஸி முடித்து எம்.எஸ்ஸியிலும் பட்டம் பெற்றார். தனது 23வது வயதில் வாடியா ஜம்மு நகரிலுள்ள ‘பிரின்ஸ் ஆஃப் வேல்ஸ்’ கல்லூரியில் பேராசிரியராக வேலையில் சேர்ந்தார்.

இமயமலையின் அடிவாரத்தில் தன் வாழ்க்கையைத் தொடர்ந்ததால், புவியியல் விஞ்ஞானத்தின் மீது அவருக்கு ஆர்வம் அதிகமானது. அந்த மண்ணில்  கிடைக்கும் தாதுப் பொருட்கள், மண்ணில் புதையுண்ட உயிர்களின் படிமங்கள் தொடர்பான ஆராய்ச்சி களை மேற்கொண்டார். இமயமலையின் தோற்றத்தில்  ஏற்படும் மாறுதல்கள், இயல்புகள் போன்றவற்றைக் குறித்து ஏராளமான கட்டுரைகளை எழுதியிருக்கிறார். சுருக்கமாகச் சொன்னால் இமயத்தின் சின்னச் சின்ன  விஷயங்களைக் கூட வாடியா விவரித்தார்.

தற்போது பாகிஸ்தான் பகுதியில் இருக்கும் ஜோயா மெயர் டாம், நங்க பர்வதம் போன்றவற்றின் அமைப்பு பற்றியும் ஆய்வுகளை நடத்தினார். புதைபடிமவியல்  துறையின் நிபுணராகவும் மாறினார் வாடியா. அவர் சேகரித்த பாறைப் படிமங்களில், ஒரு யானை அளவிற்குப் பெரியதான (‘ஸ்டெகோன் கணேஸா’)  மண்டையோடு எலும்புத் துண்டுகள் கூட இருந்தன. பல ஆய்வுகளை மேற்கொண்டு, பல அறியப்படாத ரகசியங்களை வெளிப்படுத்திய வாடியா, பாக் அவார்ட், தி  லைல் மெடல், மேகநாத் சாஹா மெடல் போன்றவற்றைப் பெற்றுள்ளார்.

இவர் 1957ம் ஆண்டு ராயல் சொஸைட்டியின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். வாடியா தனது மாணவர்களுக்கு புவியியல் துறையில் ஆர்வத்தை  ஏற்படுத்த ‘தி ஜியாலஜி ஆஃப் இந்தியா அண்டு பர்மா’ என்ற நூலையும் எழுதினார். இந்தியாவில் வெட்டி எடுக்க வேண்டிய கனிமப் பொருட்கள் ஏராளமாக  உள்ளது என்று எடுத்துச் சொன்னவரும் இவரே. இலங்கையில் புவியியல் ஆராய்ச்சிக்காக அடித்தளம் அமைத்ததில் வாடியாவுக்கு பெரும் பங்கு உள்ளது.  இந்தியாவிற்கே பெருமை சேர்த்த டி.என்.வாடியா 1969ல் ஜூன் 15ம் திகதி மறைந்தார். வாடியான் ஆராய்ச்சியைப் போற்றும் விதமாக அவரது தபால்தலையை  வெளியிட்டு இந்தியா கௌரவித்துள்ளது.

SHARE