இரசிகர்களை வெளியேற்றிய இலங்கை கிரிக்கெட்

150

 

முதல் டெஸ்ட் போட்டி தொடர்பான தகவலை கைத்தொலைபேசி மூலம் வெளியிட்ட இரு இந்திய இரசிகர்களை இலங்கை கிரிக்கெட் மைதானத்தை  விட்டு   வெளியேற்றிய தகவல் வெளியாகியுள்ளது. முதல் டெஸ்ட் போட்டி காலி மைதானத்தில் நடைபெற்றது. இதில் இலங்கை 63 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியின் 2 ஆவது மற்றும் 3 ஆவது நாள் ஆட்டத்தில் தொலைக்காட்சியின் நேரடி ஒளிபரப்பு தொழில்நுட்ப கோளாறால் தடைப்பட்டது. அப்போது மைதானத்தில் இருந்த இரண்டு பேர் தங்களது கைத்தொலைபேசி மூலம் போட்டி குறித்த தகவலை வெளியாருக்கு வழங்கியுள்ளனர். இதைக் கவனித்த இலங்கை கிரிக்கெட் சபை அதிகாரிகள், இருவரையும் மைதானத்தைவிட்டு வெளியேற்றியுள்ளனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இருவரும் டில்லி மற்றும் மும்பையைச் சேர்ந்தவர்கள் என்றும் அனுசரணையாளர் மூலம் முதன்முறையாக இலங்கை வந்து போட்டியைப் பார்வையிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இவர்களுக்கு வீரர்கள் மற்றும் கிரிக்கெட் சபை உறுப்பினர்கள் ஆகியோருடன் தொடர்பில்லை என்பதால் இந்தத் தகவலை வெளியிடவில்லை என இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. ஐ.பி.எல். சூதாட்ட விவகாரம் பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அனைத்து கிரிக்கெட் சபைகளும் விழிப்புடன் செயல்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

SHARE