நேற்று முன் தினம் அரசு முறைப்பயணமாக அமெரிக்கா சென்ற பிரதமர் மோடி நியூயார்க்கில் நடைபெறும் ஐ.நா. சபை கூட்டத்தில் உணர்ச்சிகரமான உரையாற்றினார்.
அங்கு இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா, நேபாள பிரதமர் கொய்ராலா ஆகியோரையும் மோடி சந்தித்து பேசுவார் என்று வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளரான சையது அக்பரூதின் ஏற்கனவே கூறியிருந்தார்.
அதன்படி ஷேக் ஹசீனா, மகிந்த ராஜபக்சே, சுஷில் கொய்ராலா ஆகியோரை நேற்று சந்தித்து பேசினார்.
எனினும் இச்சந்திப்பில் என்ன பேசினார்கள் என்பது இது வரை வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அதேவேளை நாளை வாஷிங்டன் செல்லும் மோடி, 29 மற்றும் 30ம் திகதிகளில் தேதிகளில் அந்நாட்டு ஜனாதிபதி பராக் ஒபாமாவை சந்தித்து பேசுகிறார் என்றும் கூறப்பட்டுள்ளது.
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் நேற்று சனிக்கிழமை நியூயோர்க்கில் வைத்து சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இதன்போது இரண்டு தலைவர்களும் இருதரப்பு மற்றும் பிராந்திய விடயங்கள் குறித்து கலந்துரையாடியுள்ளனர்.
நரேந்திர மோடி கடந்த மே மாதம் 26ஆம் திகதியன்று பிரதமராக பதவியேற்ற பின்னர் மஹிந்த ராஜபக்சவை சந்தித்த இரண்டாவது சந்தர்ப்பம் இதுவாகும்.
சுமார் 30 நிமிட சந்திப்பு முடிவடைந்ததும் ஊடகங்களுக்கு கருத்துரைத்த மஹிந்த ராஜபக்ச, சந்திப்பு சிநேகபூர்வமாக அமைந்திருந்தது என்று குறிப்பிட்டார்.
13 ஆம் திருத்தச்சட்டத்தை அமுலாக்கல் தொடர்பில் நரேந்திர மோடி வலியுறுத்தினாரா? என்று கேட்கப்பட்டமைக்கு பதிலளித்த மஹிந்த ராஜபக்ச, அந்த விடயம் பேசப்படவில்லை என்று குறிப்பிட்டார்.
எனினும் இந்த சந்திப்பு தொடர்பான இந்திய தரப்பின் உத்தியோகபூர்வ செய்திகள் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது