இரண்டு பேரழிவுகளின் எதிரொலி: மலேசியன் ஏர்லைன்ஸ் ஊழியர்கள் தொடர்ந்து ராஜினாமா

377
சென்ற வருடம் வரை பாதுகாப்பு வசதிகளுக்குப் பெயர்பெற்ற நிறுவனமாக விளங்கிவந்த மலேசியா ஏர்லைன்ஸ் இந்த வருடம் இரண்டு மோசமான விபத்துகளைச் சந்தித்தது. கடந்த மார்ச் மாதம் 8ஆம் திகதியன்று கோலாலம்பூரிலிருந்து பீஜிங்கிற்குப் புறப்பட்ட இந்நிறுவனத்தின் விமானம் ஒன்று பறக்கத் துவங்கிய ஒரு மணி நேரத்திலேயே ராடாரிலிருந்து முற்றிலுமாக மறைந்தது. இன்னமும் அந்த விமானத்திற்கு நேர்ந்த விபத்து கண்டுபிடிக்கப்படவில்லை. தொடர்ந்து கடந்த ஜூலை மாதம் 17ஆம்  திகதியன்று ஆம்ஸ்டர்டாமிலிருந்து கோலாலம்பூருக்கு வந்துகொண்டிருந்த விமானம் உக்ரைன் வான்வெளியில் பறந்துகொண்டிருந்தபோது கிளர்ச்சியாளர்களால் சுடப்பட்டதில் அதிலிருந்த அனைவரும் பலியானார்கள். இந்த இரண்டு விபத்துகளிலும் மொத்தம் 537 பயணிகளுடன் 27 ஊழியர்களும் பலியாகி உள்ளனர்.

இதன் விளைவாக ஏற்பட்ட பாதிப்பில் முதல் ஏழு மாதங்களிலேயே 186 ஊழியர்கள் தங்கள் வேலையை ராஜினாமா செய்துள்ளனர் என்று இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. பெரும்பாலானோர் தங்கள் குடும்பத்தினரின் அழுத்தத்தாலும், பலர் பாதுகாப்பு குறித்த பயத்தினாலும் ராஜினாமா செய்வதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

இந்தப் பேரழிவுகளுக்குப் பிறகு பல ஊழியர்களும் பறப்பதற்கு பயப்படுகின்றனர் என்று ஊழியர்கள் சங்கத்தின் பொது செயலாளரான அப்துல் மலேக் அரிப் குறிப்பிட்டார். இதனால் எஞ்சியுள்ள ஊழியர்கள் ஒரு நாளைக்குப் பனிரெண்டு மணி நேரத்திற்கும் மேல் பணி புரிய வேண்டியுள்ளது என்பதையும் அவர் கூறினார்.

தற்போது ஊழியர்களின் ராஜினாமா குறைந்துள்ளதாகக் குறிப்பிடும் ஏர்லைன்ஸ் நிறுவனம் அவர்களுக்குத் தேவையான உணர்ச்சி மற்றும் உளவியல்பூர்வ ஆதரவையும் அளித்துவருவதாகத் தெரிவிக்கின்றது. இதுதவிர தொடர்ந்து ஐந்து காலாண்டுகளாக நஷ்டக் கணக்கையே காட்டிவந்த இந்நிறுவனம் தனியார் நிதி நிறுவனமான கசானா நேசனலால் ஏற்கப்பட்டு பெரும் சீர்திருத்தங்களையும் மேற்கொள்ள இருக்கின்றது என்று தகவல்கள் தெரிவித்துள்ளன.

SHARE