இரத்தினபுரி, பெல்மடுல்லையில் இடம்பெற்ற எமது பிரசாரக் கூட்டத்தில் அரச தரப்பு குண்டர் குழுவினரே எம்மீது தாக்குதல் நடத்தினர். இதனால் அப்பாவி மக்கள் காயமடைந்தனர். – இவ்வாறு பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
நேற்றிரவு பெல்மடுல்லையில் இடம்பெற்ற பொது எதிரணியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தின்மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து கருத்து வெளியிட்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “பெல்மடுல்லையில் இடம்பெற்ற எமது பிரசாரக் கூட்டத்தில் சுமார் 20 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் பங்கேற்றனர். இதன்போது நான் உரையாற்ற ஆரம்பித்த பின்னர் மக்கள் நின்றுகொண்டிருந்த பகுதிகளில் கல்வீச்சுத் தாக்குதல்கள் இடம்பெற்றன.
மேடையைச் சுற்றியிருந்த இதனால் அப்பாவி மக்கள் சிலர் காயமடைந்தனர். அவர்கள் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டனர். எனது பாதுகாப்பு அதிகாரிகள் என்னை மிகவும் பத்திரமாகப் பாதுகாத்து வாகனத்தில் ஏற்றி கூட்டம் நடந்த இடத்திலிருந்து வெளியேற்றினர்.
அரச தரப்பு குண்டர் குழுவினராலேயே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது. மஹிந்த ராஜபக்ஷவின் ஜனநாயகம் தொடர்பில் நாம் மிகவும் கவலையடைகின்றோம். நல்லாட்சியைப் பற்றி அவர் பேசுகின்றார். ஆனால், நீதியானதும், சுதந்திரமானதுமான தேர்தலை மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும்போது, இவ்வாறு தாக்குதல் நடத்துவது தொடர்பில் நாம் கவலையடைகின்றோம்