இராணுவத்தினராலும், பயங்கரவாத புலனாய்வுப் பிரவினராலும் சிறிதரன் MP துரத்தப்பட்டது ஏன்.?

586

இலங்கையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், கடந்த 18ம் திகதி புலனாய்வுப் பிரிவினரால்,திணைக்களகத்தின் அபகீர்த்தி வாய்ந்த நான்காவது மாடியில் வைத்து மூன்று மணிநேர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். வடக்கில் கிளிநொச்சியில் சிறிதரனின் அலுவலகத்தில் நடத்தப்பட்ட தேடுதலின் போது வெடிபொருட்களும் இராணுவத்துக்கு எதிரான இருவட்டுக்களும் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறியே சிறிதரன் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார்.

ஜனவரி நடுப்பகுதியில், சிறிதரன் அலுவலகத்தில் இல்லாத சந்தர்ப்பங்களில் சட்டரீதியான அனுமதி எதுவும் இன்றி, அங்கு இரண்டு முறை 35 பேருக்கும் மேற்பட்ட இராணுவத்தினராலும், பயங்கரவாத புலனாய்வுப் பிரவினராலும் தேடுதல் மேற்கொள்ளப்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து கூட்டமைப்பின் கிளிநொச்சி அமைப்பாளர் அ. வேழமாலிகிதன், சிறிதரனின் பிரத்தியேக செயலாளர் பொன்னம்பலம் லக்ஷ்மிகாந்தன் மற்றும் வசந்தன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், ஒரு மாதம் கடந்தும் அவர்கள் மீது எந்தவொரு குற்றச்சாட்டும் முன்வைக்கப்படவில்லை.

8 2148_content_IMG_0328 atchuveli-land1 cv_sere1 cv_sere2

இந்த நடவடிக்கையானது, அரசாங்கத்தை விமர்சிக்கும் தமிழ் அரசியல்வாதிகளின் கைகளை முறுக்குவதை இலக்காகக் கொண்டு அரசாங்கம், இராணுவம் மற்றும் அதனுடன் சேர்ந்து இயங்கும் துணைப்படைக் குழுக்களதும் திட்டமிட்ட சூழ்ச்சியாகும் என்பது, அந்த தேடுதல் மேற்கொள்ளப்பட்ட முறை மற்றும் அதை அடுத்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் வெளிப்படுத்துகின்றன.

இந்த தேடுதலின்போது இராணுவத்தினால் அழைத்து செல்லப்பட்ட அரசு சார்பு ஊடகங்கள் அலுவலகத்தில் இருந்து வெடிபொருட்கள் மீட்கப்பட்டதாக அறிவித்ததுடன் அங்கிருந்த கணனிகளில் இருந்து இளம் பெண்களின் படங்கள் அத்துடன் ஆணுறைகள் மீட்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியிட்டன.

அரசாங்கம், சிறிதரனுக்கு எதிராக ஒரு சிலர் மட்டும் கலந்து கொண்ட ஊர்வலம் ஒன்றை ஒழுங்கு செய்திருந்ததோடு அவருக்கு எதிரான விமர்சனங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களையும் அம் மாவட்டம் முழுவதும் விநியோகித்திருந்தது. இராணுவப் புலனாய்வாளர்களும், ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பங்காளியும் ஒரு தமிழ் துணைப்படை குழுவுமான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினரும் (EPDP) அங்கு மீட்கப்பட்ட பொருட்கள் என்ற படங்களுடன் கூடிய ஒரு துண்டுப்பிரசுரத்தினை வடமாகாண மக்களிடமும் பாடசாலை மாணவார்களிடமும் விநியோகித்தனர். அரசு சார்பான இணைய தளங்கள் இத் துண்டுப்பிரசுரங்களை மறுபிரசுரம் செய்திருந்தன.

தேடுதல் குறித்து கருத்துத் தெரிவித்த சிறிதரன், “இது அரசினது திட்டமிட்ட சதி” என தான் சந்தேகிப்பதாகவும், பின்னர் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள்“இராணுவப் புலனாய்வாளர்களினால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட ஒரு நாடகம்” என்றார். தனது அலுவலகத்திற்கான பொலிஸ் பாதுகாப்பு கடந்த டிசம்பர் மாதம் மூன்றாம் திகதியுடன் விலக்கிக் கொள்ளப்பட்டது என்றும் அவர் மேலும் சுட்டிக் காட்டினார்.

திங்களன்று அவரை விசாரித்த புலனாய்வாளர்கள், கைது செய்யப்பட்டுள்ளவர்கள் தந்துள்ள தகவல்களின் படி விசாரிப்பதாக கூறினர். சிறிதரனுக்கு பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் விருது அளித்துள்ளதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளது என அவர்கள் தெரிவித்ததாக சிறிதரன் கூறினார். இது அவரை“பயங்கரவாதத்துடன்” தொடர்புபடுத்தும் திட்டமிட்ட முயற்சியாகும்.

சிறிதரன் நீண்டகாலமாக இலக்கு வைக்கப்பட்டவராவார். மார்ச் 2012ல் கிளிநொச்சியிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்றுகொண்டிருந்த வேளையில் அவர் பயணித்த வாகனம் மீது நடந்த தாக்குதலில் மயிரிழையில் உயிர்தப்பிய சிறிதரன், இந்த கொலைமுயற்சிக்கு ஈ.பீ.டி.பீ.யை சந்தேகிப்பதாக தெரிவித்திருந்தார். டிசம்பர் மாதம், இராணுவத்தில் தமிழ் பெண்களை இணைத்தது பற்றி சிறிதரன் பாராளுமன்றத்தில் பேசியவை தொடர்பாகவும்,மற்றும் BBC செய்தி நிறுவனத்திற்கு வழங்கிய பேட்டி தொடர்பாகவும் அவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் 4ஆம் மாடி அலுவலகத்தில் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் இரண்டு முறை விசாரணைக்கு அழைக்கப்பட்டதாகவும் இது நாடாளுமன்ற சிறப்புரிமையினை மீறும் செயல் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

சிறிதரன் மீதான தாக்குதல் ஒரு தற்செயலான சம்பவம் அல்ல. புலிகளுக்கு எதிரான அரசாங்கத்தின் இனவாத யுத்தம் முடிவடைந்து நான்கு ஆண்டுகள் ஆகின்ற நிலைமையிலும், ஜனாதிபதி இராஜபக்ஷ வாக்குறுதியளித்த“சமாதானமும் சுபீட்சமும்” வடக்கில் வாழும் மக்களுக்கு கண்ணுக்கெட்டிய தூரத்திலும் காணக் கிடைக்கவில்லை. இறுதி யுத்தம் நடந்த வன்னி,கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு போன்ற மாவட்டங்களில் இடம்பெயர்ந்து,மீளக் குடியேற்றப்பட்டுள்ள மக்கள் அடிப்படை வசிகள் இன்றி வறுமையில் வாழத் தள்ளப்பட்டுள்ளனர். பொது மக்களின் நிலங்களில் இராணுவம் நிரந்தர முகாம்களையும் இருப்பிடங்களையும் கட்டியெழுப்பியிருப்பதோடு,அநேகமான குடும்பங்கள் தாம் முன்னர் வாழ்ந்திராத இடங்களில் வசிக்க பலவந்தப்படுத்தப்பட்டுள்ளன. பொது மக்கள், குறிப்பாக புலி சந்தேக நபர்களாக தடுத்து வைக்கப்பட்டு “புனர்வாழ்வளிக்கப்பட்டு” விடுதலை செய்யப்பட்டுள்ள இளைஞர்கள் மற்றும் யுவதிகளும் வேலை வாய்ப்பற்று இருப்பதோடு, பாதுகாப்புப் படையினரால் கண்காணிக்கப்படுகின்றனர்.

இந்த சமூக நிலைமைகளால் இந்த மாவட்டங்களில் நிலவும் அமைதியின்மை குறித்து அரச இயந்திரம் விழிப்புடன் இருப்பதோடு குண்டர் படைகளையும் இராணுவத்தையும் கொண்டு அவற்றை நசுக்குவதற்கு முயற்சிக்கின்றது. மக்களை சொந்த இடங்களில் குடியமர்த்தக் கோரியும்,மக்களின் காணிகளை இராணுவம் விடுவிக்க வேண்டுமெனக் கோரியும் தமிழ் கூட்டமைப்பு ஒழுங்கு செய்த மட்டுப்படுத்தப்பட்ட போராட்டங்கள் மீது பாதுகாப்பு படைகளைச் சேர்ந்தவர்களும் தமிழ் துணைப்படைக் குழுக்களும் மோசமான தாக்குதல்களை மேற்கொண்டுள்ளன. கடந்த நவம்பர் மாதம் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் நான்கு மாணவர்கள் புலி சந்தேக நபர்களாக கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்ததோடு மேலும் 45 பேர் கைது செய்யப்பட்டு குற்றச்சாட்டுக்களோ விசாரணைகளோ இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

அதே சமயம், சண்டே டைம்ஸ் பத்திரிகையின் படி, தமிழ் கூட்டமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள 13 உள்ளூராட்சி சபைகளுக்கு அபிவிருத்திப் பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட 560 மில்லியன் ரூபாவை அரசாங்கம் திரும்பப் பெற்றுள்ளது. இந்த நிதி வடமாகாண ஆளுநரும் முன்னாள் யாழ்.மாவட்ட இராணுவத் தளபதியுமான மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரசிறியின் கட்டுப்பாட்டிற்றிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், ஈ.பீ.டி.பீ. கட்டுப்பாட்டில் உள்ள 4 உள்ளூராட்சி சபைகளில் நிதி திரும்பப் பெறப்படவில்லை என்றும் ஏனைய செய்திகள் தெரிவிக்கின்றன. இது தமிழ் கூட்டமைப்பிற்கான ஆதரவுத் தளத்தை ஓரங்கட்டுவதற்கான முயற்சியாகும்.

சிறிதரனின் சில செயற்பாடுகள் இலங்கையிலும் புலம்பெயர் நாடுகளிலும் அவரை ஏனைய கூட்டமைப்பு தலைவர்களில் இருந்து சற்று வேறுபட்டவராக காட்டுகின்றன. கிளிநொச்சியில் உள்ள போரினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து வாழும் மக்கள், மாணவர்கள், இராணுவத்தால் நிலம் அபகரிக்கப்பட்டவர்கள் மற்றும் விவசாயிகளையும் சிறிதரன் அடிக்கடி சந்திப்பதன் மூலம் அந்த மக்கள் மத்தியில் பிரபல்யமாக இருக்கின்றார். இத்தகைய செய்திகளுக்கு லங்காஸ்ரீ போன்ற இணையங்கள் முக்கியத்துவம் கொடுப்பதால் புலம்பெயர் தமிழர்கள் மத்தியிலும் இவர் நன்கு அறியப்பட்டவராவார். மேற்கு ஐரோப்பா, கனடா, இந்தியா, தென் ஆபிரிக்கா போன்ற நாடுகளுக்கு விஜயம் செய்து முதலாளித்துவ அரசியல் வாதிகளோடும் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களோடும் பல கலந்துரையாடல்களை மேற்கொண்டிருந்தார். புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களின் நிதி உதவியோடு வன்னியில் வாழும் மக்களுக்கு சிறு பொருள் உதவிகளையும் செய்து வருகின்றார்.

தமிழ் தேசியக் ௯ட்டமைப்பின் யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான சிறிதரன், ௯ட்டமைப்பின் தமிழ் இனவாத அரசியலை முழுமையாக பிரதிநிதித்துவப்படுத்துகின்றார். புலிகளைப் போலவே,ஆட்சியில் இருந்த கொழும்பு அரசாங்கங்கள் செய்த தமிழர்-விரோத நடவடிக்கைகளுக்கு ஒட்டு மொத்த சிங்கள மக்களையும் குற்றஞ்சாட்டிய அவர், தனது உரையொன்றில், “படுகொலை செய்யப்பட்ட தமிழருக்காக துளியேனும் இரங்காத சிங்களவர்களுடன் எவ்வாறு ஐக்கியப்பட்டு வாழ முடியும்? என்பதை இன்று ஒவ்வொரு தமிழனும் சிந்தித்துக் கொண்டிருக்கின்றான். உறவுகளை இழந்து எமது மக்கள் கண்ணீரில் கிடந்தபோது நீங்கள் பட்டாசு கொளுத்தி கொண்டாடினீர்கள்”  எனத் தெரிவித்தார்.

சிறிதரன் கூட்டமைப்பின் வேலைத்திட்டத்துடன் முரண்படாத போதிலும்,புலிகளின் பிரிவினைவாத வேலைத்திட்டத்தை நியாயப்படுத்துபவராவார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன், பாராளுமன்றத்தில் புலிகளை ஒரு “பயங்கரவாத இயக்கம்” என பிரகடனப்படுத்தி அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் இந்திய முதலாளித்துவத்திற்கு கூட்டமைப்பின் பகிரங்க அடிபணிவை தெளிவுபடுத்தியிருந்தார். அதற்கு மாறாக, டிசம்பர் 12ம் திகதி சிறிதரன், தனது பாராளுமன்ற உரையில், பிரபாகரன் நெல்சன் மண்டலா மற்றும் யாசிர் அரபாத்துக்கும் சமமான தலைவர் என்று குறிப்பிட்டதுடன் பிரபாகரன் கொல்லப்பட்டது விஞ்ஞான ரீதியாக இன்னும் நிருபிக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.

கடந்த நவம்பர் மாதம் 16ம் தேதி, 2013ம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்திற்கான அவரது பாராளுமன்றப் பேச்சில், இறுதி யுத்தம் நடைபெற்ற“முள்ளிவாய்க்கால் ஒரு முடிவல்ல அது ஓர் புதிய அத்தியாயத்தின் ஆரம்பமாகும். ஆயுதப் போராட்டம் சரியா? தவறா? என்பதில் இருந்து நாம் அரசியலை தொடங்க வேண்டியதில்லை. தமிழ் மக்களின் மறுக்கப்பட முடியாத உரிமைகளை ஏற்றுக்கொள்வதிலிருந்தே அரசியல் தொடங்கப்பட வேண்டும்”, என்றார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற அங்கத்தவரின் அலுவலகம் இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டு, அதன் அங்கத்தவர்கள் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டபோதும் அது தொடர்பாக அக்கட்சியின் சார்பில் எதுவிதமான உத்தியோகபூர்வ அறிக்கையும் இதுவரை வெளியிடப்படவில்லை. இது, தமிழ் தேசியக் கூட்டமைப்பு இராஜபக்ஷ அரசாங்கத்துடன் ஒரு சமரசத்தை எதிர்பார்க்கின்ற நிலையில்,கூட்டமைப்புக்குள் அடிநிலையில் காணப்படும் முரண்பாடுகளை சமிக்ஞை காட்டுகின்றது. எவ்வாறெனினும், அரசியல் கைதிகளை விசாரணை செய்ய வேண்டும் அல்லது விடுதலை செய்ய வேண்டும் எனக் கோருவதன் மூலம்,கைது செய்து தடுத்து வைத்திருப்பதற்கான சட்டபூர்வத் தன்மையை தமிழ் கூட்டமைப்பு ஏற்றுக்கொண்டுள்ளது.

வடக்கில் போலவே, நாடு பூராவும், சர்வதேச நாணய நிதியத்தின் கட்டளையின் படி அரசாங்கம் அமுல்படுத்துகின்ற சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக அமைதியின்மை வளர்ச்சியடைவதையிட்டு, கொழும்பு ஆளும் தட்டுக்கள் மட்டுமன்றி தமிழ் முதலாளித்துவத் தட்டுக்களும் அச்சம்கொண்டுள்ளன. தங்களின் பிரச்சினைகள் எதுவும் தீர்க்கப்படாத சூழ்நிலையில், தமிழ் கூட்டமைப்பு மீது மக்கள் மத்தியில் நம்பிக்கை சரிந்து வருகின்றது. இந்த நிலையில், சிறிதரனின் வாய்சவடால்களும் வெளிநாட்டு நிதிகளைக் கொண்டு அவர் செய்யும் சீர்திருத்த நடவடிக்கைகளும் இந்த அதிருப்தியை திசை திருப்புவதற்கும் தமிழ் இனவாதத்துக்கு முண்டு கொடுப்பதற்குமான முயற்சிகளாகும்.

சிறிதரன் மீதான வேட்டையாடலையும் மற்றும் தாக்குதல்கைளயும் சோசலிச சமத்துவக் கட்சி கண்டனம் செய்யும் அதேவேளை, கூட்டமைப்பின் அரசியலுக்கு இம்மியளவும் ஆதரவு வளங்கவில்லை. புலிகளின் முன்னாள் ஊதுகுழலான தமிழ் கூட்டமைப்பு, புலிகளின் தோல்வியின் பின்னர் கொழும்பு அரசியல் ஸ்தாபனத்தில் ஒரு இடத்தை தக்க வைத்துக்கொள்வதன் மூலம் தமிழ் முதலாளித்துவத் தட்டின் நலன்களை காத்துக்கொள்ள முயற்சிக்கின்றது. வடக்கு மற்றும் கிழக்கில் ஒரு அதிகாரப் பரவலாக்கல் ஒழுங்கை ஏற்படுத்திக்கொள்வதன் பேரில், ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் அரசாங்கத்துக்கு நெருக்குவாரம் கொடுப்பதற்காக  பெரும் வல்லரசுகள் மற்றும் இந்தியாவுக்கும் பின்னால் அணிதிரள்கின்றது. இதன் பாகமாக யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் இலங்கை இராணுவம் செய்த யுத்தக் குற்றங்கள் சம்பந்தமாக ஐக்கிய நாடுகள் சபையில் போர்குற்ற விசாரணை ஒன்றினை நடாத்துமாறு ஏகாதிபத்திய சக்திகளிடம் கோரிக்கை விடுத்து வருகின்றது.

2006 நடுப்பகுதியில் மீண்டும் யுத்தத்தை தொடங்கியதில் இருந்து புலிகள் தோல்வியடையும் வரையும் சர்வதேச சமூகம் என்றழைக்கப்படும் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான் போன்ற ஏகாதிபத்தியங்களும் இந்தியாவும் முழுமையாக இராஜபக்ஷ அரசாங்கத்தோடு ஒத்துழைத்திருந்ததுடன் ஜனநாயக உரிமை மீறல்களை காணததுபோல் இருந்தன. இப்போது இந்த சக்திகள் யுத்தக் குற்றங்கள் சம்பந்தமாக பேசுவது தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளைக் காப்பதில் உள்ள அக்கறையினால் அல்ல. மாறாக, சீனாவின் பக்கம் தகவமைவு கொள்ளமால் பெய்ஜிங்கிடம் இருந்து தூர விலகச் செய்வதற்காக இராஜபக்ஷ அரசாங்கத்துக்கு நெருக்குவாரம் கொடுப்பதே அந்த நாடுகளின் இலக்காகும். அமெரிக்க ஏகாதிபத்தியம் மத்திய ஆசியா, மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்காவில் இராணுவ ஆக்கிரமிப்புகளை முன்னெடுத்து மனிதப் படுகொலைகளை செய்து வருவதோடு, உள் நாட்டிலேயே சுதந்திரப் பிரகடனத்தின் அங்கங்களையும் ஜனநயாக உரிமைகளையும் அப்பட்டமாக மீறி வருகின்றது.

இந்தச் சக்திகளின் பின்னால் அணிதிரள்வதன் மூலம், தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளைக் காக்கவும் வாழ்க்கை நிலைமைகளை மேம்படுத்தவும் இராஜபக்ஷ அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்க முடியும் என்ற ஆபத்தான முன்னோக்கை தமிழ் கூட்டமைப்பு முன்னிலைப்படுத்துகின்றது. சிறிதரனின் அரசியல் நடவடிக்கைகள் இந்த பிற்போக்கை மூடி மறைக்கும் சக்தியாகும்.

இராஜபக்ஷ அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கும் ஜனநாயக உரிமை மீறல்களுக்கும் எதிராக வடக்கிலும் தெற்கிலும் போராட்டங்கள் அதிகரித்து வருகின்ற சூழ்நிலையில், அது மேலும் மேலும் பொலிஸ்-அரச வழிமுறைகளை நாடி வருகின்றது. இந்த நிலைமையில், தமிழ் இனவாதத்துக்கு தூபம் போடுவதானது சிங்கள மற்றும் தமிழ் தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியத்திற்கு குழி பறிக்கும் செயலாகும்.

உழைக்கும் மக்கள் தமிழ் கூட்டமைப்பின் இந்த முன்நோக்கை நிராகரிக்க வேண்டும். அடிப்படை ஜனநாயக உரிமைகளை பாதுகாக்கும் இயலுமை கொண்ட ஒரே சமூக சக்தி தொழிலாள வர்க்கம் மட்டுமே ஆகும். இனவாத யுத்தத்துக்கு எதிராகவும் ஜனநாயக உரிமை மீறல்களுக்கு எதிராகவும் சரசரமற்று சிங்களத் தமிழ் தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்த இடைவிடாது போராடி வந்துள்ள ஒரே கட்சி சோசலிச சமத்துவக் கட்சி மட்டுமேயாகும்.ஆகவே தழிழன் பற்றி உண்மை பேசுவோரும் அனிதிகளை தட்டிக்கேட்பவர்களும் அரசாங்கத்தால் துரத்தப்படுவது  நிட்சயம்.

SHARE