இருக்கை சண்டையால் பாதியில் தரையிறங்கிய அமெரிக்க விமானம்

396
அமெரிக்காவின் யுனைடட் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பயணிகள் விமானம் ஒன்று நெவார்க்கிலிருந்து டென்வர் நோக்கி பறந்துகொண்டிருந்தது. அப்போது எகானமி வகுப்பில் பயணித்துக்கொண்டிருந்த பெண் பயணி ஒருவர் சாய்வாக அமர்ந்துகொள்ளத் தோதாகத் தனது இருக்கையை சாய்வு நிலைக்கு மாற்றியுள்ளார். ஆனால் அவருக்கு நேர் பின்னால் அமர்ந்திருந்த ஆண் பயணி அதனை விரும்பவில்லை.

இதனால் தனக்கு வசதி குறைவாக இருக்கும் என்று கருதிய அவர் தனக்கு முன்னால் இருக்கும் சிறிய மேஜையில் தடை செய்யப்பட்டுள்ள முழங்கால் காக்கும் சிறிய கருவி ஒன்றை பொருத்தி அந்தப் பயணியின் இருக்கையைப் பின்புறம் சாய்க்கமுடியாமல் தடுத்துள்ளார். இதனால் கோபம் அடைந்த பெண் பயணி ஒரு கப் தண்ணீரை அந்த ஆண் பயணியின் முகத்தில் ஊற்றியுள்ளார்.

விமான ஊழியர் வந்து தடை செய்யப்பட்டுள்ள அந்தக் கருவியை நீக்கும்படிக் கேட்டுக்கொண்டும் அந்த பயணி மறுத்துவிட்டார். இதனால் விமானி விமானத்தைப் பாதியில் சிகாகோ நகரில் தரையிறக்கினார். பிரச்சினையில் ஈடுபட்ட இரண்டு பயணிகளும் விமானத்திலிருந்து இறக்கப்பட்டபின்னர் அந்த விமானம் தனது பயணத்தைத் தொடர்ந்துள்ளது. 48 வயது நிரம்பிய இரு பயணிகளையும் சிகாகோ காவல்துறையினரும், போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாக அதிகாரிகளும் விசாரணையிட்டபோதும் ஒருவரும் கைது செய்யப்படவில்லை என்று தகவல்கள் தெரிவித்தன.

இந்தப் பயணிகள் பயணம் செய்த எகானமி வகுப்பில்தான் மற்ற பிரிவினருக்கு இருப்பதைவிட இரு வரிசைகளுக்கு இடையிலான இடைவெளி நான்கு அங்குலம் அதிகம் இருப்பதாக இந்த நிறுவனம் விளம்பரப்படுத்துவது குறிப்பிடத்தக்கது.

SHARE