இறுதிக்கட்ட யுத்ததின் தோல்விக்கு மற்றும் ஒரு காரணம் பொட்டு அம்மான் – சூசை விரிசல்களே!

618

2002ம் ஆண்டு, புலிகளுக்கும், இலங்கை அரசுக்கும் இடையே சமாதான பேச்சுக்கள் தொடங்கிய நாள் முதல் முடியும் வரை புலிகளின் ஆயதக் கப்பல் ஆப்ரேசன் வெளிநாட்டில் இருந்து இயக்கி வைக்கப்பட்டது. கே.பி. என்று அறியப்படும் குமரன். பத்மநாதன் தலைமையில் முழு ஆப்ரேசனும் இயங்கியது.

fil31281

புலிகளின் அநேக வெற்றிகளின் பின்னணியில். இந்தக்கப்பல்களில் சென்று இறங்கிய ஆயுதங்கள்தான். ஆப்ரேசன் ஜெயசிக்குறு என்ற இலங்கை இராணுவ நடவடிக்கையில், புலிகள் வெற்றியடைந்த போது தளபதிகள் மத்தியில் பேசிய புலிகளின் தலைவர் பிரபாகரன், இந்த வெற்றியின் முக்கிய காரணமே, சரியான நேரத்தில் கே.பி அனுப்பிய ஆயுதக் கப்பல்தான் என்றார்.

2008 ஆம் ஆண்டு வரை, வெளிநாட்டில் ஆயுதங்கள் வாங்குவது முதல், அவற்றை கப்பல்களில் ஏற்றி இலங்கை கடற்படையின் கண்களில் மண்ணைத் தூவி, வெற்றிகரமாக அனுப்பி வைத்தவர்கள், கே.பி.யின் கீழ் இயங்கிய குரூப்

PodduAmman soosai_col
புலிகள் இயக்கத்தில் கே.பி டிபார்ட்மென்ட் என அறியப்பட்ட இவர்கள், இயங்கிய விதம் மிக தந்திரமானது. ஆயுதக்கப்பல்களின் நடமாட்டத்தை, உளவுத்துறைகள் ட்ராக் பண்ண முடியாதபடி நடத்தியதுதான்.

ஆயுதக்களுடன் கப்பல் ஒன்று வன்னிக்கு புறப்படுகின்றது என்றால், அந்த விடயங்களில் முற்று முழுதாக இரகசியம் காக்கப்படும். கப்பல் கிளம்பும் திகதி எது என்பதைக் கூட, வன்னியில் இருந்த புலிகளுக்கு அறிவிப்பதில்லை.

கப்பலில் ஆயுதங்கள் வரப்போகின்றன என்பது மட்டுமே வன்னியில் புலிகளின் முக்கிய தளபதிகள் சிலருக்கு தெரிந்திருக்கும் எந்த திகதியில் வந்து சேரும்? கப்பலின் பெயர் என்ன? போன்ற எந்த விபரங்களும், புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு கூட, கே.பி.யிடம் இருந்து கூறப்பட்டதில்லை. அந்தளவு இரகசிய ஆப்ரேசன் அதனால் தான், ஆயுதங்கள் அடிபடாமல் வந்து சேர்ந்தன.

ஆயுதங்களுடன் செல்லும் கப்பலுக்கும், வன்னியல் இருந்து புலிகளுக்கும் இடையே கொமினிகேசன் தொடர்புகள் கப்பல் நடுக்கடலில் செல்லும் போது, கப்பலின் கெப்டனுக்கும், தாய்லாந்தில் இருந்த கே.பி.க்கும் மட்டுமே தொடர்பு இருக்கும்.

கப்பல் இலங்கை கடல் பகுதிக்குள் சென்றவுடன் கெப்டன் தாய்லாந்தில் ஒரு நகரத்திலிருக்கும் கே.பி. க்கு அறிவிப்பார். கே.பி. மற்றொரு நகரத்துக்குச் சென்று, மற்றொரு போன் மூலம், வன்னியில் இருந்த குமாரவேலுக்கு அதை தெரியப்படுத்துவார். குமாரவேல் பிரபாகரனை நேரில் சந்தித்து விபரம் கூறுவார்.

அதன் பின் பிரபாகரன், கடல் புலிகளின் தளபதி சூசையை அழைத்து, கப்பல் விரைவில் வரும் என்று கூறி, கப்பலில் இருந்து ஆயுதங்களை இறக்க, கடல் புலிகளின் படகுகளை ஏற்பாடு செய்யச் சொல்வார். கடற்புலிகள் கப்பலுக்கு அருகே படகுகளில் செல்லும் போதுதான், வந்த கப்பலுக்கு என்ன பெயர்? என்ற விபரங்கூட தெரியவரும்.

இப்படி கே.பி.டிப்பார்மென்ட் குமாரவேல் பிரபாகரன் என்ற கொமினிக்கேசனால் தான், புலிகளின் வெற்றிகளின் பின்னணிக்கு காரணமாக இருந்த ஆயுதங்கள், வன்னி வரை வந்து சேர்ந்தன.

புலிகளின் இந்த ஆயுதக் கப்பல் ஆப்ரேசனைத்தான், கடற்புலிகள் பிரிவின் தளபதி சூசை தமது பிரிவின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவேண்டும் என்று விரும்பினார். கே.பி அனுப்பும் கப்பலை செலுத்திய மாலுமிகளில் அநேகர், கடற்புலிகள் பிரிவில் இருந்து கே.பி.யிடம் அனுப்பி வைக்கப்பட்டவர்களே.

புலிகளுக்கு சொந்தமான கப்பல்களின் ஆரம்பகால வர்த்தக நடவடிக்கைகளுக்கு புலிகள் இயக்கத்தைச் சேராத வெளி மாலுமிகள் பயன்படுத்தப்பட்டனர். அதன் பின் ஆயுதங்கள் ஏற்றி அனுப்பும் வேலைகள் அதிகரித்தன. இரகசியமான அந்த வேலைக்கு, வெளி ஆட்களை பயன்படுத்த விரும்பவில்லை கே.பி.

இது பற்றி புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் விவாதித்து, கப்பலுக்கான மாலுமிகளாக புலிகள் இயக்கத்தில் இருப்பவர்களை பயன்படுத்துவது என்ற முடிவு செய்யப்பட்டது. ஆழ்கடல் கப்பல் ஆப்ரேசனுக்கு தகுதியான நபர்களை இலங்கையில் புலிகள் இயக்கத்தில் இருந்து தேர்ந்தெடுத்து கே.பி.யிடம் அனுப்பி வைக்கும் நடைமுறை தொடங்கியது.

அப்படி அனுப்பி வைக்கப்பட்ட ஆட்களுக்கு, வெளிநாடுகளில் கே.பி.ஏற்பாடு செய்த இடங்களில் மாலுமி பயிற்சிகள் வழங்கப்பட்டன. கே.பி.யிடம் வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்ட புலிகளில், பல்வேறு பிரிவுகளை சேர்ந்தவர்களும் இருந்தாலும், கடற்புலிகள் பிரிவில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டவர்ளே அதிகம். இந்த ஆப்ரேசன் அதி இரகசியமானது. கப்பலில் ஏற்றப்பட்ட மாலுமிகள் இரகசியம் தெரிந்தவர்கள் என்பதால் (சில கெப்டன்கள் உட்பட) தரையிறங்க அனுமதிக்கப்படவில்லை.

ஆயுதக் கப்பல் இரகசியம் தெரிந்தவர்கள் சிலரை 5 வருடங்கள் வரை கப்பலில் இருந்து இறங்க கே.பி அனுமதிக்காத சம்பவங்கள் இருந்தன.

2004ம் ஆண்டு, புலிகளின் கெப்டன் ஒருவர், தரையிறங்க அனுமதி கோரினார். வன்னியில் கடற்புலிகளின் தளபதி சூசையிடம் பேசிய கே.பி. குறிப்பிட்ட கெப்டனை வன்னிப் பகுதிக்குள்ளேயே சகல வசதிகளுடனும் வைத்திருந்துவிட்டு, கப்பல் அடுத்த தடவை வரும்போது ஏற்றி விடுமாறு ஏற்பாடு செய்திருந்தார். கெப்டனும், சூசையின் பாதுகாப்பில் தரையில் இறக்கி விடப்பட்டார். குறிப்பிட்ட கெப்டனின் குடும்பம் அப்போது இந்தியாவில் வசித்தது.

ஆனால், அதன்பின் அவர் சூசையிடம் என்ன டீல் வைத்துக்கொண்டரோ. படகு ஒன்றில் ஏறி குடும்பத்தினரைப் பார்ப்பதற்கு இந்தியா சென்று விட்டார். அங்கே இந்திய உளவுத்துறை றோ.விடம் சிக்கிக் கொண்டார். அவர் மூலமாக, கே.பி. டிப்பார்ட்மென்டின் இரகசியங்கள் சில றோ.விடம் போய் சேர்ந்தன. அதன்பின் றோ என்ன செய்தது என்பதை, தொடரின் வேறு பகுதியில் தருகின்றோம்.

நாம் சொல்லவந்த விசயம் என்னவென்றால், புலிகளின் கப்பல் ஒன்று ஆயுதங்களுடன் வெற்றிகரமாக இலங்கை கரையை அடையும்போது, அதன் மாலுமிகள் 80 வீதமானோர், கடற்புலிகள் பிரிவில் இருந்து சென்றவர்களாக இருப்பார்கள். இந்த இடத்தில், ஈகோ யுத்தம் தொடங்கியது.

கடற்புலிகளின் தளபதி சூசையின் ஆட்கள், வெளிநாடு சென்றதும், கே.பி.டிப்பார்மென்ட் ஆட்களாக மாறினார்கள். இரகசியம் காக்கப்பட வேண்டிய ஆப்ரேசன் என்பதால், அவர்களது நடவடிக்கைகள் கடற்புலிகளுக்கு தெரியவராது.

திடீரென ஒரு நாள், புலிகளின் ஆயுதக் கப்பலை செலுத்தும் மாலுமிகளாக அவர்களை, ஆயுதங்களை இறக்குவதற்கு செல்லும் மற்றைய கடற்புலிகள் (அவர்களது பழைய சகாக்கள்) பார்ப்பார்கள். இந்தக் கதைகள் சூசை வரை செல்லும். கடல் புலிகளுக்குள் ஈசோ தலையெடுத்தது.

கடற் புலிகளின் திறமைசாலிகள் சிலர் கே.பி.டிப்பார்ட்மெண்டுக்கு போக விரும்புகிறோம். என்று பிரபாகரனுக்கு வேணண்டுகோள் கடிதங்களை அனுப்ப தொடங்க, பொரியாக இருந்த ஈகோ, தீயாக பற்றிக் கொண்டது.

இந்த விவகாரம் பெரிதாகவே, புலிகளின் தலைவர் பிரபாகரன் கண்டிப்பான உத்தரவு ஒன்றை பிறப்பித்தார். கரையில் நடப்பவை கப்பலில் உள்ள ஆட்களுக்கு தெரிய வேண்டியதில்லை. அதேபோல கப்பலில் நடப்பவை கரையில் உள்ள ஆட்களுக்கு தெரியவேண்டியதில்லை. என்பதே அந்த உத்தரவு. சில நாட்களுக்கு இந்த உத்தரவு நேர்த்தியாக கடைப்பிடிக்கப்பட்டது. நாளடைவில், மீண்டும் பழைய நிலைக்கே திரும்பிவிட்டது.

அதையடுத்தே, ஆயுதக் கப்பல் ஆப்ரேசனை தமது பிரிவின் வசம் எடுத்துக்கொள்ளும் முயற்சியில் இறங்கினார் கடற் புலிகளின் தளபதி சூசை அதற்காக சில உடனடி வேலைகள் வன்னியில் நடைபெற்றன. சூசையின் முயற்சி வெற்றி பெற்றது. 2002ம் ஆண்டு சமாதான காலத்தோடு, ஆயுதக் கப்பல் ஆப்ரேசன், கே.பி.டிப்பார்மென்டில் இருந்து கடற் புலிகளுக்குக் கைமாறியது. அதற்காக உள்ள வேலைகளின் பின் வரத் தொடங்கியதுதான், அடி-மேல்-அடி

வன்னியில் இறுதி யுத்தம் தொடங்கியபோது, புலிகளுக்கு ஆயுதங்கள் தேவைப்பட்டன. கடற்புலிகளால் இயக்கப்பட்ட ஆயுதக் கப்பல்கள் ஒவ்வொன்றாக வருவதும், நடுக்கடலில் அடி வாங்குவதுமாக இருந்தன.

போதிய ஆயுதங்கள் இல்லாமல், மன்னார் பகுதியில் இருந்து புலிகள் பின்வாங்கத் தொடங்கினர். அவசரமாக மேலதிக ஆயுதங்கள் வேண்டும் என்று யுத்த களமுனையில் இருந்து தளபதிகள் தகவல் மேல் தகவலாக பிரபாகரனுக்கு அனுப்ப, பிரபாகரன் சூசையிடம் சொல்ல, கடற் புலிகளின் ஒவ்வொரு கப்பலும், வெளிநாட்டிலிருந்து ஆயுதங்களை ஏற்றிக் கொண்டு புறப்பட்டன.

பாதி வழியில் சொல்லி வைத்தாற்போல இலங்கை கடற்படையால் தாக்கப்படும் கப்பல் எரிந்து போகும் மில்லியன் கணக்கான டொலர் பெறுமதியான ஆயுதங்கள் கடலடியே போய்ச் சேரும்.

யுத்த முனையில், மன்னாரில் துவங்கிய புலிகளின் பின்வாங்கல் (தந்திரோபாய பின்வாங்கல் என்றார்கள் சில புத்திசாலி ஆய்வாளர்கள்) மன்னார் மாவட்டத்தை முழுமையாக இழந்து, அடுத்து கிளிநொச்சி மாவட்டத்தையும் இழந்து, முல்லைத்தீவு மாவட்டத்தின் பகுதிகளையும் கைவிட்டு பின்வாங்கிக் கொண்டிருக்க………..
கடற்புலிகளின் கப்பல்கள், ஆயுதங்களுடன் கடலில் மூழ்கிக் கொண்டிருந்தன. ஒன்று …. இரண்டு…. மூன்று….. என்று தொடங்கி, பத்துக்கு மேற்பட்ட கப்பல்கள் கடலடியே போயின!

புலிகள் யுத்தத்தில் தோல்வியடைந்து பின்வாங்கிக் கொண்டிருக்க, வெளிநாட்டு தமிழர்களின் பல மில்லியன் டொலர் பணத்தில் வாங்கப்பட்ட ஆயுதங்கள், புலிகளின் கப்பலோடு கடல் அடியே புதைந்தன. அது மட்டுமல்ல, அத்துடன் 30 வருடகால ஆயுதப் போராட்டமும், கடல் அடியே போய்ச் சேர்ந்தது.

வன்னியின் பெரியநிலப் பகுதியை தமது அதிகாரத்தில் வைத்திருந்த புலிகள், கடற்புலிகளினால் இயக்கப்பட்ட இறுதி ஆயுதக் கப்பல் நடுக்கடலில் அடிபட்ட நேரத்தில், புதுக்குடியிருப்பு, முள்ளிவாய்க்கால், மற்றும் அதைச்சுற்றியுள்ள சிறிய பகுதிக்குள் புலிகள் வந்து சேர்ந்தனர்.

யுத்தத்தில் ஏற்பட்ட தொடர் தோல்விகள், புலிகளின் தளபதிகளுக்கிடையே புயலை ஏற்படுத்தியது அந்த நேரத்தில், ஆயுதங்கள் இல்லாத விவகாரம் பற்றி தளபதிகளுக்கு நன்றாகவே புரிந்திருந்தது.
புதுக்குடியிருப்பில் பிரபாகரனும், தளபதிகளும் கலந்து கொண்ட அவசர ஆலோசானைக் கூட்டத்தில் காரசார விமர்சனங்கள் தளபதிகளால் முன்வைக்கப்பட்டன.

கடற் புலிகளின் கப்பல் ஆபரேசன் காரணமாக ஏற்பட்ட நிலையே இந்த தொடர் தோல்விகள் என மிக காரசாரமாக, கடற்புலிகளின் தளபதி சூசையை விமர்சித்த தளபதி யார் தெரியுமா? புலிகளின் உளவுப் பிரிவின் தலைவர் பொட்டு அம்மான்.!

இந்த இடத்தில் தான், ஒரு திருப்பம் ஏற்படுகின்றது. ஆயுதங்களைக் கொண்டு வந்து சேர்க்க எங்களால் (கடல் புலிகள்) முடியாது என்றால் நீங்கள் அதை வெற்றிகரமாக செய்து காட்டலாமே என்று சவால் விட்டார் சூசை.

யுத்தம் இறுதிக்கட்டத்திற்கு வந்துவிட்ட நேரத்தில், இதற்கு அனுமதி கொடுத்தார் பிரபாகரன். அதையடுத்து, சோலோ முயற்சி ஒன்றில் இறங்கினார் உளவுப் பிரிவின் தலைவர் பொட்டு அம்மான்.

வெளிநாடுகளில் இயங்கிய புலிகளின் உளவுப் பிரிவின் ஆட்கள் களத்தில் இறங்கினர். அதுவரை நடந்த கடற் புலிகளின் தோல்வி கரமான கப்பல் ஆப்ரேசனுக்கு தலைகீழான் திட்டம் ஒன்றை செயல்படுத்தினார் பொட்டு அம்மான்.
அவரது ஆட்கள் வன்னிக்கு அனுப்புவதற்காக (உளவுப்பிரிவின் பாவனைக்கு) சில பொருட்களை வைத்திருந்தார்கள். அந்த பொருட்களை ஒரு கப்பல் மூலம் பத்திரமாக கொண்டு வந்து காட்டுவதே பொட்டு அம்மானின் திட்டம்.
உளவுப் பிரிவின் பொருட்களை ஏற்றுவதற்கு கார்கோ கப்பல் ஒன்றை பயன்படுத்தாமல். பெரிய மீன் பிடி கப்பல் ஒன்றை லீஸ் செய்தார்கள் அவரது ஆட்கள். அந்த மீன்படி கப்பலில் ஏற்றப்பட்டன பொருட்கள். கப்பலை செலுத்துவதற்கு கடல்புலிகள் மாலுமிகள் யாரையும் பயன்படுத்தாமல். இந்தோனேசியாவைச் சேர்ந்த மாலுமிகள் பணிக்கு அமர்த்தப்பட்டனர்.

இந்தோனேசியா மாலுமிகளுடன், பொட்டம்மானின் நம்பிக்கைக்குரிய, புலிகளின் உளவுப் பிரிவைச் சேர்ந்த ஒரேயொரு நபர் மட்டும் ஏறிக்கொண்டார்.

அடுத்து செய்ததுதான் அட்டகாச வேலை. கே.பி. வெற்றிகரமாக ஆயுதங்களை அனுப்பியபோது, தொலைத் தொடர்பில் ஜாக்கிரதையாக இருந்தார். என்பதை புரிந்து கொண்ட பொட்டு அம்மான், அதே பாணியை பின் பற்றினார். இந்தோனேசிய கப்பலில் ஏறிய உளவுப் பிரிவின் நபருக்கு, தம்முடன் தொடர்பு கொள்ள கூடாது என உத்தரவிட்டார். கப்பலில் இருப்பவர்கள் தொடர்பு கொள்வதற்கு, புலிகள் இருந்த வன்னி பகுதிக்கு வெளியே கொமினிகேஷன் சென்டர் ஒன்று அமைக்கப்பட்டது.

இந்த தொடர்பு மையம் எங்கே அமைக்கப்பட்டது தெரியுமா? கனடாவில்!
தொடர்பு சாதனங்கள் எவை தெரியுமா?20 சட்டர்லைட் செல் போன்கள்!
இரகசிய கப்பல் போக்குவரத்தில் யாராலும் ஊகிக்க முடியாத உத்தி அது! கனடாவில் இருந்த ஆப்ரேஷன் சென்டர் நபரிடம் 10 வௌ;வேறு இலக்கமுடைய சட்டர்லைட் செல்போன்கள் கொடுக்கப்பட்டன. கப்பலில் 10 சட்டர்லைட் செல்போன்கள் பொருத்தப்பட்டன.

ஒரே செல்போன் தொடர்ச்சியாக ஒரே இடத்துக்கு பேசவில்லை என்பதால், வெளிநாட்டு உளவுத்துறைகள் எதுவும். உடனடியாக இவர்களது தொடர்புகளை ட்ராக் டவுன் செய்யவில்லை. தவிர சில சமயங்களில் அதே செல்போன்களில் பேசியவர்கள், இந்தோனேசியா மாலுமிகள், அவர்கள் இந்தோனேசியாவில் உள்ள உறவினர்களுடன் பேசியது. ஜாவானீஸ் மொழியில் இந்தோனேசிய, மலேசிய ரோந்து படகுகளுடன் ரேடியோ தொடர்பு கொண்டது. பாஷh இன்டோனேசியன் மொழியில் (இது மலாய் மொழியின் சற்றே மாறிய வடிவம். மலேசிய கடற்படை அதிகாரிகள் புரிந்து கொள்வார்கள்
யாராலும் ஊகிக்க முடியாத கப்பல் ஆப்ரேஷன் அது. அதற்குள் இருந்தவைதான், வன்னியில் புலிகளுக்காக அனுப்பி வைக்கப்பட்ட இறுதி செட் பொருட்கள். பொட்டு அம்மானின் கப்பலுக்கும், அதில் ஏற்பட்ட பொருட்களுக்கும் என்ன நடந்தது? அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்.
உக்ரேனிலிருந்து விமானம் மூலம் ஆயுதமிறக்க பொட்டு அம்மான் முயற்சிகள் செய்தார். பொட்டு அம்மான் வன்னியிலிருந்து விசேடமாக யாரையும் அனுப்பவில்லை. ஏற்கனவே பிரான்சிலிருந்து வந்த ஒருவர் தான் பொட்டு அம்மானின் முதலாவது ஆயுத இறக்குமதி முகவராவார். இவர் வன்னியின் பொட்டு அம்மானின் புலனாய்வுப் பிரிவில் பணிபுரிந்தார். இவர் இலங்கையில் முக்கிய அரசியல் தலைவர் ஒருவரை கொல்லும் மனித வெணிகுண்டுத் தாக்குதலில் தொடர்பு உடையவர். அந்த தாக்குதலுக்காக பொட்டு அம்மானால் வன்னியிலிருந்து கொழும்புக்கு அனுப்பப்பட்டார். கொழும்பில் குண்டு வெடித்தது ஆனால், குறிப்பிட்ட அரசியல் வாதி கொல்லப்படவில்லை. காயத்துடன் தப்பிக்கொண்டார்.
அதனை அடுத்து இந்த நபரை பொட்டு அம்மான் வன்னிக்கு வருமாறு அழைத்தார். அவரோ சொல்லாமல் கொள்ளாமல் கொழும்பிலிருந்து வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றுவிட்டார். பிரான்சிலிருந்து அவர் பொட்டு அம்மானுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டார். மேற்கு ஆபிரிக்கா நாடான ஐவரிகோஸ்ட்(ஐஏழுசுஐஊழுளுவு) இருந்து ஆயுதம் இறக்கலாம் என்ற யோசனையை பொட்டு அம்மானுக்கு முன்வைத்தார். ஆயுதம் வாங்குவதற்கு ஐவரிகோஸ்ட் நாட்டை இவர் எப்படி தேர்ந்தெடுத்தார். ஐவரிகோஸ்ட் பிரஜைகள் பலர் பிரான்சில் வசித்து வந்தார்கள்.
அப்படி வசித்து வந்த ஒருவர் ஐவரிகோஸ்ட் இராணுவத் தளபதி ஒருவரின் உறவினர். அவர் தான் பொட்டு அம்மானின் பிரதிநிதியின் ஐவரிகோஸ்ட் தொடர்பாளராவார். பொதுவாகவே ஆபிரிக்க நாடுகளில் ஊழல் அதிகம். அரச அலுவலகங்களில் பணம் கொடுத்து பல காரியங்களை செய்யலாம். அதை ஏமாற்றுவர்களும் அதிகம் உண்டு. பொட்டு அம்மானின் முகவருக்கு கூறியதாவது. நீங்கள் நேரில் சென்றால் எமது உறவினர்கள் மூலம் சுலபமாக ஆயுதம் வாங்கலாம் என்று, இந்தக் கதை வன்னிக்குச் செல்ல தமது பிரதிநிதியை வன்னியிலிருந்து பிரான்சுக்கு அனுப்பி வைத்தார் பொட்டு அம்மான். அனுப்பிவைக்கப்பட்ட நபர் அதற்கு முன் வாழ்க்கையில் ஒரு தடவை கூட ஆயுதம் வாங்கிய அனுபவம் அற்றவர்.
இவர் எப்படி ஆயுதம் வாங்கப்போகிறார் என்று பொட்டு அம்மான் நம்பியது வியப்புக்குரிய விடயம் தான். காரணம் சுதந்திரம் பெற்று ஒரு வருடத்திற்கு இராணுவமே இல்லாமல் இயங்கியது. அதன் பின் பிரான்சின் உதவியுடன் இராணுவ அமைப்பை உருவாக்கிக்கொண்டது. இவர்களுடைய இராணுவ அமைப்பின் பெயர் குழுசுஊநு சுநுPருடீடுஐஞருநுளுவு குசுஐஊ என்பதே அவர்களின் ஆயுதப்படைகளின் பொதுப் பெயராகும். 2006 தொடக்கம் 2007 காலப்பகுதிகளில் ஐவரிக்கோஸட்டில் இருந்து ஆயுதங்கள் வருவதாக பொட்டு அம்மான் பிரபாகரனுக்கு சொல்லிக் கொண்டிருந்தார். சுமார் ஆறு மில்லியன் டொலர் பணம் முற்பணமாக கொடுத்ததாக பொட்டு அம்மான் கூறியிருந்தார.
இதே வேளை கடற்புலிகளின் தலைவர் சூசையின் படகுகள் ஆயுதங்களுடன் வந்து அடிபட்டு மூழ்கிக்கிடக்கும் நிலையில் இலங்கை இராணுவத்தினரின் தாக்குதலுக்கு உள்ளாகிய நிலையில் எப்படி ஐவரிகோஸ்ட்டில் இருந்து ஆயுதக்கப்பலை கொண்டு வரப்போகிறீர்கள் என பிரபாகரன் பொட்டு அம்மானிடம் கேட்டார். வந்து கொண்டிருக்கின்றது என்று பொட்டு அம்மான் கூறினார். 2009ம் ஆண்டு மே மாதம் முடியும் வரையிலும் ஐவரிகோஸ்ட் கப்பல் இலங்கைப் பகுதிக்கு வரவில்லை. மறுபடியும் பிரபாகரன் பொட்டு அம்மானிடம் கப்பல் வாங்கப் போனவர்கள் எங்கே? என்று கேட்டார். அதற்கு அவர் 100 ஆயுத நிலையங்கள் இருக்கிறது நிச்சயமாக கப்பல் ஏதோ ஒரு வகையில் வந்து சேரும் என்று பொட்டு அம்மான் குறிப்பிட்டிருந்தார்.
இருந்த போதிலும் ஆயுதக்கப்பல் வந்தபாடில்லை. ஏற்கனவே வந்த புலிகளின் ஆயுதக்கப்பல் பல சிறிலங்கா கடற்படையினரால் தாக்கி மூழ்கடிக்கப்பட்டன. இவை இவ்வாறிருக்க பொட்டு அம்மான் அனுப்பிதாகக் கூறப்படும் ஆயுதக்கப்பல் பிரபாகரனுக்கு ஏற்ற தருணத்தில் கைவசம் கிடைக்காமல் போனது இதனால் பொட்டு அம்மானுக்கும் சூசைக்கும் இடையில் விரிசல்கள் ஏற்பட்டன. இதன் காரணமாக பொட்டு அம்மான் ஆயுதக்கப்பலுக்கு சூசை சரியாக பாதுகாப்பு கொடுக்க தவறிவிட்டதாக பொட்டு அம்மான் பிரபாகரனிடம் முறைப்பாடு செய்திருந்தார். இதன் போது கடற்புலிகளின் தலைவரான சூசையைங பிரபாகரன் அழைத்து நேரடியாக விசாரணைகளை மேற்கொண்டார்.
கடற்புலிகளின் சாதனைகள் பல்வேறு பரிமாணங்களில் சூசையின் நெறிப்படுத்தலில் திறம்படவே நடைபெற்றது. 2000 ஆண்டு காலப்பகுதிகளில் விடுதலைப்புலிகளுக்கு தேவையான ஆயுதங்கள் ஏனைய தளபாடங்கள் அனைத்தையும் சூசை சிறந்த முறையில் வெளிநாடுகளிலிருந்து பெற்றுக் கொடுத்தார். ஆனால் விடுதலைப்புலிகளின் புலனாய்வு அமைப்பிற்கு பொறுப்பாயிருந்த பொட்டு அம்மான் கடற்புலிகள் சூசையையும் அவதானிக்கத் தொடங்கினார். ஆயுதக்கொள்வனவு தொடர்பில் பொட்டு அம்மானுக்கும் சூசைக்கும் பல தர்க்கங்கள் ஏற்பட்டன.
இதனொரு கட்டமாக 2002 , 2003 ஆண்டு காலப்பகுதியில் கிளிநொச்சி திருவையாற்றில் வைத்து சூசையை குறுக்கு விசாரணை செய்தார் பொட்டு அம்மான்.அதில் கேட்கப்பட்ட பல கேள்விகள் சூசைக்கு வியப்பை ஏற்படுத்தியது. கடற்புலிகளின் பொறுப்பை தான் முன்நின்று செய்வது போல் பொட்டு அம்மானின் கேள்விகள் அமைந்திருந்தன. பொட்டம்மானின் கேள்விகளுக்குப் பிறகு சூசைக்கு வந்த பல ஆயுதக்கப்பல்கள் கடலில் வைத்து அடிஉதை வாங்கின.
குறிப்பாக சொல்லப்போனால் விடுதலைப்புலிகளின் ஆயுதக்கப்பல்கள் உக்ரைன் நாட்டிலிருந்து வந்தபொழுது கல்முனை கடலில் வைத்து தாக்குதலுக்குள்ளானது. ஏற்கனேவே பொட்டு அம்மான் ஆயுதங்கள் வாங்க அனுப்பியவர்கள் இலங்கையின் புலனாய்வு பிரிவுடன் தொடர்பு வைத்திருந்தமை பொட்டு அம்மானுக்கு தெரியாமல் போனது. ஆனால் தன்னுடைய பலவீனத்தை அறியாது பொட்டு அம்மான் ஏனைய தளபதிகளையும் போராளிகளையும் மட்டப்படுத்திக்கொண்டே வந்தார்.
இங்கொரு விடயத்தை குறிப்பிட்டாக வேண்டும். விடுதலைப்புலிகளின் அப்போதிருந்த இராணுவத்தளபதி கருணா அம்மான் பிரிவதற்கும் பொட்டு அம்மானே காரணமாகும். மற்றுமொரு பாரிய தாக்குதலுக்கான வழிவகைகளை அமைத்துக்கொண்டிருந்த சூசையின் படகுகள் அடுத்தடுத்து கடலில் அடிபட்டு வந்தமையை வைத்து பொட்டு அம்மான் பிழையான முடிவுகளை எடுக்கத்தொடங்கினார். தனது கண்காணிப்பின் கீழ் இனி ஆயுதக்கொள்வனவுகளை செய்யலாம் என்ற முடிவுக்கு வந்தார்.
எவ்வாறான முடிவுகளை பொட்டு அம்மான் மேற்கொண்டாலும் விடுதலைப்புலிகளின் ஆயுத விநியோகங்கள் சரியான முறையில் 2004 ஆம் ஆண்டுக்குப் பின் நடைபெறவில்லை. பொட்டு அம்மான் ஆயுதங்கள் கொள்வனவு உக்ரைன் நாட்டு வியாபாரிகள் பொட்டு அம்மானை ஆரம்பம் நேரம் தொட்டு ஏமாற்றத்தொடங்கினர். பொட்டு அம்மானின் புலனாய்வுக்கட்டமைப்பு அவர் நினைத்தபடி நடைபெறவில்லை. வெளிநாட்டிலுள்ள பொட்டு அம்மானின் புலனாய்வு பிரிவினரை பெரிதும் நம்பினார். ஆனால் சூசையின் நெறிப்படுத்தலில் அதற்கு முன் வந்த ஆயுதப்பொருட்கள் எந்தவித சேதமுமின்றி விடுதலைப்புலிகளின் பக்கம் வந்து சேர்ந்தன. இக்கப்பல்கள் விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினரான கே.பி.யின் தலைமையில் வந்திறங்கின.

அப்போது சூசைக்கும் கே.பி.யின் ஆட்களுக்கும் நல்லதொரு தொடர்பாடல் இருந்து வந்தது. பொட்டு அம்மானின் புலனாய்வு கட்டமைப்பை சர்வதேசமே உற்று நோக்கியது. எவ்வாறு விடுதலைப்புலிகளின் புலனாய்வுக் கட்டமைப்பு இயங்குகின்றது. இவர்களது செயற்பாடுகள் எப்படி கடல் வான் தரை படைகளில் எவ்வாறு முன்னேற்றமடைந்தார்கள் என்பது உள்ளடங்கலாக கண்காணிக்கப்பட்டது. ஆக மொத்தத்தில் சூசையின் நடவடிக்கைகள் சர்வதேச மட்டத்தில் பெரிதுமட் சவாலாக அமையவில்லை. அந்த காரணத்தால் சூசை வெளிநாடுகளிலிருந்து ஆயுதக்கொள்வனவு செய்தமை பெரிதாக பிடிபடும் அளவிற்கு அமையவில்லை.

ஆனால் பொட்டு அம்மானின் தலைமையில் ஆயுதக்கொள்வனவுகள் வெளிநாடுகளில் இடம்பெற்றால் அதனுடைய இரகசியங்கள் ஏதோ ஒரு வகைளில் கசியத்தொடங்கி இரு தரப்பினருக்கும் தெரியவந்து பொட்டு அம்மானால் அனுப்பப்பட்ட கப்பல்களும் மாட்டிக்கொள்ளும் நிலைமைக்கு தள்ளப்பட்டது.

இச்செயற்பாடுகளை எமது போராளிகளுக்குள் இருப்பவர்களே காட்டிக்கொடுக்கின்றார்கள். என்று பொட்டு அம்மான் நினைத்து சிலரை சிறையில் அடைத்தார். ஒரு சிலரை கொன்றும் விட்டார். இவ்வாறான சூழ் நிலையில் கடற்புலிகளின் சூசையின் தாக்குதல்கள் கடலில் இடம்பெற்ற பொழுதிலும் இறுதிநேரத்தில் தோல்வியாகவே முடிவடைந்தது. ஆனால் பிரபாகரன் பொட்டு அம்மானைன இறுதிவரை நம்பினார். சூசையினுடைய நிலைப்பாடுகளும் பொட்டு அம்மானுடைய நிலைப்பாடுகளும் முறுகல் நிலையை அடைந்தன.

அதன் பிற்பாடு எந்தவொரு இராணுவ நடவடிக்கைகளும் கடலில் செய்வதாயின் பொட்டு அம்மானிடம் அனுமதி எடுக்குமளவிற்கு சூசை தள்ளப்பட்டார். இதனால் சூசைக்கு மனத்திருப்தியுடன் போராட்டத்தை மேற்கொள்ள முடியாமல் இருந்தது. இதனால் சூசையுடன் இருந்த சக போராளிகளுக்கும் மனம் சோர்ந்து காணப்பட்டனர். அதன் பிறகு இராணுவத்தினருடனான கடற்சமர்கள் தோல்வியில் முடிவடைந்தன.

இதற்கான காரணத்தை பார்க்கின்ற பொழுது சூசையின் கட்டுப்பாட்டில் அவரது நெறிப்படுத்தலின் கீழ் ஆயுதக்கப்பல்கள் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிற்கு வந்தன. ஆனால் பொட்டு அம்மான் தலையிட்டதற்குப் பின்னர் அவ்வாறான ஒரு சூழ்நிலை காணப்படவில்லை. இதனை உங்களுடைய பிரிவில் ஏதும் பின்னடைவுகள் இருக்கின்றதா என பொட்டு அம்மான் சூசையைக் கேட்டார். எங்களை எந்தவித தடைகளுமின்றி சுதந்திரமாக கடற்சமரை செய்யவிடுங்கள் என்று ஆவேசத்துடன் கூறினார். சூசை, இவ்வாறு இருவருக்கும் இடையில் கடும் விவாதம் இடம்பெற்றது. இதன் போது இருவரையும் பிரபாகரன் அவசர அவசரமாக புதுக்குடியிருப்பில் அமைந்துள்ள பிரபாகரனின் இரகசிய இடத்திற்கு அழைத்திருந்தார்;. அவரது இடத்திற்கு வந்திருந்த இருவரிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணையின் போது பொட்டு அம்மான் சூசை பற்றியதான அறிக்கையொன்றினை சமர்ப்பித்தார். இதன் பிரகாரம் தளபதி சூசை தனியாக விசாரிக்கப்பட்டார். இந்த விசாரணை நடைபெற்றுக்கொண்டிருந்த சமயம் ஸ்ரீலங்கா இராணுவத்தின் 57ம் டிவிசன், 52ம் டிவிசன், 56ம் டிவிசன் வன்னியில் கடுமையான தாக்குதலை நாலாபுறமும் மேற்கொண்டன. சூசை அவர்கள் பிரபாகரனிடம் தெரிவித்த விடயமாவது எமது கடற்பிராந்தியத்தில் நாம் இதுவரை காலமும் திறம்பட இராணுவ நடவடிக்கைகளை நடத்தி வந்தோம் ஆனால் பொட்டம்மான் என்று மூக்கை நுழைத்தாரோ அன்றிலிருந்து எமது பிராந்தியத்திற்கு வந்த ஆயுத கப்பல்கள் மூழ்கடிக்கப்பட்டன. இதற்கு காரணம் பொட்டம்மானே என்றார்.

உக்கிரேன் நாட்டில் 2004ல் ஆயுத கொள்வனவு செய்து இலங்கை கடப்பரப்பில் பொட்டு அம்மான் மூக்கை நுழைத்தார். அதனை தொடர்ந்து முல்லைத்தீவில் எமது கப்பல் ஸ்ரீலங்கா விமானப்படையால் தாக்குதலுக்குள்ளாகியது. இதனால் கடற்படையின் வளங்கள் பிரிவானது பாதிக்கப்பட்டது. பொட்டு அம்மானைப் பொறுத்தவரை நான் தான் தமிழீழத்திற்கு துரோகம் இழைக்கின்றேன் என தீர்மானித்தாரோ என்னவோ, நான் என்றும் தமிழீழ போராட்ட உணர்வேடு செயற்படுகின்றேன். மன்னார் கடற்பரப்பில் வைத்து எமது ஆயுதக்கப்பல் ஒன்றும் தாக்கியழிக்கப்பட்டது. இதற்கும் ஒரு வகையில் காரணம் பொட்டு அம்மான் தான் என்று தன்னுடைய பக்கத்தில் உள்ளவற்றை பிரபாகரனுக்கு எடுத்து விளக்கினார். ஆனால் பிரபாகரன் முழுமையாக ஏற்றுக்கொள்வதாக இல்லை. இந்நிலையில் கடற்பிராந்தியத்தில் 60 சத வீதம் இராணுவத்தின் பக்கமே இருந்தது.

இதனை எவ்வாறு தாக்குவதென்று வியூகம் அமைத்து இருக்கையில் கடற்புலிகளின் வளங்கள் சரியாக கிடைக்காமையால் தோல்வியே கிடைத்தது.
பொட்டம்மானினி ஆயுதக் கொள்வனவு சர்வதேச நாடுகளில் பலகோடி செலவை ஏற்படுத்தியிருந்தாலும் கடற்புலிகளுக்கு ஆயுதம் சரியான முறையில் வந்து சேரவில்லை. பொட்டு அம்மான் உக்கிரேன் நாட்டிலிருந்து ஆயுதம் கொள்வனவு செய்ய திட்டமிட்டிருந்தார்.
ஏற்கனவே பொட்டு அம்மான் உக்கிரேன் நாட்டு வியாபாரிகளிடம் பணம் கொடுத்து ஏமாந்தது தெரியவந்தும் பொட்டு அம்மானை முழுமையாக நம்பியிருந்தார் பிரபாகரன் அதனொரு கட்டமாக மூங்கிலாற்றில் நடந்த சண்டையின் போது பொட்டு அம்மான் தலைமையிலான அணி முழுமையான வெற்றியும் கண்டது. இதன் போது 1500க்கு மேற்பட்ட இராணுவத்தினர் கொல்லப்பட்டபோது இராணுவத்தின் நகர்வு திருப்பப்பட்டு விடுமென நம்பியிருந்தனர்.

மீண்டும் அவசரமாக வரவழைக்கப்பட்டு அவசரமாக அடுத்த தாக்குதலுக்கு திட்டம் தீட்டப்பட்டபோதும் அதற்கான ஆயுதமின்றி இருந்த ஆயுதத்தைக் கொண்டு சண்டை புரிந்தனர். பல தளபதிகள் தப்பி செல்லவும், எடிம்புரோ தலைமையிலான கடற்புலிகள் வழியமைத்துக் கொடுத்தனர். இது தொடர்பாக எடிம்புரோ வெளிக்கடை சிறைச்சாலையில் பற்றி விபரிக்கையில் இறுதி யுத்தத்தின் போது எமது கடற்படை 12 பிரிவுகளாக பிரிக்கப்பட்டன. இதில் நான் 7வது தொகுதி, எனது படகில் 7 போராளிகள் இருந்தனர்.
எமது விசைப்படகு பொக்கனை பகுதியிலிருந்து 25 கடல்மைல் தொலைவில் இராணுவத்துடன் சண்டை செய்து விட்டு சக போராளிகள் தப்பிச் செல்ல வழியமைத்துக் கொடுத்துவிட்டு மீண்டும் பொக்கனை திரும்பினோம் இதில் எமது விசைப்படகில் இருவர் காயமடைந்தனர். இச்சமரானது சூசையின் நேரடி கட்டளையின் கீழ் நடைபெற்றது. இது முடிவடைந்து கரையில் நின்ற போது பொட்டு அம்மானின் பிரிவினர் எம்மை குறிப்பிட்ட இடத்திற்கு வருமாறு அழைத்தனர். இதற்கமைய நானும் சகபோராளிகளும் அங்கு சென்றிருந்தோம். அதன் பின்னர் சூசையுடன் இணைந்து கொள்ள எம்மை அனுப்பவில்லை. இதே சமயம் நானும் என்னுடன் இருந்த ஒரு சில போராளிகளும் இங்கு என்னதான் நடக்கின்றதென்று நாம் ஒருவருக்குள்ளேயே பேசிக்கொண்டோம். ஆனால் சூசை எமக்கு கூறிய விடயம் என்னவென்றால் நீங்கள் போய் இன்னும் தளபதிகள் யாரும் எஞ்சியிருந்தால் அழைத்து வாருங்கள். அவர்களையும் நாம் எங்காவது தப்பிப்போக வழியமைத்து கொடுப்போம். நிலைமை வர வர மோசடைகிறது என்று கூறியே எம்மை போகும் படி கூறினார்.
எம்மோடு 12 பிரிவுகளாக பிரிக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்று தெரியாது. எங்கு போனார்கள் என்றும் தெரியாது. எம்மிடம் கடைசி நேரத்தின் யுத்தத்தின் போது போதிய வெடிபொருட்கள் இருக்கவில்லை. இருந்தவற்றைக் கொண்டே நாம் இராணுவ நிலைகள் மீது தாக்குதல்களை தொடுத்து வந்தோம். இருந்தபோதிலும் சிறிலங்காவின் 52, 56 டிவிசன்கள் எம்மீது தொடர்ந்து தாக்குதலை தொடர்ந்த வண்ணம் முன்னேறிக்கொண்டிருந்தது. தொலைத்தொடர்பு மூலம் சூசை அவர்கள் எம்முடன் தொடர்புகொண்டு என்னையும் எங்களோடு வந்த சக போராளிகளையும் அழைத்துக் கொண்டு வரும்படி கூறினார். என்னையும் என்னுடன் இருந்த நான்கு போராளிகளையும் பொட்டு அம்மான் விடுவதாய் இல்லை.
இதன் போது பொட்டு அம்மான் அவர்கள் எம்மிடம் ஒரு தொகுதி ஆயுதங்களையும், தற்கொலை தாக்குதல் அங்கிகளையும், வெடிமருந்துகள் ஒரு சிலவற்றையும் ஒப்படைத்து முள்ளிவாய்க்கால் பகுதிக்கு நாம் ஊடறுப்பு ஒன்றை நடத்தவிருக்கின்றோம். ஆகவே எமது அணிக்கான பாதுகாப்பை நீங்களே வழங்க வேண்டும் என்று பணிக்கப்பட்டோம். எனக்கு கொடுக்கப்பட்ட ஒரு தொகுதியினர் கடற் சண்டைக்களத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்கள். மறு நாள் காலை எமக்கும் சூசைக்கும் இடையிலான தொடர்பு துண்டிக்கப்பட்டது. எம்மோடு மற்றுமொரு தொகுதியினர் இணைந்து கொண்டனர். இவர்களின் முகம் கருத்த துணியினால் கட்டப்பட்டு இரு கண்கள் மட்டுமே வெளியில் தெரிந்தவாறு காணப்பட்டது. அந்த அணியிலிருந்த 150 பேரும் பி.கே, ஏ.கே 47, வெடிபொருட்கள், நவீன கண்ணிவெடிகள் சகிதம் முள்ளிவாய்க்கால் பகுதியை நோக்கி நகரத்தொடங்கியது. பிரபாகரனை காப்பாற்றும் நோக்கோடு பொட்டு அம்மான் சூசையிடம் தங்களது கடற்தளங்களை தயாராக வைத்துக்கொள்ளுங்கள் என்று கூறினார். இதன் போது நான் சூசை அண்ணனிடம் தொடர்பு கொள்ள வேண்டும் பேசத் தாருங்கள் என்று கேட்டேன். இதன் போது பொட்டு அம்மான் மறுத்துவிட்டார்.
சூசை பாதுகாப்பாகத்தான் இருக்கிறார். நீங்கள் கவலைப்படத்தேவையில்லை. அண்ணனை பாதுகாக்கும் பணி உங்களுக்கு ஒப்படைக்கப்பட்டிருக்கின்றது. இந்த அணைக்கட்டை உடைத்தால் இராணுவம் எம்மை கொன்றொழிக்கும் அதற்கிடையில் நாமும் எமது தலைவர் பிரபாகரனும் எப்படியாவது தப்பி வேறு இடத்திற்குச் செல்லவேண்டும், அதாவது இந்திய நாடான கேரள மாநிலத்திற்கே அதற்கான வியூகங்கள் அப்போது அமைக்கப்பட்டிருந்தன. இதற்கிடையில் இந்தியாவிலிருந்து 15 கிலோ மீற்றர் தொலைவில் நீர் முழ்கிக்கப்பல் 3 நிற்பதாகவும் இந்த நீர் மூழ்கிக்கப்பல் இருக்கும் இடத்திற்கு நாம் செல்வதாயின் 450 போராளிகளை இழந்தே எமது தலைவரை காப்பாற்ற வேண்டும் என்று நான் நம்புகிறேன் என்றார் பொட்டு அம்மான். இதன் போது முல்லைக்கடலில் சூசையினருக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் கடும் சமர் இடம்பெற்றுக்கொண்டிருந்தது. எம்மோடு இருந்த போராளிகளில் 3 பேருக்கு தற்கொலை தாக்குதல் அங்கிகள் கொடுக்கப்பட்டது. நான் அதில் ஒரு தற்கொலை குண்டுக் கவசத்தை எடுத்துக்கொண்டேன்.
எமது முள்ளிவாய்க்கால் பிரதேசத்திலிருந்த இறுதி அணையும் 17.05.2009 அன்று இராணுவத்தால் உடைக்கப்பட்டது. இதன் போது பொதுமக்கள் ஒரு புறமாக ஓடினார்கள். விடுதலைப்புலிகளின் தளபதிகள் வௌ;வேறாக பிரிந்து சென்றார்கள். கடைசியில் எங்கு போனார்கள் என்று எனக்கே தெரியாது. நான் என்னிடமிருந்த கடைசி ரவை முடியும் வரை சண்டை செய்தேன். அதன் பின் இராணுவத்தினரிடம் நானும் எனது குழுக்கழுமாக சரணடைந்தோம்.
ஆனாலும் முள்ளிவாய்க்கால் பகுதியில் விடுதலைப்புலிகள் நிரப்பிவைத்திருந்த குண்டுகள் எல்லாமே வெடிக்கத்தொடங்கியன. முள்ளிவாய்க்காள் பகுதியே புகை மண்டலமாக காட்சியளித்தது. இதன் போது பிரபாகரனை காப்பாற்ற கடைசியாக நின்ற 450 இம்ரான் பாண்டியன் படையணிக்கு என்ன நடந்தது என்று தெரியாது. 19.05.2009 அன்று யுத்தம் முடிவுக்கு வரப்பட்டது. பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டார். என இலங்கை அரசாங்கம் அறிவித்தது. பொட்டம்மான், சூசை, பிரபாகரன் மூவருக்கும் என்ன நடந்தது என்று தெரியாது. உண்மையில் அன்று பொட்டு அம்மான் அழைத்திருக்காவிட்டால் நாம் எங்காவது தப்பிச்சென்றிருப்போம்.
இதற்கெல்லாம் முக்கிய காரணம் பொட்டு அம்மானே. நாமும் எமது படையணியும் கடல் வழி மார்க்கமாக பல போராளிகளை தப்பிச்செல்ல வழியமைத்துக் கொடுத்தோம். பிரபாகரன் அந்த நேரத்தில் நோர்வே அரசாங்கத்தையும், கே.பி யையும் நம்பியிருந்தார். பிரபாகரனை ஏற்றிச்செல்ல விசேட விமானம் வரும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எதுவும் வரவில்லை. நானும், ஒரு சில போராளிகளும் தடுப்பு முகாம்களுக்கு கொண்டு செல்லப்பட்டோம். கடைசியாக எம்மிடம் இருந்த 22 விசைப்படகுகள் வெடித்துச்சிதறியது. இதன்போது பிரபாகரனோ, சூசையோ, பொட்டு அம்மானோ தப்பிச்சென்றிருக்க வாய்ப்புக்கள் இருந்தன. ஆனால் அது உண்மை என இருவரைக்கும் கூறமுடியாதுள்ளது.
இதில் ஒரு விடயத்தை குறிப்பிடாக வேண்டும் ஆரம்பக்கட்டத்தில் ஆயுதக்கொள்வனவிலிருந்து பொட்டு அம்மானுக்கும் சூசைக்கும் ஏற்பட்ட பிரிவே கடைசிநேர சமரை கோட்டை விடநேர்ந்தது எனலாம்.
முற்றும்
இரணியன்

SHARE