இலங்கைத் தமிழர்களுக்கு சுயாட்சி பெற்றுத்தரும் நோக்கத்துடன் “தமிழரசு கட்சி” யை செல்வநாயகம் தொடங்கினார்

310


இலங்கைத் தமிழர்களுக்கு சுயாட்சி பெற்றுத்தரும் நோக்கத்துடன் “தமிழரசு கட்சி” யை செல்வநாயகம் தொடங்கினார்.அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த ஜி.ஜி.பொன்னம்பலம், பிரதமர் சேனநாயகாவின் அழைப்பை ஏற்று மந்திரியாகி விட்டதால், கட்சி இரண்டாக உடைந்தது. கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவராக விளங்கிய எஸ்.ஜே.வி.செல்வநாயகம், தன் ஆதரவாளர்களுடன் சேர்ந்து புதிய கட்சி தொடங்க முடிவு செய்தார். federalparty-228x264வழக்கறிஞர்

செல்வநாயகத்தின் முழுப்பெயர் சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம். இவர் 1898 மார்ச் 31 -ந்தேதி, மலாயாவில் உள்ள ஈப்போ நகரில் பிறந்தார். பிராடஸ்டன்ட் கிறிஸ்துவர். இளம் வயதிலேயே இலங்கையில் குடியேறி, தெல்லிப்பளை என்ற கிராமத்தில் ஆரம்பக் கல்வி பயின்றார். பின்னர் யாழ்ப்பாணம் செயின்ட் ஜோன்ஸ் கல்லூரியில் சேர்ந்து கல்வி பயின்றார். பிறகு அதே கல்லூரியில் ஆசிரியராக வேலை பார்த்தார். பின்னர் சட்டம் பயின்று வழக்கறிஞர் ஆனார். பிற்காலத்தில் பிரதமரான ரணில் விக்கிரமசிங்கேயின் தந்தை ஈஸ்மன்ட் விக்கிரமசிங்கே, பிரதம நீதிபதியான நெவில் சமரக்கோன் உள்பட பல முக்கிய புள்ளிகள் இவரிடம் ஜூனியர்களாகப் பணியாற்றினார்கள். பிரிட்டிஷ் ராணியின் வழக்கறிஞர் என்றும் புகழ் பெற்றவர், செல்வநாயகம்.நீதி நேர்மை, தூய வாழ்க்கை முதலான உயர் பண்புகளைக் கொண்டிருந்த இவரை, அரசியலுக்கு வருமாறு பொன்னம்பலம் அழைத்தார். 1945 -ம் ஆண்டிலேயே வழக்கறிஞர் தொழிலில் மாதம் 10 ஆயிரம் ரூபாய் சம்பாதித்தார் செல்வா. அரசியலில் நுழைந்து பணம் சம்பாதித்தவர்களுக்கு மத்தியில், கட்சிக்காக தன் பணத்தை செலவிட்டவர் இவர். இதனால், இறுதிக் காலத்தில் பொருளாதார ரீதியில் சிரமப்பட்டார்.தமிழரசு கட்சி

செல்வநாயகத்தின் “தமிழரசு கட்சி”யின் (ஆங்கிலத்தில் “பெடரல் கட்சி) தொடக்கக் கூட்டம், 1949 -ம் ஆண்டு ஜனவரி இரண்டாவது வாரத்தில் கொள்ளுப்பட்டியில் உள்ள அவர் வீட்டில் நடந்தது. தமிழர்களுக்கு மாநில சுயாட்சி பெற்றுத்தருவதற்கு தமிழரசு கட்சி போராடும் என்று அவர் அறிவித்தார். தன் கட்சியின் நோக்கங்களை விளக்க, பல்வேறு இடங்களில் நடந்த கூட்டங்களில் செல்வநாயகம் பேசினார். இந்தக் கூட்டங்களில் நட்சத்திர பேச்சாளராக அமிர்தலிங்கம் (செல்வநாயகம் மறைவுக்கு பின்னர் இலங்கைத் தமிழர்களின் தலைவராக விளங்கியர்) அறிமுகப்படுத்தப்பட்டார். கட்சி பணிகளில் வன்னிய சிங்கம் முக்கியப் பங்கெடுத்துக் கொண்டார்.கண்துடைப்பு மசோதா

இதற்கிடையே, பொன்னம்பலத்துக்கு கொடுத்த வாக்குறுதிக்காக பிரஜா உரிமை சட்டத்தில் திருத்தங்கள் செய்யும் ஒரு மசோதாவை, பாராளுமன்றத்தில் பிரதமர் சேனநாயகா கொண்டு வந்தார். இது வெறும் கண் துடைப்பாகவே நடந்தது. “பிரஜா உரிமை பெறாதவர்கள் அந்த உரிமையைப் பெற, திருமணம் ஆனவராக இருந்தால் இலங்கையில் தொடர்ந்து 7 ஆண்டுகள் வசித்திருக்க வேண்டும். திருமணம் ஆகாதவராக இருந்தால், 10 ஆண்டுகள் வசித்திருக்க வேண்டும்” என்று இந்த திருத்தங்களில் கூறப்பட்டிருந்தது. தன்னுடைய பாட்டன், முப்பாட்டன் எல்லாம் இலங்கையில் வசித்தவர்கள் என்பதற்கெல்லாம் ஆதாரங்கள் காட்டவேண்டியிருந்தது.பாராளுமன்றத்தில் இந்த திருத்தத்தின் மீது விவாதம் நடைபெற்ற பொது, செல்வநாயகம் அதை கடுமையாக எதிர்த்தார். “பிரஜா உரிமையை இழந்தவர்கள் அதை பெறுவதற்கு உதவும் வகையில் திருத்த மசோதா அமைய வேண்டும். இப்போது பிரதமர் தாக்கல் செய்துள்ள மசோதா, பிரஜா உரிமை பெற உதவுவதற்கு பதிலாக, பல தடைகளை ஏற்படுத்தியுள்ளது. பல தோட்டத் தொழிலாளர்கள், அடிக்கடி தங்கள் இருப்பிடங்களை மாற்றி இருக்கிறார்கள். அப்படியிருக்க, அவர்கள் எப்படி தாங்கள் தொடர்ந்து இலங்கையில் இருந்ததை நிரூபிக்க முடியும்? என்று அவர் கேட்டார்.காரசாரமான விவகாரத்துக்கு பிறகு, திருத்த மசோதா மீது ஓட்டெடுப்பு நடந்தது. பொன்னம்பலமும் அவர் ஆதரவாளர்களும் மசோதாவை ஆதரித்து ஒட்டு போட்டனர். செல்வநாயகமும் அவர் ஆதரவாளர்களும் எதிர்த்து வாக்களித்தனர்.மசோதா நிறைவேறியது.

எனினும், செல்வநாயகம் கூறியது போலவே இந்த மசோதாவினால் எந்த பலனும் இல்லை. 10 லட்சம் தமிழர்கள் “நாடற்றவர்கள்” என்ற நிலையில் நீடித்தனர்.தேர்தலில் இழப்பு

மலையகத் தமிழர்களின் தலைவராக சி.தொண்டமான் விளங்கினார். 1947 தேர்தலின் போது, மலையகத் தமிழர்கள் ஓட்டுரிமை பெற்றிருந்ததால், பாராளுமன்றத்தில் 7 இடங்களை அவர்கள் பெற்றனர். ஆனால், 10 லட்சம் தமிழர்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டதால் 1952 -ம் ஆண்டு தேர்தலில் அவர்கள் போட்டியிடுவதற்கான தகுதியை கூட இழக்க நேரிட்டது.சேனநாயகா மரணம்

1952 தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன், பிரதமர் டி.எஸ்.சேனநாயகா மரணம் அடைந்தார். அவருக்குப்பின், அவர் மகன் டட்லி சேனநாயகா பிரதமர் ஆனார்.


1952 தேர்தலில் பொன்னம்பலத்தின் “இலங்கை தமிழ்க் காங்கிரஸ் கட்சி” 4 இடங்களில் வெற்றி பெற்றதுடன், தொடர்ந்து டட்லி சேனநாயகா அரசுக்கு ஆதரவு தர முன்வந்தது. அதனால் பொன்னம்பலம் மீண்டும் மந்திரி ஆனார். டட்லி செனநாயகாவுக்கும், அவருடைய உறவினரான ஜான் கொத்தலாவலாவுக்கும் மோதல் ஏற்பட்டது. இதனால் டட்லி ராஜினாமா செய்ய நேர்ந்தது. புதிய பிரதமாராக கொத்தலாவலா பதவி ஏற்றார். அவர் பதவிக்கு வந்ததும், மந்திரி பதவியை விட்டு பொன்னம்பலத்தை நீக்கினார். இதன்பின், பொன்னம்பலத்தின் அரசியல் வாழ்க்கை வீழ்ச்சி அடைந்தது.

SHARE