இலங்கைத் தலைநகர் கொழும்பில் ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து வன்முறைகள் வெடிக்கலாம் என்ற அச்சத்தில் மக்கள் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
தேர்தலில் ஏற்படும் கடுமையான போட்டிகள், பிரசார உத்திகள் மற்றும் கட்சி ஆதரவாளர்களின் நடவடிக்கைகள் என்பன மக்கள் மத்தியல் இந்த உணர்நிலையை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக ஆளும் கட்சி தமது ஆதரவாளர்கள் மூலம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன.
தேர்தல் முடிவுகளின் பின்னர் பாரியளவில் வன்முறைகள் வெடிக்குமா? இராணுவத்தின் தலையீடுகள் அதிகரிக்குமா போன்ற அச்சங்கள் உருவாகியுள்ளமை தெரிய வருகிறது.
தேர்தல் முடிவுகள் வெளியாகும் தருணங்களில் வீடுகளுக்குள் முடங்க மக்கள் பலர் தீர்மானித்திருப்பதை அவதானிக்க முடிவதாக எமது கொழும்பு பிராந்திய செய்தியாளர்கள் பலரும் பதிவு செய்துள்ளனர்.
இதேவேளை கொழும்பில் தங்கியுள்ள பிற மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் இன்று தமது சொந்த ஊர்களுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளனர். வாக்களிப்பதுடன் கொழும்பில் அச்சமான சூழல் ஏற்படலாம் என்பதினாலுமே அவர்கள் வெளியேறுவதாக தெரிவிக்கின்றனர்.
எதுவும் நடைபெறலாம் என்ற நிலையில் கொழும்பில் உள்ள பலதரப்பட்டவர்களும் முன் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இந்த நாட்கள் மிகவும் பதற்றம் நிறைந்தவையாக காணப்படுவதாக எமது செய்தியாளர் ஒருவர் சித்திரித்துள்ளார்.