இலங்கையர்களாகிய நாம் சுய முயற்சியில் எழுந்து நிற்க வேண்டும்

15
இலங்கையை பிச்சை பெறும் நாடாக மாற்றுவதற்கு தாம் எந்த வகையிலும் தயாரில்லை என வலியுறுத்திய ஜனாதிபதி, இலங்கையர்களாகிய நாம் சுய முயற்சியில் எழுந்து நிற்க வேண்டும் எனவும், அதற்குத் தேவையான வேலைத்திட்டத்தை இவ்வருட வரவு செலவுத் திட்டத்தில் முன்வைத்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

மறைந்த அமைச்சர் லலித் அத்துலத்முதலியின் 86ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (23) நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.

இலங்கையை சர்வதேச மட்டத்திற்கு உயர்த்தக்கூடிய எண்ணக்கருவை லலித் அத்துலத்முதலி கொண்டிருந்ததாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, எதிர்காலத்தில் பட்டப்பின்படிப்பை தொடரக் கூடிய வகையில் லலித் அத்துலத்முதலியின் பெயரில் பல்கலைக்கழகம் ஒன்றை இலங்கையில் நிறுவவுள்ளதாகவும் தெரிவித்தார்.

இலங்கை இளைஞர்கள் சர்வதேச சந்தையுடன் சுயமாக தொடர்புபடக்கூடிய வசதிகளை வழங்கும் சிறப்பு டிஜிட்டல் தள அறிமுகமும் இன்று லலித் அத்துலத்முதலி அறக்கட்டளையினால் செய்யப்பட்டது.

பிறந்த நாள் விழாவில் உரையாற்றிய லலித் அத்துலத்முதலி அறக்கட்டளையின் தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான ரவி கருணாநாயக்க, கிராமப்புற மக்களின் கல்விக் கனவை நனவாக்கும் வகையில் லலித் அத்துலத்முதலி, மஹபொல புலமைப்பரிசில் முறையை அறிமுகப்படுத்தியதை நினைவு கூர்ந்தார்.

அவர் உயிருடன் இருந்திருந்தால் இம்முறைமை மேலும் மேம்படுத்தி முன்னோக்கி கொண்டு செல்லப்பட்டிருக்கும் என குறிப்பிட்ட ரவி கருணாநாயக்க, மஹபொல புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் நாட்டின் பிள்ளைகளுக்கு கல்விப் பாதைகளை திறந்து வைத்ததாகவும் தெரிவித்தார்.

மஹபொல புலமைப்பரிசிலின் கீழ் கல்வி கற்கும் பிள்ளைகள் நாட்டிற்காக பெரும் பணியை நிறைவேற்றியுள்ளனர் என சுட்டிக்காட்டிய அவர், இன்று திறந்து வைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் தளம் மகபொல புலமைப்பரிசிலின் கீழ் கல்வி கற்ற மாணவர்களால் உருவாக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

SHARE