இலங்கையின் ஆதிவாசிகள்.
இலங்கையின் ஆதிவாசிகள்எனப்படுவோர் வேடர்கள் அல்லது காட்டு வாசிகள் ஆவர். வெத்தா (சிங்களம்: “වැද්දා”) என்பது வேடன்என்னும் பொருள் குறிக்கும் சிங்கள மொழிச் சொல். எனினும் சிறப்பாக, இலங்கையின் காட்டுப் பகுதிகளில் இன்னமும் சிறு தொகையினராக வசித்துவரும்இனத்தவரைக் குறிக்க இந்தச் சொல் பயன்படுகின்றது. தற்போது இலங்கையில் வாழும் இனங்களுள் ஆதிக் குடிகளாகக் கருதப்படுபவர்கள் இவர்களே. வெளியார் இவர்களை வேடர் என்னும் பொருள்பட “வெத்தா” எனப் பெயரிட்டு அழைத்தாலும், இவர்கள் தங்களை “வன்னியலா எத்தோ” (Wanniyala-Aetto) எனவே குறிப்பிடுகிறார்கள். இதன் பொருள் “காட்டைச் சேர்ந்தவர்கள்” அல்லது “காட்டில் வாழ்பவர்கள்” என்பதாகும். நாட்டின் கிழக்கு மற்றும் தென்கிழக்குப் பகுதிகளிலுள்ள காட்டுப்பகுதிகளில் இவர்கள் காணப்படுகின்றார்கள். இவர்கள் இன்றைய இலங்கையின் பெரும்பான்மை இனங்களான சிங்களவர், தமிழர், முஸ்லீம்கள் ஆகிய இன மக்களிடம் இருந்து வேறுபட்டவர்கள். வன்னியலா எத்தோ மக்களின் வாழ்வியல் தனித்துவமானது, எனினும் இலங்கையின் பிற இன மக்களுடன் பின்னிபிணைந்தது. குறிப்பாக இலங்கை கிழக்கு கரையோர பகுதியில் வசிக்கும் இவ்வின மக்களின் சில குழுக்கள் தமிழ் பேசுகின்றார்கள். இவர்கள் தங்களை, இலங்கையில் வாழ்ந்த புதிய கற்காலச் சமுதாயத்தின் நேரடி வாரிசுகளாகக் கருதுகிறார்கள். நாட்டின் பழங்கால வரலாற்று நூல்களில் குறிப்பிடப்படும் இயக்கர், நாகர் என்னும் இரு இனங்களில் இவர்களே இயக்கர்கள் என்று குறிப்பிடப்படுபவர்கள் என்பது சில ஆய்வாளர்கள் கருத்து. இலங்கையில், சிறப்பாகத் தென்னிலங்கையில் பெருமளவில் வசித்துவந்த இவர்களுடைய வாழ்க்கை முறை, கி.மு. 5 ஆம் நூற்றாண்டளவில் தொடங்கி நடைபெற்ற ஆரியர் குடியேற்றத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது. இதனால் இவர்கள், ஒன்று இந்தியாவிலிருந்து வந்த குடியேற்ற வாசிகளுடன் இரண்டறக் கலந்துவிட்டனர் அல்லது காடுகளின் உட்பகுதிகளுக்குள் சென்று தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொண்டனர்.
இலங்கையின் வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் இவர்கள் சிங்களப் பெரும்பான்மை இனத்தவருடனும், கிழக்கு மாகாணத்தில் தமிழருடனும் கலந்துவிட்டனர். ஆரம்ப காலங்களில் மட்டுமன்றி பின்னரும் தொடர்ந்து இன்றுவரை தங்கள் வாழ்க்கை முறையையும், அடையாளத்தையும் பேணிக்கொள்வதற்குப் பெரும் இடர்களை எதிர்கொண்டு வருகிறார்கள். முக்கியமாக நாடு விடுதலை பெற்றபின்னர், அரசாங்கம் முன்னெடுத்த நீர்ப்பாசன மற்றும் குடியேற்றத் திட்டங்கள் இவர்களுடைய வாழ்நிலங்களில் பெரும்பகுதியை விழுங்கிவிட்டன. 20 ஆம் நூற்றாண்டின் நாற்பதுகளின் இறுதியில் நிறைவேற்றப்பட்ட கல்லோயா அபிவிருத்தித் திட்டம் இவர்களுடைய வேட்டைக்கும் உணவு சேகரிப்புக்கும் உரிய பெருமளவு காட்டுப்பகுதிகளை இல்லாதாக்கியது. அண்மையில், 1978க்குப் பின்னர் நிறைவேற்றப்பட்ட மகாவலி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் எஞ்சியிருந்த பகுதிகளும் பறிபோயின. இத் திட்டத்தின்கீழ் இவர்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு மேலாகப் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்துவந்த பல்லாயிரம் ஹெக்டேர் பரப்பளவு கொண்ட காடுகளில் பெரும்பகுதி நீர்தாங்கு பகுதிக்குள் வந்துவிட்டன அல்லது புதிய குடியேற்றத்திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டுவிட்டன. இதில் எஞ்சிய பகுதியான சுமார் 50 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவுள்ள, வன்னியலா எத்தோக்களின் பாரம்பரியக் காட்டுப்பகுதி மாதுறு ஓயா தேசியப் பூங்கா என்ற பெயரில் தேசியப் பூங்காவாகப் பிரகடனம் செய்யப்பட்டு அங்கு வாழ்ந்த வன்னியலா எத்தோக்கள் வெளியேற்றப்பட்டனர். அவர்களுடைய வாழ்க்கை நிலையை மேம்படுத்துவது என்ற போர்வையில், அவர்களுடைய எதிப்புகளுக்கும் மத்தியில் அவர்களுக்கு விவசாய நிலங்கள் ஒதுக்கப்பட்டுக் குடியேற்றத்திட்டங்களில் இடங்கள் வழங்கப்பட்டன. இதைக் குறித்து ஒரு வன்னியலா எத்தோ முதியவர் பேசியபோது, “எங்களுடைய வேட்டைக் கருவிகளைப் பறித்துக்கொண்டு எங்களுக்கு மண்வெட்டிகளைத் தந்திருக்கிறார்கள், எங்கள் புதை குழிகளை நாங்களே வெட்டிக்கொள்ள” என்று குறிப்பிட்டாராம். இவர்கள் ஆரம்பத்தில் என்ன மொழியைப் பேசினார்கள் என்பது தெரியவில்லை. இன்று இவர்கள் தாங்கள் வாழும் புகுதிகளில் வழங்கும் பெரும்பான்மை மொழிகளான சிங்களம் அல்லது தமிழைப் பேசிவருகிறார்கள். மற்ற இனத்தவர்களால் இவர்கள் பிற்பட்டவர்களாகவும், முன்னேற்றமடையாத காட்டு வாசிகளாகவும் கருதப்பட்டாலும், இவர்கள் இயற்கையோடு இயைந்த வாழ்க்கை முறைகளைக் கொண்டவர்களாகவும், நல்ல மனிதப் பண்பு கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள் என இவர்களுடைய பண்பாட்டை ஆய்வு செய்தவர்கள் கூறுகின்றார்கள்.
இந்தியப் பழங்குடிகள்.
ஒன்கே மக்கள் (Onge) எனப்படுவோர் அந்தமான் தீவுகளில் வசிக்கும் அந்தமான் மக்களின் ஒரு குறிப்பிட்ட பழங்குடிகள் ஆவர். இவர்கள் “நெகிரிட்டோக்கள்” எனவும் அழைக்கப்படுகின்றனர். இவர்கள் பொதுவாக சிறிய அந்தமான் தீவு மற்றும் அதனைச் சூழவுள்ள தீவுத் திடல்களிலும் வாழ்ந்து வருகிறார்கள். அத்துடன் ரட்லண்ட் தீவு மற்றும் தெற்கு அந்தமான் தீவின் தென்முனையின் பகுதிகளிலும் சில கூடாரங்களில் வசிக்கின்றனர். இவர்கள் வேட்டையாடியே தமது உணவைத் தேடுகின்றனர். ஓன்கே மக்கள் தொன்மையான வட இந்தியர்கள் மற்றும் தென் இந்தியர்களிடம் இருந்து தனித்து காணப்பட்டாலும், தொன்மையான தென் இந்தியர்களோடு சிறிது இணக்கமாக உள்ளனர் என்று அண்மைய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இதன் மூலம், தொன்மையான தென் இந்தியர்களும், அந்தமான் பழங்குடியின மக்களும் ஒரே மூதாதையரிடம் இருந்து 50,000 முதல் 60,000 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து இருக்கக் கூடும் என்பதும் இந்த ஆராய்ச்சியாளர்களின் கருத்து. கிபி 672 முதல் 1901 காலப்பகுதி வரை அந்தமானில் இடம்பெற்று வந்த குடியேற்றங்கள் காரணமாக ஒன்கே மக்களின் தொகை கணிசமான அளவு குறைந்து வந்தது. தற்போதுள்ள மக்கள் சிறிய அந்தமான் தீவில் இரண்டு சிறப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வெளியின மக்களுடனான தொடர்பு, மற்றும் உணவுப் பழக்க வழக்க மாற்றங்களே இவர்களின் மக்கள்தொகைக் குறைப்பிற்கு முக்கிய காரணிகளாகக் கூறப்படுகின்றன. 1901 இல் இவர்களின் தொகை 672 ஆகவும், 1911 இல் 631 ஆகவும் 1921 இல் 346 ஆகவும்; 1931 இல் 250 ஆகவும், 1951 இல் (இந்திய விடுதலைக்கு கிட்டவாக) 150 ஆகவும் இருந்தது. தற்போது (2008 இல்) இவர்களின் தொகை ஆக 100 மட்டுமே உள்ளது. டிசம்பர் 2008 இல் நச்சு திரவத்தை அருந்தியதால் இவ்வினத்தின் 8 ஆண்கள் இறந்தனர். ஆல்ககோல் என நினைத்து மெத்தனால் என்ற நச்சுத் திரவத்தை அருந்தியதால் இவர்கள் இறந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. மேலும் 15 ஒன்கே இனத்தவர் இந்நிகழ்வில் சுகவீனமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.2009 இல் நான்கு ஒன்கே இனப் பெண்கள் மீளத் திருமணம் செய்ய சட்டப்படி அனுமதி அளிக்கப்பட்டனர். இவ்வினத்தில் பெண்கள் மீளத்திருமணம் புரிவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
போடோ மக்கள்(Bodos) எனப்படுவோர் வடகிழக்கு இந்தியாவின் அசாம் மாநிலத்தில் வாழும் பழங்குடியினர் ஆவர். 1991 ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் படி அசாம் மாநிலத்தில் 1.2 மில்லியன் போடோ இனத்தவர்கள் வாழ்கிறார்கள். இது மாநிலத்தின் மொத்த மக்கள்தொகையில் 53. விழுக்காடு ஆகும். அசாம் மாநிலத்தின் உதால்குரி, கொக்ராஜார் ஆகிய நகரங்களில் இவர்கள் பெரும்பான்மையாக வசிக்கின்றனர். இந்தியாவின் ஷெடியூல் வகுப்பினரில் போடோக்கள் 8வது இடத்தை (1971) வகிக்கின்றனர். இவர்கள் போடோ மொழியைப் பேசுகின்றனர். போடோக்கள் போடோ-கச்சாரி என்ற இனக்குழுக்களின் 18 பிரிவுகளில் ஒன்று என 19ம் நூற்றாண்டில் முதன் முதலாக வகைப்படுத்தப்பட்டது. வடகிழக்கு இந்தியாவின் பெரும் பகுதியிலும், நேபாளத்திலும் போடோக்கள் வாழ்கின்றனர். பிரம்மபுத்ரா ஆற்றுக் கரைகளில் வாழும் மக்களில் பெரும்பான்மையானோர்ர் போடோக்கள் ஆவர். போடோக்கள் முன்னைய காலங்களில் தம்முடைய மூதாதையோரயே வழிபட்டு வந்தனர். இதற்கு “பாத்தூயிசம்” என்று பெயர். அண்மைக்காலங்களில் இந்து சமயத்தைப் பின்பற்றுகிறார்கள். 1980களின் இறுதிப் பகுதியில் இருந்து போடோக்கள் தமக்கு சுயாட்சி வழங்கக்கோரி உபேந்திரா நாத் பிரம்மா தலைமையில் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இவர் இப்போது போடோக்களின் தந்தை என அழைக்கப்பட்டு வருகிறார். போடோக்களின் தனித்துவம், பண்பாடு, கலாசாரம், மொழி ஆகியவற்றைப் பேண நடத்தப்பட்ட போராட்டங்களை அடுத்து இவர்களுக்கு “போடோலாந்து பிராந்தியக் கவுன்சில்” என்ற தனியான நிர்வாக அலகு தற்போதைய கொக்ராஜார் மாவட்டத்தில் ஏற்படுத்தப்பட்டது. சுயாட்சிக்கான போராட்டங்கள் “அனைத்து போடோ மாணவர் அமைப்பு” மூலமாகவும், “போடோ விடுதலைப் புலிகள்” (Bodo Liberation Tigers, BLT) என்ற ஆயுத அமைப்பினாலும் முன்னெடுக்கப்பட்டது. இவர்களைவிட “போரோ பாதுகாப்பு படை”, போடோலாந்து தேசிய மக்களாட்சி முன்னணி, போன்றவை ஆயுதம் தாங்கி தற்போதும் போராடி வருகின்றன. 2006 அசாம் மாநில தேர்தல்களில் போடோ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து திஸ்பூரில் போட்டியிட்டு ஆட்சியை அமைத்தனர்.
போண்டாஅல்லது போண்டோ மக்கள் என்பவர்கள் இந்தியாவில் ஒரிசா மாநிலத்தின் தென்மேற்குப் பகுதியில் மல்க்காங்கிரி மாவட்டத்தில் மலைப்பகுதிகளில் வாழும் பழங்குடி மக்கள். இப்பகுதி, ஒரிசா, சட்டீசுகர்கு, ஆந்திரப் பிரதேசம் ஆகிய மூன்று மாநிலங்களும் சேரும் இடத்தில் உள்ளது. இவர்களில் இன்று ஏறத்தாழ 5000 பேர்கள்தான் இருக்கின்றனர் (1991 கணக்கெடுப்பின் படி). இவர்கள் முண்டா என்னும் ஆசுத்திரேலிய-ஆசிய குடும்பத்து மொழி பேசும் மக்கள் என்று அறிஞர்கள் கருதுகிறார்கள். இம்மக்கள் இந்தியாவின் தாழ்த்தப்பட்ட (scheduled tribe) இனங்களில் ஓரினமாக பதிவு செய்ய்ப்பட்டுள்ளனர். இவர்கள் ரேமோ (Remo) என்றும் அறியப்படுகின்றார்கள். இவர்கள் பேசும் போண்டா மொழியில் ரேமோ என்றால் மக்கள் என்று பொருள். இவர்களுக்கு வழங்கும் பிற பெயர்கள் போண்டோ, போண்டோ பொரா’சா (Bondo Poraja).இவ்வினத்தவர் ஓரளவுக்கு ஆடை அணிகலன்கள் அணிகின்றனர். இவ்வின மக்களின் பெண்கள் தங்கள் கழுத்தில் மிகவும் தடிப்பான வெள்ளி வளையங்களை அணிகின்றனர். காதிலும், மூக்கிலும் பல இடங்களில் தோடு, வளையங்கள் அணிகின்றனர். சிறு குழந்தைகளும் மூக்கணிகள் அணிகின்றனர். போண்டா இன மக்களில் ஆண்களை விட பெண்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இம்மக்கள் தங்கள் தலை முடியில் விளக்கெண்ணெய் தேய்த்துக்கொள்கிறார்கள். இவ் இனப் பெண்கள் தங்களைவிட 10-15 அகவை (வயது) குறைந்த ஆண்களை மணந்து கொள்கின்றனர். திருமணம் செய்துகொள்ளும் பொழுது பெண்ணுக்கு 20-25 அகவையும் ஆணுக்கு ஏறத்தாழ 10 அகவையும் இருக்கும். இவர்கள், அருகில் உள்ள ஊர்ப்புற சந்தைகளில் பண்டமாற்று முறையில் (“பின்னிமோய் புரோத்தா, ‘binnimoy protha’)பொருள்களைப் பரிமாறுகிறார்கள். இம்மக்கள் தாங்கள் வாழிடங்களில் சென்று கண்பது எளிதல்ல என்று சிலர் கருதவதால், ஞாயிற்றுக் கிழமை சந்தைகளில் காண்பதே பெரும்பாலும் நிகழ்வதாகும்
தமிழகப் பழங்குடிகள்.
தமிழகப் பழங்குடிகள்தமிழ் நாட்டு மக்கள் தொகையில் 3.5% உள்ளனர் (2001 கணக்கெடுப்பு). தமிழகத்தில் 40க்கும் மேற்பட்ட வெவ்வேறு பழங்குடிகள் உள்ளனர். இருளர், காடர், குறும்பர், தோடர் போன்றோர்கள் பழங்குடிகளில் சிலர். தமிழ் நாட்டில் 30 மாவட்டங்களில் பழங்குடிகள் வாழ்கிறார்கள். பழங்குடிகள் பெரும்பாலும் காடும் காடுசார்ந்த நிலங்களிலும் வாழ்கின்றனர். இவர்கள் பணம் சார்ந்த பொருளாதாரத்தை அதிகமாக பயன்படுத்துவதில்லை. இவர்கள் தங்களுக்கென தனி மொழியும், குடும்ப மற்றும் குமுகப் (சமூகப்) பழக்க வழக்கங்களையும் கொண்டவர்கள். பெரும்பாலோருடை மொழிகள் தமிழுடன் நெருங்கிய தொடர்புடையது என்றும் திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்ததென்றும் அறிஞர்கள் கருதுகிறார்கள். முதன் முதல் எட்கர் தர்ஸ்டன் என்பாரும், பின்னர் அனந்த கிருஷ்ண அய்யர், முனைவர் அய்யப்பன் போன்றோரும் பழங்குடிகளை பற்றிய ஆய்வுகள் செய்துள்ளனர். பழங்குடி பெயர் வாழும் பகுதி மொழி அரநாடன் கோவை, ஆனைமலை மலையாளக் கிளை மொழி அலுகுறும்பர் நீலகிரி கன்னடக் கலப்பு மொழி இருளர் கோவை, சேலம், காஞ்சிபுரம், நீலகிரி, விழுப்புரம் இருள மொழி தமிழ் கிளைமொழி ஊராளி நீலகிரி (சத்தியமங்கலம்) மலையாளம் கலந்த தமிழ் எருக்கலா காஞ்சிபுரம், செங்கல்பட்டு தமிழின் கிளை மொழி. மலையாளம் கலப்பு எரவல்லன் கோவை (மலைப்பகுதி) ? கசபர் நீலகிரி, கூடலூர்,உதகமண்டலம் கசபர் மொழி, கன்னடம் தமிழ் கலப்பு காணிக்காரர் கன்னியாகுமரி மலையாளம் தமிழ் மொழி காடர் கோயம்புத்தூர், ஆனைமலை,திருச்சிராப்பள்ளி,தஞ்சாவூர் கன்னடக் கலப்பு மொழி குறும்பர் நீலகிரி கன்னடக் கலப்பு மொழி குடிமலைக்குடி தமிழக-கர்நாடக எல்லை மலைகள் துளு மொழி குறிச்சான் தருமபுரி கன்னடக் கிளை மொழி பணியர் நீலகிரி, பாலக்காடு, கண்ணனூர், வயநாடு மலையாளக் கிளை மொழி பழியர் பழனி மலைக்குன்றுகள், சிறுமலை, இராமநாதபுரம் மாவட்டம், திருநெல்வேலி மாவட்டம் தமிழ் மொழி புலையர் பழனி மலைக் குன்றுகள், ஆனைமலை, மதுரை மாவட்டம் தமிழ் மொழி மலமலசர் ஆனைமலைப் பகுதிகள் தமிழ், தமிழின் கிளைமொழி மலையாளி சேர்வராயன் மலை, கொல்லி மலை, சவ்வாது, ஏலகிரி, பச்சை மலைக் குன்றுகள் தமிழ், மொழி முதுவர் ஆனைமலை, ஏலமலை, ஏலமலையை ஒட்டியுள்ள கேரளப் பகுதிகள் தமிழின் கிளை மொழி தோடர் நீலகிரி தோடா மொழி படுகர் நீலகிரி கன்னடக் கிளை மொழி
தமிழரின் தோற்றம், பரவல் பற்றியும், அரசியல், பண்பாட்டு, தொழில்நுட்ப வரலாறு பற்றியும் தமிழ் வரலாறு கட்டுரை விபரிக்கும். தமிழர் தோற்றம் பற்றி இரு கருதுகோள்கள் உண்டு. பழந்தமிழர் தென் இந்தியாவின் ஆதிக்குடிகள் என்பது ஒரு கருதுகோள். தமிழர் மத்திய ஆசியா, வட இந்தியா நிலப்பரப்புகளில் இருந்து காலப்போக்கில் தென் இந்தியா வந்தனர் என்பது மற்றைய கருதுகோள். எப்படி இருப்பினும் தமிழர் இனம் தொன்மையான மக்கள் இனங்களில் ஒன்று. தமிழர்களின் தோற்றம் மற்ற திராவிடர்களைப் போலவே இன்னும் தெளிவாக அறியப்படவில்லை. எனினும் அவர்கள் கி. மு. 6000-ஆம் ஆண்டு வாக்கில் இந்தியாவிற்கு வந்திருக்கலாம் என்று தொல்லியல் மற்றும் மரபியல் ஆய்வுகள் கருதுகின்றன. (கேட்கில் 1997). பண்டைய ஈரானின் இலாமைட் மக்களுடன் தமிழர்கள் தொடர்பு கொண்டிருந்ததாகக் கூறப்பட்டாலும் அதனை நிரூபிக்க வலுவான ஆதாரங்கள் இல்லை. சிந்து சமவெளி நாகரிக மக்கள் தமிழர்களோ அல்லதுதிராவிடர்களோ தான் (உதா. பர்போலா 1974; 2003) என்னும் கருத்தும் சர்ச்சைக்குரியதாகவே இருக்கிறது. தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் குறிப்பாக ஆதிச்ச நல்லூரில் அகழ்ந்தெடுக்கப்பட்ட கி. மு. 1000-ஆம் ஆண்டு காலத்து புதைக்கப்பட்ட மண்பாண்டங்கள் தற்காலத் தமிழ்நாட்டில் தமிழர்கள் வாழ்ந்ததற்கு சான்றாக விளங்குகின்றன. அப்புதை பொருட்களில் உள்ள குறிப்புகளும் பண்டைய தமிழ் இலக்கியங்களில் உள்ள குறிப்புகளும் ஒத்துப் போவதால், அக்கால கட்டத்தில் தென்னிந்தியாவில் தமிழர்கள் வாழ்ந்ததை இது உறுதி செய்கிறது. இவ்விடங்களில் சமீபத்தில் மேற்கொள்ளப் பட்ட அகழ்வுகளில் கிடைத்த பழைய தமிழ் எழுத்துக்கள் குறைந்தது கி. மு. 500 ஆண்டைச் சேர்ந்தவையாகும். (தி ஹிண்டு, 2005)
கோத்தர்என்போர் நீலகிரி மாவட்டத்தில் வாழும் பழங்குடி இன மக்கள். இவர்கள் நீலகிரி மாவட்டத்தில் ஏழு இடங்களில் வாழ்கின்றனர். இம்மக்கள் நீக்ரிடாய்ட் இனத்தைச் சேர்ந்தோர் ஆவர். இவர்கள் தாங்கள் வாழுமிடத்தைக் கோகால் என்றழைக்கின்றனர். வீட்டை அவர் மொழியில் பய் என்றழைப்பர். தாம் வாழும் தெருக்களை கேரி என்றழைப்பர். உணவுக்கு கேப்பையை விரும்பி உண்கின்றனர். இராகிப் பிட்டு இவர்கள் விரும்பும் முக்கிய உணவு. எருமைக் கறியையும் விரும்பி உண்பர். கருமார்த் தொழில் (இரும்புக் கருவிகள் செய்தல்), மட்பாண்டம் செய்தல் ஆகியவற்றில் வல்லவர்கள். கோத்தர் பேசும் மொழி கோத்த மொழி எனப்படுகிறது. இது தென் திராவிட மொழிப்பிரிவைச் சேர்ந்தது. இம்மொழி வரிவடிவம் அற்றது.கோத்தர் இறந்தோரை எரிக்கும் வழக்கம் கொண்டவர். இறந்த அன்று பச்தாவ் (பச்சைச் சாவு) என்றும் ஓராண்டு கழித்து வர்ல்தாவ் (காய்ந்த சாவு) என்றும் இரு சடங்குகள் நடத்துவர்.
காடர் என்போர் தமிழ் நாட்டில் உள்ள பழங்குடிகளில் ஓரின மக்கள். இவர்கள் கோயம்புத்தூரில் உள்ள ஆனைமலை, பரம்பிக்குளம் கங்கடவு பெரும்பாறை போன்ற இடங்களிலும், மற்றும் திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர் மாவட்டங்களிலும் வாழ்கின்றனர். இவர்கள் மொழி கன்னட மொழி கலப்புள்ளது.
தோடர்கள்தமிழ் நாட்டில் வாழும் ஒரு பழங்குடி இனத்தவர். இவர்கள் நீலகிரி மாவட்டத்தில் வாழ்கின்றனர். தோடர்கள் தாம் வாழும் இடத்தை மந்து என்று கூறுகின்றனர். இம் மந்துகளில் எருமை மாடுகளை வளர்க்கின்றனர். பெரும்பாலும் இவர்கள் வாழ்க்கை எருமை மாடுகளைச் சுற்றியே அமைகின்றது. இதனால் இம்மக்களை மாந்தவியலாளர் செல்லமாக எருமையின் குழந்தைகள் என அழைப்பர். இவர்கள் மொழி பேச்சுத்தமிழ் என்று கால்டுவெல் அறிஞர் கருதினார். தோடர்கள் பேசும் மொழி தோடா மொழி எனப்படுகிறது. இம்மக்கள் பாடுவதில் ஈடுபாடு உடையவர்கள்.தோடப் பெண்கள் துணிமணிகளில் பூ வேலைப்பாடு செய்வதில் தேர்ந்தவர்கள். ஆண்கள் மர வேலையில் திறன் படைத்தவர். பருவப் பெண்கள் தோளிலும் மார்பிலும் பச்சை குத்திக் கொள்கின்றனர். இம்மக்கள் சைவ உணவுப் பழக்கம் கொண்டோர். எருமைப் பாலை விரும்பிக் குடிப்பர். தோடர்குல ஆண்கள் வீரத்தினை வெளிக்காட்ட மந்துகளுக்கு எதிரே வைக்கப்பட்டிருக்கும் பெரிய கல்லை மார்புக்கு மேலே உயர்த்திக் காட்டுவர். தோடர்களில் இளையோர் வயதில் முதிர்ந்தோரைக் கண்டால் மண்டியிட்டு வணங்க வேண்டும். முதியவர் இளையவரில் நெற்றியில் தனது பாதத்தை வைத்து பதுக்-பதுக் என்று சொல்லி வாழ்த்துவார். இவர்கள் முற்காலத்தில் பல்கணவ முறையைக் கொண்டிருந்தனர். இம்முறையின் படி தோடர் குலப் பெண் ஒருவனை மணந்து கொண்டால் அவனுக்கு மட்டுமன்றி, அவன் உடன் பிறந்தோருக்கும் மனைவியாகிறாள். திருமணம், மண முறிவு போன்றவற்றில் பெண்களுக்கு முழுச் சுதந்திரம் உண்டு.
படுகர்(Badagas அல்லது படகர்) தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்தில் வாழும் ஒரு பழங்குடி இனத்தவர் ஆவர். நீலகிரியில் வாழும் 18 இன மக்களில் ஒரு இனமான இவர்கள் படுகு என்ற மொழியைப் பேசுகின்றனர். இம்மொழி வரிவடிவம் இல்லாததாகும். இவர்கள் விஜய நகர பேரரசின் காலத்தின்போது மைசூர் நிலப் பகுதிகளில் இருந்து நீலகிரிக்குப் இடமபெயர்ந்தார்கள் எனப்படுகிறது. நீலகிரியில் வாழும் படகர்களை வடுகர் என்றும் படகர் என்றும் கௌடர் என்றும் கூறுகின்றனர். நீலகிரி படகர் சமுதாயத்தில் 18 பிரிவுகள் உள்ளன.
கசவர்கள் நீலகிரி மாவட்டத்தில் வாழும் ஒரு பழங்குடி இனத்தவர். இம்மக்கள் தடித்த உதடும் சுருண்ட மயிரும், கருத்த நிறமும் கொண்டவர்கள். இவர்கள் தாம் வாழும் குடிசையைச் சேரி என்று அழைப்பர். இக்குடிசைகள் மூங்கில், கம்பு ஆகியவற்றைக் கொண்டு புல்லால் வேயப்பட்டு இருக்கும். இவர்தம் மொழி கன்னட மொழியோடு நெருங்கிய தொடர்பு கொண்டது. திருமணம் பெரும்பாலும் பெரியவர்களாலேயே முடிவு செய்யப்படுகிறது. மணமுறிவு, மறுமணம் ஆகியன வழக்கில் உள்ளன.
காணிக்காரர் என்போர் தமிழக, கேரள மாநிலங்களின் தென்கோட்டில் வாழும் பழங்குடி மக்கள். இவர்கள் தமிழகத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் காணப்படுகின்றனர். இம்மக்கள் காணி, கணியன், காணிக்கர், வேலன்மார், மலையரசன் முதலிய பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகின்றனர். காணிக்காரன் என்பதன் பொருள் நிலத்துக்குச் சொந்தக்காரன் என்பதாகும். இவர்கள் பேசும் மொழி காணிக்காரர் மொழி எனப்படுகிறது. இவ்வின மக்கள் குட்டையான உருவமும் சுருண்ட மயிரும் கருந்த நிறமும் கொண்டவர்கள். பச்சை குத்திக் கொள்ளுதலும் கடுக்கன் அணிந்து கொள்ளுதலும் இவர்தம் பழக்கங்களில் குறிப்பிடத் தகுந்தன. இவர்கள் தாங்கள் வாழுமிடத்தை காணிக்குடி என அழைப்பர். மணமாகாத ஆண்களுக்கு தனியாகக் குடியிருப்புகள் உண்டு. மணமாகோதோர் இரவில் அங்குதான் தங்கவேண்டும். காணிக்காரர்கள் மூன்றாண்டுக்கு ஒரு முறை தாங்கள் வாழுமிடத்தை மாற்றுகின்றனர். வேளாண்மை இவர்தம் முக்கியத்தொழில். மரவள்ளிக் கிழங்கு முக்கிய உணவு. இம்மக்களுக்கு ஆவி உலகக் கோட்பாட்டிலும் மறுபிறப்பிலும் நம்பிக்கை உண்டு. இறந்தவர்கள் இவர்கள் எரிக்கவோ புதைக்கவோ செய்கின்றனர்.
பணியர்தமிழ்நாட்டிலும் கேரளாவிலும் வாழும் பழங்குடி மக்கள். இவர்கள் தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் வட்டாரத்திலும், கேரளத்தில் பாலக்காடு, கண்ணனூர், வயநாடு ஆகிய பகுதிகளிலும் வாழ்கின்றனர். கருத்த நிறமும் சுருண்ட மயிரும் தடித்த உதடும் கொண்ட இம்மக்கள் நீக்ராயிட் இனத்தைச் சேர்ந்தவர்கள். கடும் உழைப்பாளிகளான இம்மக்களில் பெரும்பாலானோர் உழவு வேலை செய்கின்றனர். இவர்கள் தாங்கள் வாழும் குடிசையைச் சாலை எனவும் பல குடிசைகள் கொண்ட ஊரினை பாடி எனவும் அழைக்கின்றனர். பாடியின் தலைவன் கூட்டன் எனப்படுவான். இவர்கள் ஒரு காலத்தில் மரம் வெட்டியும் யானை பிடித்தும் வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது. ஆவி உலகக் கோட்பாட்டில் நம்பிக்கை உடையவர்கள். இவர்களது கோவில் தெய்யபிறை எனப்படுகிறது. இம்மக்கள் பேசும் மொழி மலையாளத்தின் கிளைமொழியாகும். இறந்த மக்களைப் புதைப்பது இவர்கள் வழக்கம்.
பெட்ட குறும்பர்தமிழ்நாட்டிலும் கர்நாடகத்திலும் வாழும் பழங்குடி இனத்தோர். இவ்வினத்தார் தமிழ்நாட்டில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர்ப் பகுதியில் வாழ்கின்றனர். பெட்ட எனின் இவர்தம் மொழியில் மலை என்று பொருள். இவர்கள் குறுமன், குறும்பன், குறுபன் முதலிய பல பெயர்களால் அழைக்கப்படுகின்றனர். இம்மக்கள் தாம் வாழுமிடத்தை பாடி என்று அழைக்கின்றனர். இவர்களது குடிசைகள் மூங்கிலால் கட்டப்பட்டு இருக்கும். குடிசைகட்கு நடுவில் பெரிய குடிசையொன்றும் இருக்கும். இதற்கு வெளியில் எப்போதும் நெருப்பு எரிந்து கொண்டிருக்கும். முதுமலை, தெப்பக்காடு பகுதிகளில் வாழும் பெட்ட குறும்பர்கள் யானைகளைப் பழக்குவதில் தேர்ந்தவர்கள். தேன் எடுப்பதும் மீன் பிடிப்பதும் இவர்தம் தொழில். நெருப்பு மூட்டி அதனைத் தெய்வமாகப் போற்றுகின்றனர். பெட்ட குறும்பர் பேசும் மொழி பெட்ட குறும்பர் எனப்படுகிறது. இது தென்திராவிட மொழிக்குடும்பத்தைச் சேர்ந்த தனித் திராவிட மொழியாகும். பேராசியர் எமனோ, கமில் சுவலபில் ஆகியோரும் தத்தம் நூல்களில் இக்கருத்தையே குறிப்பிட்டுள்ளனர். பெட்டக் குறும்பர் இன மக்களிடையே மொத்தம் 16 பெயர்கள் தாம் உண்டு. அவை மாண்பன், மாறன், பொம்மன் முதலான எட்டு ஆண் பெயர்களும் மாண்பி, மாரி, பொம்மி முதலான எட்டு பெண் பெயர்களும் ஆகும். இறந்தோரை இவ்வின மக்கள் புதைக்கின்றனர். ஆண், பெண் இருபாலரும் இறந்தவர்களைக் கொண்டு செல்கையில் இடுகாட்டுக்குச் செல்வர். இறந்தவரின் வீட்டார் பின்னர் வேறு இடத்தில் குடியேறுவர்.
மலமலசர் என்போர் தமிழ்நாட்டின் கோயமுத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆனைமலைப் பகுதியில் வாழும் பழங்குடி இன மக்கள் ஆவர். இப்பகுதியில் மலமலசரைப் போன்று பதிமலசர் என்னும் இனத்தாரும் வாழ்கின்றனர். மலமலசர் மலைகளிலும் பதிமலசர் மலை அடிவாரத்திலும் வாழ்கின்றனர். மலமலசர் தாம் வாழுமிடத்தைப் பாடி என்றழைப்பர். இவர்கள் காட்டுக் கடவுளரை வழிபடுகின்றனர். நாட்டுத்தெய்வங்களைக் கும்பிடுவதில்லை. ஆசுத்திரேலிய இனத்தைச் சேர்ந்த இம்மக்கள் தடித்த உதடும் கருமையான மயிரும் குட்டையான உருவமும் கொண்டவர்கள். மலமலசர்க்கு தாடி அடர்த்தியாக வளர்வதில்லை. இவர்தம் பேச்சில் தாடி என்பதற்கு தனியான சொல்லை இல்லை. மீசையை மேல் மீசை என்றும் தாடியை கீழ் மீசை என்றும் அழைக்கின்றனர். இவர்கள் யாரும் அணுக இயலாதவாறு காட்டினுள்ளே குடிசைகள் அமைத்து வாழ்கின்றனர். இவர்கள் பேசுவது தமிழின் கிளை மொழியாகும். இறந்தோரைப் புதைத்தல் இவ்வின மக்களின் வழக்கம்.
CREATE A
POWERED BY
START YOUR OWN FREE WEBSITE
A surprisingly easy drag & drop site creator.