இலங்கையின் துரோகங்களுக்கு இந்தியா துணை போகிறது: ராமதாஸ்

486
Wa-5485l

தடைசெய்யப்பட்டவர்கள் இந்தியா செல்ல முடியாது:-

இலங்கை அரசின் தடைப்பட்டியலை இந்தியா ஏற்றுக்கொண்டது – ஒருவர்  திருப்பி அனுப்பப்பட்டார்:-

இலங்கை அரசின் தடைப்பட்டியலை இந்தியா ஏற்றுக்கொண்டது – தடைப்பட்டியலில் சேர்க்கப்பட்டவர் திருப்பி அனுப்பப்பட்டார்:-
குண்டனங்கள் தொடர்கின்றன:-
இந்திய அரசின் முடிவுக்கு கருணாநிதி கண்டனம்
16 தமிழ் அமைப்புகள் மற்றும் அவற்றின் ஆதரவாளர்கள் 424 பேர் மீது தடை விதிக்க வேண்டுமென்று இலங்கை அரசு விடுத்த வேண்டுகோளை ஏற்றுக் கொண்டதற்காக இந்திய அரசுக்கு திமுக தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்
தீவிரவாதத்துக்கு ஆதரவாகச் செயல்பட்டதாகக் குற்றம்சாட்டி 16 தமிழ் அமைப்புகள் மற்றும் அவற்றின் ஆதரவாளர்கள் 424 பேர் மீது தடை விதிக்க வேண்டுமென்று இலங்கை அரசு உலக நாடுகளுக்கெல்லாம் வேண்டுகோள் விடுத்து அந்த வேண்டுகோளை நம்முடைய இந்திய அரசும் ஏற்றுக் கொண்டு நடவடிக்கை எடுத்துள்ளதாக இன்று நாளேடுகள் சிலவற்றில் செய்தி வந்துள்ளது.
அதன் தொடர்ச்சியாக இங்கிலாந்தில் இருந்து மருத்துவச் சிகிச்சைக்காக தனது தாயை இந்தியாவிற்கு அழைத்து வந்தபோது தடை விதிக்கப்பட்ட 424 பேரில் ஒருவர் இந்திய அரசால் திருப்பி அனுப்பப்பட்ட மனிதாபிமானற்ற செயலும் நடந்திருக்கிறது.
இலங்கையின் தடை உத்தரவு கனடாவில் செல்லாது என்று அந்த நாட்டு அமைச்சர் பகிரங்கமாக அறிவித்துள்ளார். பிரிட்டனும் அவ்வாறே தனது எதிர்ப்பினை ஏற்கனவே தெரிவித்து விட்டது.
இலங்கை அரசின் இந்த வேண்டுகோளை அமெரிக்கா நிராகரித்ததோடு இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போரின் போது பெருமளவில் மனித உரிமை மீறல் சம்பவங்களில் ஈடு பட்டதாக சர்வதேச அளவில் எழுந்த குற்றச்சாட்டுகள் குறித்து சட்டப்படி உரிய விசாரணை மேற்கொள்ளாத இலங்கை அரசின் இந்தக் கோரிக்கையை ஏற்க முடியாது என்றே திட்டவட்டமாக மறுத்துள்ள நிலையில், இலங்கை அரசின் தமிழர்களுக்கு எதிரான இந்த மனிதாபிமானமற்ற கோரிக்கையை இந்திய அரசு ஏற்றுக் கொண்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியதாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஈழத்தமிழர் உள்ளிட்ட ஒட்டுமொத்த தமிழினத்திற்கும் எதிராக கடந்த 10 ஆண்டுகளில் எத்தனையோ நடவடிக்கைகளை மேற்கொண்ட காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு, இப்போது தமிழினத்திற்கு எதிராக மீண்டும் ஒரு துரோகத்தை செய்திருக்கிறது என பா.ம.க. நிறுவனர் டாக்டர்  ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசின் கோரிக்கையை ஏற்று உலகின் பல நாடுகளில் செயல்பட்டு வரும் 16 தமிழ் அமைப்புகளுக்கும், அவற்றுடன் தொடர்புடைய 424 செயல்பாட்டாளர்களுக்கும்  இந்திய அரசு தடை விதித்திருப்பதாக செய்திகள் வெளியானது தொடர்பில் கருத்து வெளியிடுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
இலங்கையில் நடந்த போரின் போது ஒன்றரை இலட்சம் அப்பாவி தமிழர்களை கொன்று குவித்த இலங்கை அரசு, இப்போது அந்த இனப்படுகொலைக்கு நீதி கேட்டு குரல் எழுப்பிக் கொண்டிருக்கும் தமிழ் அமைப்புகளையும் முடக்கிப் போடுவதில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

அந்த வகையில் தான் வெளிநாடுகளில் செயல்பட்டு வரும் 16 தமிழ் அமைப்புகளையும், அத்துடன் தொடர்புடைய 424 பேரையும் தடை செய்து கடந்த மாதம் உத்தரவிட்டது. அதுமட்டுமின்றி, இந்த அமைப்புகளுக்கு தடை விதிக்கும்படி உலக நாடுகள் பலவற்றுக்கும் இலங்கை அரசு வேண்டுகோள் விடுத்தது.
இலங்கை ‘எள்’ என்றால் ‘எண்ணெயாக’ மாறி நிற்கும் இந்திய அரசு, மறு கேள்வியே எழுப்பாமல் இந்த 16 அமைப்புகளுக்கும், அதனுடன் தொடர்புடையவர்களுக்கும் தடை விதித்து ஆணையிட்டிருக்கிறது.
இந்திய அரசின் இந்த நடவடிக்கை ஜனநாயக விரோத செயலாகும். இது கடுமையாக கண்டிக்கத் தக்கது. வெளிநாடுகளில் செயல்பட்டு வரும் தமிழ் அமைப்புகள் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும், இதனால் அந்த அமைப்புகளை தடை செய்ய வேண்டும் என்றும் இலங்கை ஜனாதிபதியின் சகோதரர் கோட்டபய ராஜபக்ஷ அளித்த பரிந்துரையின் பேரில் தான் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.
வெளிநாடுகளில் தமிழ் அமைப்புகள் தீவிரவாத செயல்களில் ஈடுபடுவதாக எந்த ஓர் ஆதாரத்தையும் இலங்கை அரசால் வெளியிட முடியவில்லை.
உண்மையில் இலங்கையில் தடை செய்யப்பட்டுள்ள பிரிட்டிஷ் தமிழ் ஃபோரம், குளோபல் தமிழ் ஃபோரம், உலகத் தமிழ் இயக்கம் உள்ளிட்ட அமைப்புகளில் பல இலங்கை இனப்படுகொலைக்கு காரணமானவர்களை தண்டிக்க வேண்டும் என்பதற்காக போராடி வருகின்றன.
ஜெனீவாவில் நடந்த ஐ.நா. மனித உரிமைப் பேரவைக் கூட்டத்திலும் இலங்கைக்கு எதிராக சர்வதேச போர்க்குற்ற விசாரணை நடத்த வேண்டும் என்று இவை குரல் கொடுத்தன. உண்மை இவ்வாறு இருக்கும் போது ஈழத் தமிழர்களுக்காக போராடுகின்றனவா, அல்லது தீவிரவாத செயல்களில் ஈடுபடுகின்றனவா? என்பதைக் கூட அறிந்து கொள்ளாமல் இந்த அமைப்புகளை இந்தியா தடை செய்திருப்பது  மிகப்பெரிய அநீதியாகும்.

தமிழ் அமைப்புகளை தடை செய்ய வேண்டும் என்ற இலங்கையின் கோரிக்கையை அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா உள்ளிட்ட நாடுகள் ஒட்டுமொத்தமாக நிராகரித்து விட்டன. அதுமட்டுமின்றி, இனப்படுகொலை குற்றச்சாற்றுக்கு ஆளாகியுள்ள இலங்கைக்கு இத்தகைய கோரிக்கையை முன்வைக்க  எந்த தகுதியும் இல்லை என்று அமெரிக்க அரசு கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது.
இவ்வளவுக்கு பிறகும் இந்த அமைப்புகளையும், அதனுடன் தொடர்புடையவர்களையும் இந்திய அரசு தடை செய்திருப்பதை பார்க்கும்போது இலங்கையின் எல்லா துரோகங்களுக்கும் இந்தியா துணை போவதாகத் தான் எண்ண வேண்டியிருக்கிறது.
எனவே, இலங்கையில் தாளத்திற்கெல்லாம் கண்ணை மூடிக்கொண்டு தலையாட்டுவதை விடுத்து உண்மையை உணர்ந்து இந்திய அரசு செயல்பட வேண்டும்; 16 தமிழ் அமைப்புகள் மற்றும் 424 தனி நபர்கள் மீதான தடையை உடனே திரும்பப் பெற வேண்டும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

121Wa-5485l

SHARE