இலங்கையின் பொதுத்தேர்தல்! ஒரு பார்வை

150

 

 election1
 திங்கட்கிழமை காலை 7 மணிக்கு ஆரம்பித்து மாலை 4 மணிவரை நடைபெறவுள்ளது.

இந்தத்தேர்தலில் 196 நாடாளுமன்ற நேரடி ஆசனத்துக்காக 6151பேர் போட்டியிடுகின்றனர். இவர்களை தெரிவு செய்வதற்காக 15,044,490 வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளனர்.

இந்ததேர்தல் வாக்களிப்புக்கள் 22 மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள 12,314 வாக்களிப்பு நிலையங்களில் இடம்பெறவுள்ளன.

தேர்தலில் 21 அரசியல் கட்சிகளும் 201 சுயேட்சைக்குழுக்களும் போட்டியிடுகின்றன.

அரசியல் கட்சிகளின் சார்பில் 3,653 பேரும் சுயாதீனக் குழுக்களின் சார்பில் 2498 பேரும் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

இந்தநிலையில் முதல் அஞ்சல் மூல பெறுபெறு நாளை நள்ளிரவில் எதிர் பார்க்கப்படுகிறது.

வாக்களிப்பு நிலையங்களில் பணியாற்ற 2இலட்சம் அரச பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

25ஆயிரம் உள்ளூர் கண்காணிப்பாளர்கள் கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.  163 வெளிநாட்டுக் கண்காணிப்பாளர்களும் பணிகளை மேற்கொள்ளவுள்ளனர்.

70ஆயிரம் பொலிஸார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடவுள்ளனர்.

2014ஆம் ஆண்டு வாக்காளர் பதிவின்கீழ் இடம்பெறும் இந்த தேர்தலில் 56 தொகுதிகளில் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான வாக்களர்கள் பதிவு பெற்றுள்ளனர்.

இதில் நுவரெலிய மஸ்கெலிய தொகுதியில் அதிகப்படியான 302,836 வாக்காளர்கள் பதிவு பெற்றுள்ளனர்.

ஹோமாகமையில் 174,909 வாக்காளர்களும் கடுவெலயில் 173,355 வாக்காளர்களும் மட்டக்களப்பு தொகுதியில் 172,499 வாக்காளர்களும் பதிவு பெற்றுள்ளனர்.

யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறையில் ஆகக்குறைந்த 22,057 வாக்காளர்கள் உள்ளனர்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பும் ஐக்கிய தேசியக்கட்சியும் தமக்கே வெற்றி என்று கூறி வருகின்றன. எனினும் எந்தக்கட்சிக்கும் தனித்த பெரும்பான்மை கிடைக்கும் என்று எதிர்ப்பார்க்கமுடியாதநிலை ஏற்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியை பொறுத்த வரையில் கூடியது 105 ஆசனங்களை பெறும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பை பொறுத்தவரை தாம் 110 ஆசனங்களை பெறமுடியும் என்று கூறியுள்ளது

எனினும் ஜனாதிபதியின் கடந்த இரண்டு நாட்களில் நேரடியான அரசியல் நிலை நடவடிக்கைகள் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் ஆட்சியை ஏற்படுத்தாது என்றே நம்பப்படுகிறது.

ஜனாதிபதி ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தேசியபட்டியலில் தமக்கேற்றவாறு உறுப்பினர்களை பெயரிடும் வகையில் தமது கட்சித் தலைமை அதிகாரத்தை பயன்படுத்தியுள்ளார்.

இந்தநிலையில் வடக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆசனங்கள், தெற்கில் மக்கள் விடுதலை முன்னணியின் ஆசனங்கள், சரத் பொன்சேகாவின் ஆசனங்கள் என்பவற்றை கருத்திற் கொண்டும், ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பில் உள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தரப்பினரின் ஆதரவையும் கொண்டு பெரும்பாலும் தேசிய அரசாங்கம் ஒன்றே அமைக்கப்படும் வாய்ப்புக்கள் தெளிவாகியுள்ளன.

இது இலங்கையின் ஜனாதிபதி விரும்புகிறாரோ இல்லையோ சர்வதேசம் விரும்பும் ஒரு நகர்வு என்பது தெளிவு. இதில் இந்தியாவும் அமெரிக்காவும் முக்கியமான தீர்மானிக்கும் சக்திகள் என்பதில் ஐயமில்லை.

SHARE