இலங்கையில் காணாமல்போனவர்களின் தேசிய நினைவுதினம் திங்கட்கிழமை அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில், அந்த அமைப்பைச் சேர்ந்தவர்களது புகைப்படங்களுடன் அச்சுறுத்தல் சுவரொட்டிகள் கொழும்பு புறநகர்பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளன.
அதனால் நாளைய நிகழ்வுக்கு பொலிஸார் பாதுகாப்பு அளிக்கவேண்டும் என்று அதன் ஏற்பாட்டாளர்கள் கோரியுள்ளனர். தங்களை அச்சுறுத்தும் விதத்தில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருக்கின்ற காரணத்தினாலேயே இந்தக் கோரிக்கையை விடுப்பதாக ஏற்பாட்டாளர்கள் கூறுகின்றனர். கொழும்பின் புறநகர்ப் பகுதியான சீதுவ ரத்தொலுவ பிரதேசத்தில் காணாமல்போனவர்களின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபிக்கு முன்பாக ஒவ்வொரு ஆண்டும் இந்த நிகழ்வு நடந்துவருகின்றது.
இம்முறை 24வது ஆண்டாக நடக்கும் இந்தத் தேசிய நிகழ்வின் ஏற்பாட்டாளர்களை அச்சுறுத்தும் விதத்தில் அவர்களின் வீடுகளுக்கு அருகே சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருப்பதாக காணாமல்போனவர்களின் குடும்பங்களுக்கான அமைப்பின் தலைவர் பிரிட்டோ பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்வின் சிறப்புப் பேச்சாளராக கலந்துகொள்ளவுள்ள ஊடகவியலாளர் விக்டர் ஐவன், மனித உரிமைச் செயற்பாட்டாளர் நிமல்கா பெர்ணான்டோ, பாடகர் ஜயதிலக்க பண்டார உள்ளிட்ட பலரின் படங்களுடன் இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருக்கின்றன என அவர் கூறினார். நீர்கொழும்பிலும் கொழும்பிலும் இவ்வாறான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருக்கின்றன எனவும் அவர் கூறினார்.