இலங்கையில் சீரற்ற காலநிலையால் 17 பேர் பலி! இருவரை காணவில்லை!- தொடர்கிறது மழை

594

இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் இருவர் காணாமல் போயுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹண குறிப்பிட்டுள்ளார்.

மேலும் நாட்டின் பல பாகங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய கன மழை பெய்யக் கூடும் என வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.

அதேவேளை கன மழை, வெள்ளம் காரணமாக களுத்துமறை மாவட்டத்தில்; 100 ற்கும் மேற்பட்ட பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மலையகத்தில் 30 வீடுகள் நீரில் மூழ்கியுள்ள​ன!- மின்னல் தாக்கத்தால் 20 பேர் பாதிப்பு
மலையகத்தில் நேற்று இரவிலிருந்து கடும் மழை பெய்து வருவதால், நீர்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதுடன், பொதுமக்களின் வீடுகளும் நீரில் மூழ்கியுள்ளன.

அந்தவகையில் மவுஸ்ஸாக்கலை நீர்தேக்கத்திற்கு நீர் வழங்கும் மஸ்கெலியா ஆற்றின் நீர்மட்டம் அதிகரித்ததன் காரணமாக மஸ்கெலியா சாமிமலை, கவரவில கொலனி, மானெலுவ தோட்டம் ஆகிய பகுதிகளில் உள்ள 30 வீடுகள் நீரில் மூழ்கியுள்ளன.

இதனால் மக்களின் இயல்வு வாழ்கை பாதிக்கப்பட்டுள்ளது.இன்று அதிகாலை 4 மணியளவில் இப்பகுதியில் நீர்மட்டம் அதிகரித்ததன் காரணமாக இவ்வீடுகள் மூழ்கியதாக பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.

பாதிக்கப்பட்ட 70 பேர் தற்போது தற்காலிகமாக ஆலய மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

சில வீடுகளில் நீர் தேங்கி இருப்பதனால் அவர்களுக்கு உதவிகள் வழங்குவதற்காக இராணுவத்தினர் சம்பவ இடத்திற்கு வருகை தந்துள்ளனர்.

மேற்படி மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குவதற்கு நுவரெலியா மாவட்ட செயலாளர் காரியாலயம், அம்பகமுவ பிரதேச சபை காரியாலயம், தோட்ட நிர்வாகம் ஆகியன முன்வந்துள்ளமை குறிப்பிடத்தக்க்து.

தொடர்ந்து மழை பெய்வதனால் பொது மக்களை மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு நுவரெலியா மாவட்ட செயலாளர் டீ.பீ.ஜீ. குமாரசிரி தெரிவிக்கின்றார்.

இதேவேளை, மத்துகம, வலலாவிட்ட மாகந்த வித்தியாலயத்தில் மீது மின்னல் தாக்கியதில் ஆசிரியை ஒருவர் உட்பட 20 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதில் மாணவர்கள் இருவர் உட்பட ஆசிரியை, வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஏனையோரின் நிலைமை சிறிது நேரத்திற்கு பின்னர் வழமைக்கு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

936014_10152954976590019_464242197_n

 

SHARE