இலங்கையை ஆக்கிரமித்தது பரிசுத்த பாப்பரசரோ, கத்தோலிக்க திருச்சபையோ அல்ல கத்தோலிக்க திருச்சபை பௌத்தர்களை கொலை செய்யவில்லை: கத்தோலிக்க தர்மத்தை பாதுகாக்கும் தேசிய அமைப்பு.

438

கத்தோலிக்க திருச்சபை மத பிரச்சாரங்களை மேற்கொள்ள நாடுகளை ஆக்கிரமிக்கவோ, மக்களை கொலை செய்யவோ இல்லை என கத்தோலிக்க தர்மத்தை பாதுகாக்கும் தேசிய அமைப்பு தெரிவித்துள்ளது.

பரிசுத்த பாப்பரசர் இலங்கை பௌத்த மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் என பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்திருந்தமைக்கு பதிலளிக்கும் வகையில் அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை கூறியுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

தனிப்பட்ட பிரபலத்திற்காக பொது மக்களின் மனதை காயப்படுத்தும் பலன் தராத கருத்துக்களை வெளியிடுவதை தவிர்க்க வேண்டும்.

பாப்பரசர், பௌத்தர்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் என பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் அண்மையில் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.

அவர் வெளியிட்ட இந்த கருத்து தொடர்பில் எமது அமைப்பு உட்பட கத்தோலிக்க திருச்சபையின் உறுப்பினர்கள் ஆச்சரியத்திற்கும் கவலைக்கும் உள்ளாகினோம் என்பதை தெரிவித்து கொள்கிறேன்.

100 வருடங்களுக்கு முன்னர் நடைபெற்ற சம்பவம் தொடர்பாக மீண்டும் சர்ச்சைகளை ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களை முன்வைப்பது ஒரு புறம் ஆச்சரியத்திற்குரியது என்பதை எவரும் ஏற்றுக்கொள்வர்.

அதேபோல் 100 வருடங்களுக்கு முன்னர் நடந்த சம்பவம் தொடர்பில் அந்த சம்பவத்துடன் எந்த வகையிலும் சம்பந்தப்படாத நபரை அடிப்படையாக கொள்வதும், 100 வருடங்களுக்கு முன்னர் சம்பவம் காரணமாக கத்தோலிக்க மற்றும் பௌத்தர்கள் இடையிலான நல்லிணக்கத்திற்கு பாதிப்பு ஏற்படும் வகையில் கருத்துக்களை வெளியிடுவது பிரச்சினைக்குரியது.

கத்தோலிக்க திருச்சபை மதங்களை பரப்புவதற்காக நாடுகளை ஆக்கிரமிக்கவில்லை என்பதுடன் மக்களை கொலை செய்யவில்லை என்பதையும் திருச்சபையின் வரலாற்றை எடுத்து பார்த்தால் அறிந்து கொள்ள முடியும்.

கத்தோலிக்க மதத்தை தழுவிக்கொண்ட மன்னர்கள் மற்றும் நாடுகள் தமது தனிப்பட்ட அரசியல் மற்றும் பொருளாதார தேவைகளுக்காக மதத்தை முன்னிறுத்தி தமது உள்நோக்கத்திற்காக பல நாடுகளை ஆக்கிரமித்தனர்.

முதலில் இலங்கைக்கு வந்த போத்துகேயர்களின் நோக்கம் மதத்தை பரப்புவதல்ல. வர்த்தகத்திற்கான நாடுகளை ஆக்கிரமிப்பதே அவர்களின் நோக்கமாக இருந்தது.

இலங்கையை ஆக்கிரமித்தது பரிசுத்த பாப்பரசரோ, கத்தோலிக்க திருச்சபையோ அல்ல.

போத்துக்கல், ஒல்லாந்து, இங்கிலாந்து நாடுகளை ஆட்சி செய்த மன்னர்களின் தூதுவர்கள், அந்த அரசுகளுக்கு சொந்தமான படையினரே இலங்கையை ஆக்கிரமித்தனர்.

அவர்கள் கத்தோலிக்கம் அல்லது கிறிஸ்தவ மதத்தை தழுவியவர்கள் என்பதால், வத்திகான் மீது குற்றம் சுமத்த முடியாது.

இலங்கை ஆக்கிரமிப்பதற்காக விகாரைகளை அழித்து பௌத்தர்களை கொலை செய்தமை தொடர்பில் ஞானசார தேரர் கூறுவது போல் பரிசுத்த பாப்பரசர் மன்னிப்பு கோர வேண்டியதில்லை.

போத்துக்கல், ஒல்லாந்து மற்றும் இங்கிலாந்து அரச தலைவர்களே அதனை செய்ய வேண்டும் எனவும் கத்தோலிக்க தர்மத்தை பாதுகாக்கும் தேசிய அமைப்பு தெரிவித்துள்ளது.

 

SHARE