இலங்கை அரசியலில் சர்வதேச நாடுகள் ஒருபோதும் தமிழர் பிரச்சினையைத் தீர்க்கப்போவதில்லை- வடக்கு – கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் வரதராஜப் பெருமாள்

311

 

 

முரண்பாடான அரசியலைக் கடைப்பிடித்தே தமிழர்களின் உரிமைகளையும் அதிகாரங்களையும் காலத்துக்குக் காலம் இழந்து வந்துள்ளோம்” – என்று இணைந்த வடக்கு – கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் வரதராஜப் பெருமாள் தெரிவித்துள்ளார். தமிழ்ப் பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியின்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:- “1965 ஆம் ஆண்டுக்குப் பிற்பட்ட காலங்களில் தோன்றிய தமிழ்த் தேசிய இயக்கங்களும் சரி, அரசியல் கட்சிகளும் சரி ஒரு முரண்போக்கான அரசியலைக் கடைப்பிடித்தே வந்துள்ளன. இதன் காரணமாக மேலும் மேலும் தமிழர்கள் துன்பப்பட்டார்களே தவிர, அவர்களின் இனப்பிரச்சினைக்கோ அல்லது அடிப்படைப் பிரச்சினைக்கோ எந்தவொரு தீர்வும் தமிழ்த் தலைவர்களால் பெற்றுக்கொடுக்க முடியாமல் போனது.

VARATHARAJAPPERUMAL 2015 05 01

போர் முடிந்து ஆறு வடருங்கள் முடியும் தறுவாயில் இருகின்றோம். ஆனால், தமிழர்களின் நிலையில் எந்தவொரு மாற்றமும் இன்னமும் ஏற்படவில்லை. ஒரு அசெளகரியமான வாழ்வைத்தான் வாழ்கின்றனர். வடக்கு மாகாணத்தில் 40, 50 ஆயிரம் விதவைகள் இருக்கின்றனர். இவர்கள் வாழ்வில் என்ன மாற்றம் நிகழ்ந்துள்ளது. முரண்பாடான அரசியல் காரணமாகத்தான் கடந்த காலங்களில் பாரிய துன்பங்களைச் சந்திக்க நேரிட்டது. மீண்டும் மீண்டும் அவ்வாறான கொள்கைகளையே கடைப்பிடிப்பதனால் தமிழர்களின் பிரச்சினை தீரப்போவதில்லை. தமிழ்த் தலைமைத்துவங்கள் சர்வதேசத்தை நம்பி இலங்கையில் அரசியல் காய்நகர்த்தல்களை மேற்கொண்டு வருகின்றன.

சர்வதேச நாடுகள் தம்முடைய அரசியல் இலாபங்களுக்காகத்தான் செயற்பட்டு வருகின்றன. இலங்கை அரசியலில் சர்வதேச நாடுகள் ஒருபோதும் தமிழர் பிரச்சினையைத் தீர்க்கப்போவதில்லை. மாறாக, இலங்கை அரசியல், புவிசார் பிரச்சினைகளை வைத்து தங்களுடைய அதிகாரங்களைப் பயன்படுத்தவும், அரசியல் இலாபம் தேடவும் பார்க்கின்றனர். முரண்பாடான போக்கில் செயற்படுவதனால் சிங்கள மக்கள் மத்தியிலும் ஓர் எதிர்ப்புப் போக்கு தோன்றும். இதற்கு இடமளிக்கக்கூடாது. இருக்கின்ற அதிகாரங்களை முதலில் பயன்படுத்தவேண்டும்.

பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக தங்களுடைய உரிமைகளை வென்றெடுப்பதற்கான முயற்சியை மேற்கொள்ள வேண்டும். எனவே, சர்வதேச நாடுகளை நாடிச் செல்வதைவிட இலங்கை அரசியல் தலைமைகளுடனும் சிங்கள மக்களிடமும் சுமுகமான அல்லது ஆக்கபூர்வமான பேச்சுகளில் தமிழ்த் தலைமைத்துவங்கள் ஈடுபடுவதன் மூலம் தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கு தீர்வை எட்ட முடியும்

SHARE