இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் உறுப்புரிமை இரத்து

93
சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம் இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் உறுப்புரிமையை தற்காலிகமாக இரத்து செய்துள்ளது.

ஜனவரி 21ஆம் திகதி முதல் மறு அறிவிப்பு வரும் வரை இந்தத் தடை அமுலில் இருக்கும் என அந்த சம்மேளனம் தெரிவித்துள்ளது.

சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம் இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் முன்னாள் பொதுச் செயலாளர் உபாலி ஹேவகேவுக்கு கடிதம் மூலம் இந்தத் தடை குறித்து அறிவித்துள்ளது.

கடந்த ஜனவரி மாதம் 14ஆம் திகதி நடைபெற்ற உத்தியோகபூர்வ தேர்தலில் இலங்கை கால்பந்து சம்மேளனத்திற்கு புதிய அதிகாரிகள் சபை நியமிக்கப்பட்ட போதிலும், சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம் புதிய அதிகாரிகள் சபையை ஏற்றுக்கொள்ளாததால், முன்னாள் பொதுச் செயலாளரின் பெயருக்கு குறித்த கடிதத்தை அனுப்பியுள்ளது.

அண்மையில் நடைபெற்ற அலுவலகத் தேர்தலில் விளையாட்டுத்துறை அமைச்சர் மூன்றாம் தரப்பாக தலையிட்டமை, விளையாட்டு அமைச்சினால் வாக்குறுதியளிக்கப்பட்ட இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் அரசியலமைப்பில் திருத்தம் மேற்கொள்ளாமை மற்றும் சர்வதேச கால்பந்து சம்மேளனத்துடன் முன்னர் இணங்கிய விதிகளுக்கு அமைய செயற்படாமை போன்ற காரணங்களினால் இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த தடையின்படி, இலங்கை மற்றும் இலங்கை தேசிய அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் எந்த வீரரும், பயிற்றுவிப்பாளரும் அல்லது அதிகாரியும் சர்வதேச போட்டிகளிலோ அல்லது வேறு எந்த போட்டிகளிலோ பங்கேற்க முடியாது. – ada derana

SHARE