இலங்கை தமிழரசுக் கட்சியின் துணைத் தலைவர்களில் ஒருவரும் வவுனியா மாவட்ட கட்சியின் தலைவருமான டேவிட் நாகநாதனின் இறுதி வணக்க நிகழ்வு- தமிழரசு கட்சி இரங்கல்

485
கடந்த பதினோராம் நாள் காலமான இலங்கை தமிழரசுக் கட்சியின் துணைத் தலைவர்களில் ஒருவரும் வவுனியா மாவட்ட கட்சியின் தலைவருமான டேவிட் நாகநாதனின் இறுதி வணக்க நிகழ்வு இன்று வவுனியாவில் அவரது இல்லத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் பா.உறுப்பினருமான மாவை சேனாதிராசா, பொதுச் செயலாளர் துரைராசசிங்கம் மற்றும் பா.உறுப்பினர்களான சி.சிறீதரன், வினோ நோகராதலிங்கம், செல்வம் அடைக்கலநாதன்,

வடமாகாணசபையின் அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம், உறுப்பினர்களான அன்ரனி ஜெகநாதன், இலங்கை தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணித்தலைவர் சிவகரன், கட்சியின் மூத்த நிர்வாகிகள், மூத்த தொண்டர்கள் உட்பட பெருமளவானோர் கலந்து கொண்டு தங்கள் இறுதி வணக்கத்தை அமரர் டேவிட் நாகநாதனுக்கு செலுத்தினர்.

வடமாகாண சபையின் சுகாதார அமைச்சர் சத்தியலிங்கத்தின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், மறைந்த டேவிட் நாகநாதனுக்கு கட்சியின் உறுப்பினர்கள் அஞ்சலியுரைகளை நிகழ்த்தியுள்ளனர்.

1936ல் பிறந்த டேவிட் நாகநாதன் இலங்கை தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகரும் தமிழினத்தின் மூத்த தலைவரும் வழிகாட்டியுமான தந்தை செல்வாவின் அகிம்சை அரசியல் பாசறையில் வளர்ந்து மரணிக்கும் வரை தீவிரமாக தமிழின பற்றாளனாக, தொண்டனாக, தலைவர்களில் ஒருவராக உழைத்திருந்தார்.

பல்வேறு நெருக்கடிகள் அச்சுறுத்தல்கள் எதிர் வந்தபோதும் அவற்றை எதிர்கொண்டு கொள்கை வழுவாது கட்சியை வழி நடத்துவதிலும் தமிழின விடுதலைக்காக உழைப்பதிலும் தன்னைத்தேய்த்த ஓர் அகிம்சை போராளியாக வாழ்ந்து விடை பெற்றுள்ளார்.

தன்னலமற்ற மாமனிதனாக மக்களுடன் வாழ்ந்து மக்களுக்காக உழைத்து டேவிட் நாகநாதன் அமரத்துவம் அடைந்துள்ளாரென அவருக்கு இலங்கை தமிழரசு கட்சி புகழாரம் சூட்டியுள்ளது.

 

SHARE