இலங்கை தமிழர் உள்பட 10 பேரின் மரண தண்டனையை நிறுத்திவைக்க ஐ.நா. வேண்டுகோள்.

384

 

இலங்கை தமிழர் உள்பட 10 பேரின் மரண தண்டனையை நிறுத்திவைக்க இந்தோனேசியாவுக்கு ஐ.நா. பொதுச் செயலாளர் வேண்டுகோள்

போதைபொருள் கடத்தல் வழக்கில் இலங்கை தமிழர் உள்பட 10 பேருக்கும் மரண தண்டனையை நிறுத்திவைக்கும்படி ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூன், இந்தோனேஷியா அரசை கேட்டுக்கொண்டார்.
இந்தோனேசியாவில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சிக்கினால் மரண தண்டனை விதிக்கப்படுகிறது. போதைப்பொருள் கடத்தியதாக ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மயூரன் சுகுமாரன் (வயது 33) என்ற இலங்கை தமிழர் மற்றொரு ஆஸ்திரேலியர், நைஜீரியா, பிரேசில், கானா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 10 பேருக்கு மரண தண்டனை விதித்து பாலி நகர கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
இதில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 2 பேரை மீட்க ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அப்போட் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வி அடைந்தன. இதே போன்று போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சிக்கிய மற்றவர்களின் மனுக்களும் கோர்ட்டால் தள்ளுபடி செய்யப்பட்டன.
இதனையடுத்து 10 பேரும் கடந்த மாதம் 4-ந் தேதி பாதுகாப்பு மிகுந்த நுசகம்பன்கன் சிறைக்கு மாற்றப்பட்டனர். அவர்களுக்கு தண்டனை நிறைவேற்றுவதற்கான அனைத்து இறுதிகட்ட ஏற்பாடுகளும் செய்யப்பட்டுவிட்டன.
இவர்களுக்கு அனேகமாக நாளை (செவ்வாய்க்கிழமை) மரண தண்டனை நிறைவேற்றப்படலாம் என்று தெரிகிறது.
இதற்காக மரண தண்டனை கைதிகளிடம் பேசி ஆறுதல் கூற மத குருமார்கள், துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனையை நிறைவேற்றும் தொழிலாளிகள், சுட்டுக்கொன்ற பின்பு கைதிகளின் மரணத்தை உறுதிப்படுத்த மருத்துவர்கள் தயார் நிலையில் இருக்கும்படி உஷார்படுத்தப்பட்டு உள்ளனர்.
இந்த நிலையில் மரண தண்டனை நிறைவேற்றுவதை நிறுத்திவைக்க வேண்டும் என்று ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி மூன் இந்தோனேசிய ஜனாதிபதி ஜோகோ விடோடோவை கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுகுறித்து பான் கி மூனின் செய்தி தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:
உலக நாடுகளில் பெரும்பாலானவை மரண தண்டனையை ஒழிக்க நடவடிக்கை எடுத்து வரும் வேளையில், மரண தண்டனையை நிறைவேற்ற நீங்கள் எடுத்து வரும் நடவடிக்கைகளை அவசரமாக பரிசீலனை செய்து தற்காலிகமாக நிறுத்திவைக்க வேண்டுகிறேன்.
எத்தகைய சூழ்நிலையிலும் மரண தண்டனையை நிறைவேற்றக்கூடாது என்று ஐ.நா. சபை எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
சர்வதேச சட்டவிதிகளின்படி மிகக்கொடூரமான குற்றச்செயல்களில் ஈடுபடுவோருக்கு மட்டுமே அதிகபட்ச தண்டனையான மரண தண்டனை விதிக்கப்படுகிறது. குறிப்பாக சர்வதேச அளவில் கொலை குற்றங்களில் ஈடுபடுவோருக்கு இந்த தண்டனை விதிக்கப்படுகிறது.
ஆனால், போதைப்பொருள் கடத்துதல் போன்றவற்றை இதுபோன்ற கொடூரமான குற்றச்செயலாக கருத முடியாது. எனவே 10 பேருக்கும் மரணதண்டனை நிறைவேற்ற உங்களுடைய அரசு எடுத்து வரும் நடவடிக்கையை நிறுத்திவைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் அதில் கேட்டுக் கொண்டுள்ளார்.
மயூரனின் தாயார் ராஜனி, கண்ணீர் மல்க கூறுகையில், “கடந்த 10 ஆண்டுகளாக சிறையில் மயூரன் நல்ல மனிதனாக வாழ்கிறான். சிறையில் கூட ஓவியங்களை தீட்டி டி.சர்ட்டுகளில் அச்சடிக்கும் தொழில் செய்து பணம் சம்பாதித்து அதை போதை பழக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களின் மறுவாழ்வுக்காக செலவு செய்கிறான். எனவே அவனுக்கு இன்னும் ஒரு முறை உயிர் வாழ்கிற வாய்ப்பு தரப்பட வேண்டும்” என்றார்.
SHARE