இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்காத சங்கக்காரா, ஜெயவர்த்தன: திட்டித் தீர்க்கும் அர்ஜூன ரணதுங்க

308

இலங்கையின் நட்சத்திர கிரிக்கெட் வீரர்களான சங்கக்காரா, ஜெயவர்த்தன ஆகியோரை முன்னாள் இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் அர்ஜூன ரணதுங்க கடுமையாக சாடியுள்ளார்.

நேற்று நிட்டம்புவம்பில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் தான் அவர் இவ்வாறு கடுமையான விமர்சனம் செய்துள்ளார்.

அந்த நிகழ்ச்சியில் பேசிய துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சரும், முன்னாள் இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவருமான அர்ஜூன ரணதுங்க, நீண்ட காலத்திற்கு சங்கக்காராவும், ஜெயவர்த்தன துடுப்பாட்ட வரிசையில் முன்னணியில் விளையாடி வந்தனர்.

இதனால் இளம் வீரர்களுக்கு போதியளவு வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனாலே தற்போது துடுப்பாட்ட வரிசையில் இலங்கை அணி ஜொலிக்க முடியாமல் இருக்கிறது.

நான் விளையாடிய காலத்தில் முதலில் 4வது இடத்தில் களமிறங்கினேன். பின்னர் இறுதிக் காலங்களில் 7வது இடத்தில் ஆடியிருந்தேன்.

தற்போது கிரிக்கெட் வீரர்களின் ஒழுக்கம் பற்றி திருப்தி அடைய முடியாது. சங்கக்காரா 3வது மற்றும் ஜெயவர்த்தன 4வது இடத்திலும் நீண்ட காலம் துடுப்பெடுத்தாடியிருந்தனர்.

இளம் வீரர்கள் தங்களது திறமைகளை வளர்த்துக் கொள்ள இவர்கள் இருவரும் சந்தர்ப்பம் வழங்கவில்லை. இதற்கு கிரிக்கெட் நிர்வாகமும் பொறுப்பு சொல்ல வேண்டும்.

நாட்டை முதனிலைப்படுத்தியே விளையாட்டு வீரர்கள் போட்டிகளில் பங்கேற்க வேண்டும். பணத்தையும் ஏனைய நலன்களையும் முதன்மைப்படுத்தக் கூடாது என அவர் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

இந்த விமர்சனம் தொடர்பாக தற்போது இங்கிலாந்தின் கவுண்டிப் போட்டிகளில் பங்கேற்று வரும் ஜெயவர்த்தன மற்றும் சங்கக்காரா இதுவரையில் கருத்து ஏதும் வெளியிடவில்லை.

இதற்கு முன்னரும் முன்னாள் தலைவர் ரணதுங்க, சங்கக்காரா மற்றும் ஜெயவர்த்தன ஆகியோரை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE