இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி தருவதாக கூட்டமைப்பின் சார்பில் மட்டக்களப்பில் களமிறங்கும் அமல் உறுதி.

161
எதிர்காலத்தில் தமிழ் தேசியத்திற்காக முன்னெடுப்புகளை மேற்கொள்ளவுள்ள அதேவேளையில் இளைஞர்,யுவதிகளில் கல்வியை மேம்படுத்தி வேலைவாய்ப்பினை ஏற்படுத்தவேண்டும் என கூட்டமைப்பின் சார்பாக மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா தொகுதியில் களம் இறக்கப்பட்டுள்ள பிரபல ஆசிரியர் சதாசிவம் வியாளேந்திரன் தெரிவித்தார்.
நேற்று மாவட்ட செயலகத்தில் வேட்பாளர்களை அறிவிக்கும் நிகழ்வு நடைபெற்ற நிலையில் மாவட்ட செயலகத்தில் இருந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்களுக்கு அமோக ஆதரவு அளிக்கப்பட்டது. இதன்போது பெருமளவான இளைஞர் யுவதிகள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கல்குடா தொகுதியின் சார்பில் களம் இறக்கப்பட்டுள்ள பிரபல ஆசிரியர் சதாசிவம் வியாளேந்திரனுக்கு தங்களது ஆதரவினை வெளிப்படுத்தினார்கள்.
இதன்போது உரையாற்றிய அவர், எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் கல்விச்சமூகத்தில் இளம் சமூகத்தினை சேர்ந்த எனக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.இளைஞர்களுக்கான இந்த வாய்ப்பினை நாங்கள் சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
எதிர்வரும் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் நான்கு ஆசனங்களை கைப்பற்றுவதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பு கடுமையான முயற்சிகளை மேற்கொள்ளும். நாங்கள் தமிழ் தேசியம் என்னும் கொள்கையில் இருந்து இன்றுவரை விலகாத நிலையிலேயே இருந்து வருகின்றோம். எதிர்வரும் தேர்தலில் வெற்றிப் பெற்று தமிழ் தேசியத்திற்காகவும், இளைஞர் யுவதிகளின் மேம்பாட்டுக்காகவும் நூறு வீதம் பணியாற்றுவேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

SHARE