இஸ்லாமாபாத் நகரின் பாதுகாப்பு பொறுப்பு பாக். ராணுவத்திடம் ஒப்படைப்பு

416
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தின் பாதுகாப்பு பொறுப்பு வரும் ஆகஸ்ட் மாதம் முதல் தேதியில் இருந்து ராணுவப் படைகளிடம் ஒப்படைக்கப்படும் என்றும் இஸ்லாமாபாத் நகரின் சட்டம்- ஒழுங்கை நிர்வகித்து நிலைநாட்டும் பொறுப்பினை வரும் அக்டோபர் மாதம் வரை 3 மாத காலத்துக்கு ராணுவப் படைகளே ஏற்கும் எனவும் அந்நாட்டின் உள்துறை மந்திரி நிசார் அலி கான் அறிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு பாகிஸ்தான் பாராளுமன்றத்துக்கும் சில மாகாண சட்டசபைகளுக்கும் சேர்த்து நடத்தப்பட்ட தேதலில் தில்லுமுல்லு நடந்ததாக குற்றம்சாட்டி வரும் பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி தலைவரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான இம்ரான் கான், இது தொடர்பாக மக்களின் கவனத்த்தை ஈர்க்கும் பொருட்டு வரும் ஆகஸ்ட் மாதம் 14-ம் தேதி நாடு தழுவிய அளவில் பிரமாண்ட பேரணியை நடத்த திட்டமிட்டுள்ளார்.

இந்நிலையில், பாகிஸ்தான் பாராளுமன்ற வாசலில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த உள்துறை மந்திரி நிசார் அலிகான், ‘அரசியலமைப்பு சட்டத்தின் 245-வது பிரிவை பயன்படுத்தி, நாட்டின் முக்கிய பகுதிகளில் சட்டம்- ஒழுங்கை நிர்வகிக்கும் பொறுப்பை ராணுவத்திடம் ஒப்படைப்பது என்று கடந்த 4-ம் தேதி பிரதமர் நவாஸ் ஷரிப் முடிவு செய்ததாகவும், அதனையடுத்து, வரும் ஆகஸ்ட் மாதம் முதல் தேதியில் இருந்து தலைநகர் இஸ்லாமாபாத்தின் பாதுகாப்பு பொறுப்பு ராணுவத்திடம் ஒப்படைக்கப்படுகிறது’ என்றும் அறிவித்தார்.

வரும் 14-ம் தேதி பாகிஸ்தானின் சுதந்திர தின கொண்டாட்டத்தை சிறப்பாக நடத்த அரசு முயற்சித்து வரும் வேளையில், பாராளுமன்ற வளாகத்தின் வழியாக இம்ரான் காணின் பேரணியும் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளதால் அந்த பேரனியை நசுக்கும் விதமாக இந்த அறிவிப்பை உள்துறை மந்திரி வெளியிட்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

SHARE