ஈராக்கில் அமெரிக்க கூட்டுப்படைகள் நடத்திய வான்தாக்குதலில் ஐ.எஸ். இயக்கத்தின் முக்கிய தலைவர்கள் பலியாகி விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

382
ஈராக்கில் அமெரிக்க கூட்டுப்படைகள் நடத்திய வான்தாக்குதலில் ஐ.எஸ். இயக்கத்தின் முக்கிய தலைவர்கள் பலியாகி விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.ஈராக், சிரியாவில் ஷியா பிரிவு அரசுகளுக்கு எதிராக சன்னி பிரிவு ஐ.எஸ். தீவிரவாதிகள் போர்க்கொடி உயர்த்தி, அந்த நாடுகளின் படைகளை எதிர்த்து போரிட்டு வருகின்றனர். முக்கிய நகரங்களை கைப்பற்றியுள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள் இஸ்லாமிய தேசம் என்ற நாட்டினையும் பிரகடனம் செய்துள்ளனர்

இவ்விரு நாடுகளிலும் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு, அமெரிக்க கூட்டுப்படைகள் பதிலடி கொடுத்து வருகின்றன. ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகளை அடியோடு ஒழிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மேலும் 1,500 வீரர்களை அனுப்பி வைக்க அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, 2 தினங்களுக்கு முன் அனுமதி அளித்தார்.  ஐ.எஸ். தீவிரவாதிகளை குறிவைத்து அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் உள்பட உலக நாடுகள் தாக்குதல் நடத்தி வருகின்றன.

இந்த நிலையில் ஈராக்கில் அன்பார் மாகாணத்தில் காயிம் நகருக்கு அருகே ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தின் முக்கிய தலைவர்கள் நடத்திய கூட்டம் ஒன்றை குறிவைத்து அமெரிக்க கூட்டுப்படைகள் தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலில் ஏராளமான ஐ.எஸ். தீவிரவாதிகள் பலியாகி விட்டதாக ஈராக் பாதுகாப்பு அதிகாரி ஒருவரும், ராணுவ தளபதி ஒருவரும் கூறினர். பலியானவர்களில் ஐ.எஸ். இயக்கத்தின் பிராந்திய கவர்னர்கள் 2 பேரும் அடங்குவார்கள் என்று அவர்கள் தெரிவித்தனர்.

ஐ.எஸ். இயக்கத்தின் தலைவராக திகழ்ந்து வந்த அபுபக்கர் அல் பாக்தாதி, இந்த தாக்குதலில் கொல்லப்பட்டார் என்றும், காயம் அடைந்தார் என்றும் முரண்பட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன. அதே நேரத்தில் அந்த கூட்டத்தில் அவர் கலந்து கொண்டாரா என்பது குறித்தும் உறுதியான தகவல்கள் இல்லை.

இந்த தாக்குதலை அமெரிக்க ராணுவத்துறை அதிகாரி உறுதி செய்தார். இதுபற்றி அவர் கூறும்போது, ‘அமெரிக்க கூட்டுப்படை விமானம், ஐ.எஸ். தீவிரவாதிகள் கூட்டத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தியது. 10 வாகனங்கள் நாசமாக்கப்பட்டன’ என்றார். ஆனால் அவர் மொசூல் நகரில் தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவித்தார். காயிமுக்கும், மொசூலுக்கும் இடையே 180 மைல் தொலைவு உள்ளது. இப்படி தாக்குதல் நடந்த இடம் குறித்தும் முரண்பட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஆனால் தாக்குதலில் அபு முகன்னாத் அல் சவீதாவி என்ற அன்பார் மாகாண கவர்னரும், அபு ஜாக்ரா அல் மகமதி என்ற சிரியாவின் தெய்ர் இல் ஜாவுர் மாகாண கவர்னரும் கொல்லப்பட்டதாக ஈராக் அதிகாரிகள் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளனர்.

SHARE