ஈராக்கில் தீவிரவாதிகள் கைப்பற்றிய 2 நகரங்களை ராணுவம் மீட்டது

371

ஈராக்கில் பெரும் பகுதியை ஐ.எஸ் தீவிரவாதிகள் கைப்பற்றி தங்கள் கட்டுப் பாட்டில் வைத்துள்ளனர். இவற்றை மீட்கும் முயற்சியில் ஈராக் ராணுவமும், குர்த் ‘பெஷ்மெர்கா’ படையும் ஈடுபட்டுள்ளன.

இவர்களுக்கு அமெரிக்கா கூட்டு படைகள் குண்டு வீச்சு நடத்தி உதவி வருகின்றன. இதனால் பல நகரங்கள் மீண்டும் ஈராக் அரசின் கட்டுப்பாட்டுக்குள் வந்த வண்ணம் உள்ளன.

இந்த நிலையில் நேற்று தலைநகர் பாக்தாத் அருகே நடந்த துப்பாக்கி சண்டையில் ஐ.எஸ்.தீவிரவாதிகள் வசம் இருந்த 2 நகரங்கள் மீட்கப்பட்டுள்ளன. ஜலாவ்லா மற்றும் சாதியா என்ற அந்த நகரங்கள் பாக்தாத்தில் இருந்து 115 கி.மீட்டர் தூரத்தில் உள்ளன.

இதன் மூலம் பாக்தாத்துக்கு செல்லும் நெடுஞ்சாலையில் இருந்து தீவிரவாதிகள் அகற்றப்பட்டதால் பல மாதங்கள் தடைபட்டிருந்த போக்குவரத்து பாதிப்பு நீங்கியுள்ளது.

நேற்று நடந்த தாக்குதலில் 23 குர்த் பெஷ்மெர்கா படை வீரர்களும், 50 தீவிரவாதிகளும் உயிரிழந்தனர். 250–க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

இந்த தகவலை குர்த் கட்சியின் தேசபக்தி பிரிவு மூத்த தலைவர் மலா பக்தியார் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, சிரியாவில் ஐ.எஸ்.அமைப்பில் சேர்க்க சிறுவர்களை தீவிரவாதிகள் கடத்துகின்றனர். அவர்களின் தலைநகரான ரக்காவில் ஆயுத பயிற்சி மற்றும் மதபோதனை வகுப்புகள் நடத்துகின்றனர்.

சிறுவர்களை தற்கொலை படை தீவிரவாதி ஆகவும், ராணுவத்தை எதிர்த்து போர் புரியவும் தயார் செய்கின்றனர். இவர்கள் ஈராக்கில் தங்கள் கட்டுப் பாட்டில் உள்ள மொசூல் நகரில் சோதனை சாவடிகளில் ஆயுதங்களுடன் நிற்பதை காண முடிகிறது

SHARE