ஈராக்குக்கு புனித யாத்திரை சென்ற இந்திய தம்பதியர் பத்திரமாக திரும்பி வந்தனர்

501
ஈராக்கில் நடைபெற்று வரும் உள்நாட்டு போர் தீவிரமடைந்து வரும் நிலையில் அங்கு பணியாற்றும் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே, ஈராக்கின் வடக்கு பகுதியில் உள்ள மொசூல் நகரில் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த 40 இந்திய தொழிலாளர்களை ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் கடத்தி சென்றனர். 40 தொழிலாளர்களையும் தீவிரவாதிகளிடம் இருந்து மீட்க மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. மொசூல் புறநகரில் உள்ள பஞ்சாலை மற்றும் அரசு கட்டிடங்களில் 40 தொழிலாளர்களும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களை மீட்க ஈராக் வெளியுறவுத்துறை அதிகாரிகளுடன் மத்திய வெளியுறவுத் துறை அதிகாரிகள் தொடர்ந்து பேச்சு நடத்தியபடி உள்ளனர்.

இதற்கிடையே, கடத்தப்பட்ட 40 இந்திய தொழிலாளர்களில் ஒருவர் தீவிரவாதிகளிடம் இருந்து தப்பி வந்து விட்டார். அவர் ஈராக்கின் வடக்குப் பகுதியில் உள்ள முக்கிய நகரின் முகாமில் தங்கியிருப்பதாக தெரிகிறது. இந்நிலையில், ஈராக்கின் நஜப், கர்பலா ஆகிய பகுதிகளில் உள்ள இஸ்லாமிய வரலாற்றுடன் தொடர்புடைய புனித தலங்களுக்கு யாத்திரையாக மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த 80 பேர் கொண்ட பயணக்குழுவினர் கடந்த 3-ம் தேதி மும்பையில் இருந்து விமானம் மூலம் ஈராக்குக்கு சென்றனர்.

அங்கு சென்ற பிறகு உள்நாட்டுப் போர் தீவிரமடைந்த நிலையில் இந்தியாவில் உள்ள உறவினர்களை தொடர்பு கொள்ள முடியாமல் சிக்கித் தவித்த இந்த குழுவைச் சேர்ந்த முஹம்மது ரதலம்வாலா(45), அவரது மனைவி தஸ்லீம் ஆகியோர் பத்திரமாக இந்தியா வந்து சேர்ந்துள்ளனர்.

கர்பலா நகரில் இருந்து சுமார் ஆயிரம் கிலோ மீட்டர் தூரமுள்ள ஈரான் தலைநகர் டெஹ்ரானை பஸ் மூலம் சென்றடைந்த இவர்கள், அங்கிருந்து விமானம் மூலம் இந்தியாவுக்கு வந்து சேர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE