ஈராக் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை உறுப்பினர்களுக்கு அங்கீகாரம்

384
ஈராக்கில் கடந்த 2006ஆம் ஆண்டில் அமெரிக்க அரசின் உதவியுடன் பிரதமர் பதவிக்குத் தேர்வு செய்யப்பட்ட நூரி அல் மாலிகி தன்னிச்சையாக அதிகாரங்களை ஏற்றுக்கொண்டதுடன் பழங்குடி மற்றும் சன்னி சிறுபான்மையினரை ஒதுக்கி வைத்திருந்தார்.

இதனால் தற்போது அங்கு ஏற்பட்டுள்ள அரசியல் கலவரத்தில் ஈராக்கின் வடக்கு மற்றும் மேற்குப் பகுதி மக்கள் பெரும் போராட்டங்களைச் சந்தித்து வருகின்றனர். நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான மொசூலைக் கைப்பற்றியுள்ள போராளிகள் அங்கிருந்த அரசுத் துருப்புகளையும் சிதற அடித்துள்ளனர்.

இந்தக் கலவரங்களினால் ஆயிரக்கணக்கான மக்கள் பலியானதுடன் 1.5 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் இடங்களில் இருந்து வெளியேறியுள்ளனர்.  இதனிடையில் மூன்றாவது முறையாக பிரதமர் பதவியில் நீடிக்க மாலிகி பெரும் முயற்சி மேற்கொண்டார்.

அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் அங்கு அமைதியை எற்படுத்தும்வண்ணம் ஒரு மாற்றத்தைக் கொண்டுவர விரும்பி கடந்த திங்கட்கிழமை அன்று ஹைதர் அல் அபாதியைத் தேர்வு செய்துள்ளன.

இதனைத் தொடர்ந்து தேர்வு செய்யப்பட்ட அவரது அமைச்சரவை உறுப்பினர்களில் பெரும்பான்மையானோரையும் அந்நாட்டு நாடாளுமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது. பாதுகாப்பு மற்றும் உள்துறை அமைச்சகத்துக்கான புதிய தேர்வினை அறிவிக்க அல் அபாதி ஒரு வார கால அவகாசம் கேட்டுள்ளார்.

பதவியிலிருந்து வெளியேறும் பிரதமர் நூரி அல் மாலிகி, முன்னாள் பிரதமர் அயத் அல்லாவி, முன்னாள் சபாநாயகர் அல் நுஜெபி போன்றோர் அலங்கார துணை அதிபர் பதவிகளுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சரும், குர்திஷ் இன அரசியல்வாதியுமான ஹொஷ்யார் செபாரி மூன்று இணை பிரதமர்களில் ஒருவராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

SHARE