ஈழத்தமிழர் பிரச்சனைக்கு தனிஈழம் தான் தீர்வு என்று இதுவரை எந்தவொரு நாடும் ஒத்துக் கொள்ளவில்லை

728

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஈழத் தமிழரின் மேம்பட்ட மனித வாழ்வுக்காக ஏற்படுத்தப் பட்ட அரசியல் அமைப்பாகும். அவர்கள் எடுத்துக் கொண்ட பணி ஈழத் தமிழ் மக்களுக்கு இன, மத, பொருளாதார, அரசியல் ஒடுக்குமுறைகள் இல்லாத ஒரு கௌரவமான சுதந்திரமான நவீன முன்னேற்றங்களுடனான வாழ்வைப் பெற்றுக் கொடுப்பதுதான்.
அதைச் சாதிப்பதற்கு அவர்கள் என்ன செய்யலாம் என்ன செய்ய வேண்டும் என்று அறிய வேண்டுமாயின் முதலில் ஈழத் தமிழரின் இன்றைய நிலைமையைப் பற்றியும் அதற்கான காரணங்களையும் நாங்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.

ஈழத் தமிழர் 65 ஆண்டுகளாக இனவாத சிங்கள அரசினால் அடக்கி ஒடுக்கப்பட்டு கட்டமைக்கப்பட்ட இனவழிப்புக்கு உள்ளாகி வருகிறார்கள். நாற்படைகளையும் கொண்ட ஆயுதப் போராட்டத்தால் இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக நடைமுறையில் இருந்த ஒரு தமிழீழ அரசையும் லட்சக்கணக்கான மக்களையும் இலங்கை அரசு 22 நாடுகளின் உதவியோடு 2009 ம் ஆண்டு முற்றாக அழித்தது.

ஜனநாயகப் போர்வையில் ஒரு இராணுவ சர்வாதிகார மனிதாபிமானமற்ற குடும்ப ஆட்சி மகிந்த தலைமையில் நடைபெறுகிறது. தமிழருக்கு ஆயுத பலமோ அரசியற் பலமோ பொருளாதார பலமோ வேறு எந்தவிதமான பலமும் இல்லாத நிலையில் மிகச் சாதாரண சிப்பாய்களின் சப்பாத்துகளால் தமிழர் மிதிபடுகிறார்கள்.

ஜனநாயக விரோதமான மனிதாபிமானமற்ற பாசிச அடக்குமுறைச் சட்டங்களை; விலைகொடுத்து வாங்கிய 2/3 பெரும்பான்மையால் நிறைவேற்றி ஆட்சியை நடத்துகிறார்கள். கிஞ்சித்தும் மனிதாபிமானமே இல்லாத ஆட்சி தமிழரை மட்டுமன்றி மகிந்த ஆட்சியை எதிற்க்கும் சிங்களவரையும் தான் பாதித்துள்ளது.

947277_10201711149773292_766345515_n

வெளிநாட்டு வல்லரசுகளின் குறிப்பாக சீனாவின் பிடியில் சிக்குண்டு பொருளாதாரத்தாலும் கலாச்சாரச் சீர்கேடுகளாலும் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டு இலங்கையின் எதிர்காலம் கேள்விக்குறியாக இருப்பினும் தமிழின அழிப்பின் மூலம் தனிச் சிங்களப் பவுத்த நாட்டு உருவாக்கம் என்கின்ற வெறித்தனமான தன் போக்கில் மகிந்த மிக உறுதியாக உள்ளார். அவர் தனது கபட ராஜ தந்திரத்தால் சர்வதேசத்தையே ஏமாற்றி தனது நோக்கத்தை இதுவரை நிறைவேற்றி யுள்ளார். இனி எப்படியோ ?.

இதுதான் இன்றைய ஸ்ரீலங்காவினதும் ஈழத் தமிழரதும் நிலைமையாகும். அரசியல்பலம் ஆட்சிபலம் அதிகார பலம் என்ற வகையில் மகிந்த மலை போலவும் தமிழர் மடு போலவும் இருக்கிறோம். இந்த நிலை மாற வேண்டுமானால் எப்படி?.

மிக இலகுவாகவே பதில் கூறலாம். நாம் பலம் பெறவேண்டும், எதிரி மகிந்த பலவீனமடைய வேண்டும். விரைவாகவோ, மெதுவாகவோ அந்த நிலை தொடருமானால் ஒரு கட்டத்தில் எதிரியை விட எமது பலம் கூடிவிட்டால் நாம் வெற்றி அடைவோம் தானே. இதை மிகச் சரியாக விளங்கிக் கொண்டால் அந்த நடவடிக்கைக்காக அதாவது ஈழத் தமிழர் வாழ்வின் மேன்மைக்காக அமைக்கப்பட்ட தமிழ்த் தேசீயக் கூட்டமைப்பின் செயற்பாடுகள் எப்படி அமைய வேண்டும் என்றும் அப்படி அமைந்தனவா அமைகின்றனவா என்றும் நாம் விளங்கிக்கொள்வது இலகுவாய் இருக்கும்.

ஆம் அவர்களது நடவடிக்கைகள் நாம் பலம் பெறுவதற்கு அல்லது எதிரி பலவீனப் படுவதற்கு உதவுமானால் அவற்றைச் சரி என்றும் அல்லாவிட்டால் தவறு என்றும் எடுத்துக் கொள்ளலாம். அத்துடன் பலமாக இருந்து ஒரு ஆட்சியை நடத்திய நாம் அதை காப்பாற்ற முடியவில்லை என்பதை ஏற்றுக்கொண்டு, விட்ட தவறைத் திருத்திக் கொண்டாலன்றி நாம் வெற்றிபெற முடியாது.

அப்போது ஆயுத பலத்தில் வீரத்தில் நாம் மலைபோல இருந்தாலும் அரசியலில் குறிப்பாக சர்வதேச அரசியலில் கோட்டை விட்டதுதான் நாம் செய்த தவறு. முதலில் அதை ஏற்றுக்கொண்டு அதைச் சரிசெய்து கொள்ள வேண்டும். இல்லை நாம் தவறே விடவில்லை எஞ்சி உள்ள அதே அமைப்பைச் சேர்ந்த சிலரால் அப்படியேதான் தொடர வேண்டும் என்று அடம் பிடித்தால் தோல்வியும் அழிவும் நிட்சயமே. தன் வலிமையையும் எதிரியின் வலிமையையும் தன் துணை வலிமையையும் சீர்தூக்கி ஆராய்ந்து தான் செயற்பட வேண்டும் என்பது வள்ளுவர் போதனை. உண்மைக்கும் நேர்மைக்குமாக இனத்தின் விடிவிற்காக உயிரையே தியாகம் செய்தார்கள்.

தலை வணங்கிகிறோம். ஆனால் வள்ளுவன் போதனையை, உலக இயக்கத்தின் ஆதாரமான உலகாயத தர்மமான ராஜதந்திர நியதிகளை நாம் பின்பற்றவில்லை. அதைச் சரிசெய்யக் கூடிய ராஜதந்திரச் சிந்தனை யாளர்களின் தலைமையில் சர்வதேச ராஜதந்திரப் போரால்த்தான் எமது எதிர்காலத்தை ஒளிமயமாக்கலாம்.

இன்றைய நமது அடிப்படைக் குறிக்கோள் அப்படியான எமது சர்வ தேசச் செயற்பாடுகளால் நாம் பலம் பெற்றுக்கொண்டும் எதிரியைப் பலவீனப்படுத்திக் கொண்டும் இருப்பதுதான். அந்த நிலை தொடருமானால் என்றோ ஒருநாள் வெற்றி கிடைக்கத்தானே வேண்டும்.

நண்பர்களாகவிருந்த அமெரிக்காவும் பாகிஸ்தானும் இன்று எதிரிகள். எதிரிகளாக விருந்த சீனாவும் ரஷ்சியாவும் இன்று நண்பர்கள். நண்பர்களான ரஷ்சியாவும் இந்தியாவும் கூட இன்று எதிரணியில் நிற்கிறார்கள்.

மத்திய கிழக்குப் போரில் அமெரிக்கா வுடன் நின்ற சவூதிஅரேபியாகூட ஜெனீவாவில் அமெரிக்காவை எதிர்த்து வாக்களித்தது. 2009 வரை மகிந்தவோடு கைகோர்த்து போரை நடத்திய அமெரிக்கா ஐக்கிய இராச்சியம் ஐரோப்பிய நாடுகள் இன்று மகிந்தவிற்கெதிராக ஜெனீவாவில் பிரேரணை நிறைவேற்றினார்கள். அந்தப் பிரேரணை சம்பந்தமாக இருமுறை பரம எதிரிகளான இந்தியாவும் பாகிஸ்தானும் கைகோர்த்து ஒன்றாக வாக்களித்தார்கள்.

இவையெல்லாவற்றிற்கும் அடிப்படையான காரணங்களை நாம் சரிவரப் புரிந்து கொள்ளவில்லையாயின் நாம் சர்வதேச அரசியலில் வெற்றிபெற முடியாது. உலகில் யாரும் எமது நிரந்தர நண்பனும் இல்லை நிரந்தர எதிரியும் இல்லை.

எமக்குச் சாதகமான ஒரு குறிப்பிட்ட விடயத்தில் யார்யார் ஆதரவோ அப்போது மட்டும் அவர் நமது நண்பன். அடுத்த விடயத்தில் அதேநபர் ஆதரவில்லை என்றால் அப்போது அவர் எதிரிதான். அமெரிக்காவை நம்பலாமா இந்தியாவை நம்பலலாமா என்பதெல்லாம் அர்த்த மற்றவை.

இவ்வுலகில் தத்தம் நலன்கள்; அரசியல் பொருளாதார வல்லாதிக்க நலன்கள் அடிப்படையில்தான் சிந்திக்கிறார்கள்.நீதி தர்மம் நேர்மை அடிப்படையில் சிந்திப்ப தில்லை.அவை அவரவர் உள்ளத்தின் அடியில் எங்கோ இருந்தாலும் முன்னுரிமை பெறுவதில்லை.

ஈழத்தமிழருக்காக நீதி நியாத்தின் அடிப்படையில் செயற்பட உலகில் எவரும் இல்லை. தத்தம் நன்மைக்கு எது தேவையோ அதைத்தான் அவர்கள் செய்வார்கள். அவரவர் தத்தம் நன்மைக்காக செய்பவற்றில் எதெது எமக்கும் நன்மையோ அவற்றோடு நாமும் சேர்ந்து நன்மையில் பங்கெடுத்துக் கொள்வதுதான் உலக நியதியே தவிர வெறும் உணர்ச்சிவசமான நீதிபேசி பலமற்ற நிலையில் சவால் விடுவது வெற்றியளிக்காது.

ஒவ்வொரு விடயத்தையும் ஒவ்வொரு நாடும் தத்தம் நலன்கள் அடிப்படையில் எவ்வாறு அணுகுவார்கள் என்பதை உணர்ந்து அதன் அடிப்படையில் சமயோசிதமாகச் சிந்தித்து நாம் செயற்படவேண்டும். மற்றவர் நலன்களுக்குப் பாதகமில்லாமல் அவர்கள் நலன் களோடு எமக்கும் எப்படி நலன்களைக் கொண்டுவரலாம் என்பதே ராஜதந்திரமாகும்.

ஜெனீவாத் தீர்மானம்

உலக நாடுகளின் மனோநிலையை எடுத்துக் காட்டும் அந்தத் தீர்மானத்தில் இருந்து நாம் கற்றுக்கொள்வ தென்ன?. இனஅழிப்பு தேசீயஇனம் என்னும் சொற்பதங்கள் மிகக் கவனமாகத் தவிர்க்கப்பட்டு தமிழர் இனரீதியாகத் தாக்கப் படுகிறார்கள் என்ற உண்மையையும் மறைத்துள்ளார்கள்.

காரணம் அவை தனிநாடு கோரிக்கைக்கு இட்டுச் செல்லலாம் என்பதால்த்தான். அதாவது எக்காரணம் கொண்டும் தனிநாடு அமையக் கூடாதென்பது தான் அவர்களின் முடிந்தமுடிவு. தமிழருக்கு இழைக்கப்பட்ட அனைத்துப் பாதகங்களையும் ஏற்றுக்கொண்டாலும் அது ஸ்ரீலங்கா அரசு தனது பிரசைகளுக்குச் செய்த கொடுமையாகவே உலகம் நோக்க விரும்புகிறது. உலகின் மிகப் பெரும்பாலான நாடுகளில் பல இனங்கள் ஒற்றுமையாக வாழ்கிறார்கள்.

இனப்பிரச்சனைக்கு இருநாடு தீர்வல்ல என்பதே சர்வதேச முடிவாக உள்ளது. இலங்கையில் ஒரு முறையான ஆட்சியை ஏற்படுத்துவதன் மூலம் பிரச்சனைகளைத் தீர்க்கலாம் என்று நம்புகிறார்கள். அதைவிட மிக முக்கியமாக தனிநாடு அமைவது அவர்கள் பார்வையில் தமது சர்வதேச நலன் களோடு ஒத்துப் போகவில்லை என்பதாகும். இலங்கையில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்து வதாலும் தொடர்ந்து அழுத்தங்களைக் கொடுத்து தமக்குச் சார்பாக சிறிலங்காவை மாற்ற முடியும் என்றும் நம்புகிறாகள்.

தமது பொருளாதார நலன்களுக்காக தம்மைச் சார்ந்த நாடும் பொருளாதாரத்தில் ஓங்கவேண்டும்; ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு நாட்டில் அமைதி நிலவ வேண்டும் என்பதையும் அவர்கள் கவனத்தில் கொண்டுள்ளார்கள்.

அமெரிக்க அணியினர் தமது தேவைக்காகக் கொண்டுவந்த அந்தத் தீர்மானத்தை என்ன விதத்தில் எவ்வளவுக்கு நமக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்றுதான் நாம் செயற்பட வேண்டுமே தவிர அதைப் புறக்கணிக்க வேண்டும் அமெரிக்காவை எதிற்க வேண்டும் இந்தியாவைப் பகைக்க வேண்டும் என்பதெல்லாம் தற்கொலைக்குச் சமம். அதில்த் தமிழ்த் தேசீயக் கூட்டமைப்பு தம்பங்கைச் சரிவரச் செய்யவில்லையா?.

2009ல் புலிகள் முற்றாக அழிக்கப்பட்டு விட்டார்கள் என்று ஸ்ரீலங்கா சொல்லிவிட்ட பின்பும் புலிகளைத் தடைசெய்த எத்தனையோ நாடுகளில் எந்தவொரு நாடும் இதுவரை புலிகளுக்கெதிரான தடையை நீக்கவில்லை. மாறாக அதைப் புதிப்பித்துக் கொண்டே இருக்கிறார்கள்.

ஈழத்தமிழர் பிரச்சனைக்கு தனிஈழம் தான் தீர்வு என்று இதுவரை எந்தவொரு நாடும் ஒத்துக் கொள்ளவில்லை. இந்த யதார்த்தத்தை உணராமல் நாம் ஒரு அங்குலம் கூட நகர முடியாது. இந்த யதார்த்தத்தின் அடிப்படையில் சர்வதேச நீரோட்டத்திற்கேற்ப நாம் எமது சொல்லாடலை செயற்பாடுகளை மாற்றிக்கொள்ள வேண்டும்.

சர்வதேசத்திற் கெதிராகப் போனால் மீண்டும் ஒரு முள்ளிவாய்க்கால்தான் நமக்குப் பரிசாகும். மக்களைக் கவர வேண்டும் என்பதற்காக எம்மில் புலிச்சாயம் பூசக்கூடாது. அதனால் அவர்களை நாம் நேசிக்கவில்லை என்று அர்த்தமாகாது. ஆயுதப் போராட்டத்தை மறுதலித்து ஜனநாயகக் கோட்பாடுகளின் அடிப்படையில்த்தான் எமது செயற்ப்பாடுகள் என்பதை உரத்து ஒலிக்கவேண்டும்.

எமது தேவை “எந்தவிதமான இன மத அரசியல் பொருளாதார ஒடுக்குமுறைகளும் இல்லாத உலகின் ஏனைய மக்களைப் போல் சுதந்திரமான கௌரவமான வாழ்வுக்கான, பெரும்பான்மையால் மாற்றமுடியாத நிரந்தரத் தீர்வு” என்று தான் சொல்லவேண்டும். தனிநாடு தான் இன்றைய நிலைமையில் அதற்கான தீர்வாக இருக்கும் என்பது எமது அனுபவ முடிவு. ஆனால் காலம் கனிந்து வரமுன் இப்போதே அதுமட்டும் தான் வழி என்று நாம் ஏன் சர்வதேசத்தோடு மோத வேண்டும்.

சர்வதேசம் எப்படியான முடிவை எடுக்கும் என்பதை நாம் இப்போதே கூற முடியாது. எந்தவழியாய் இருந்தால் என்ன எமது தேவை நிறைவேற நாம் உழைக்க வேண்டும். அடிப்படையில் நாம் பலம் பெறவேண்டும் எதிரி பலவீனப்பட வேண்டும். அதற்கான செயற்பாடுதான் இன்றைய தேவை. இந்த அடிப்படைகளில் தமிழ்த் தேசீயக் கூட்டமைப்பு சரிவரச் செயற்பட்டார்களா இல்லையா என்பதே எமது கேள்வியாகும்.

எதிரியைப் பலவீனப்படுத்துவது எப்படி?. ஒரேநேரத்தில் நாம் ஒரு எதிரியை மட்டும் தான் குறிவைக்க வேண்டும். எதிரியின் எதிரி நண்பன். சிங்களத் தரப்பில் எமக்கு முழுஆதரவாக எவருமே இல்லாவிட்டாலும் எமது இன்றைய முதல் எதிரி மகிந்ததான்.

மகிந்த அழிக்கப் படும்வரை மகிந்தவிற்கெதிரான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சக்திகளை நாம் எதிற்க்கக் கூடாது; மாறாக அவர்கள் ஆதரவைப் பெற்றுக்கொள்ள வேண்டும். பொன்சேகாவிற்கு வாக்களிக்கச் சொன்னதும் ரணிலின் ஆதரவை ஏற்பதும் ஏனைய மகிந்தவிற்கு எதிரானவர்களின் ஆதரவைப் பெறுவதும் எதிரி மகிந்தவைப் பலவீனப் படுத்தும் என்பதால் அவற்றைச் செய்ய வேண்டும்.

அதைத்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செய்தது, செய்கிறது. செய்யாவிட்டால்த்தான் பிழையாகும். முஸ்லீம் காங்கிரசையும் நம்பக்கம் இழுப்பது நமக்குப் பலம், எதிரிக்குப் பலவீனம். அதையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செய்கிறது. இந்தியா இப்போது எமக்கு ஆதரவில்லா

விட்டாலும் இந்தியாவின் தேவைகளுக்கு நாம் எதிரில்லாமல் உதவியாய் இருப்போம் என்பதை அவர்களுக்குப் புரிய வைத்து இந்தியாவை எம்பக்கம் திருப்பாதவரை எமக்கு எதிர் காலம் இல்லை. அதற்கு இந்திய அரசியல் மாற்றங்கள் கனியும் வரை காத்திருக்க வேண்டியும் வரலாம்.

ரஷ்சியா உட்பட ஆசியப் பிராந்தியம் இந்துசமுத்திரப் பிராந்தியம் முழுவதையும் தன் தலைமையில் இணைத்துக் கொண்டுள்ள சீனாவின் பிடியிலிருந்து இலங்கையை ஆவது விடுவித்து அதைத் தனது ஒரு செல்லப்பிள்ளையாக வைத்திருக்க விரும்பும் இந்தியாவும் அதே வழியில் சீன ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்த விரும்பும் அமெரிக்க அணியினரும் தான் எமக்கு உதவியாய் எமக்குப் பலமாகவும் எதிரி மகிந்தவைப் பலவீனப்படுத்தவும் உதவுவார்கள்.

வேறு மாற்று வழி இல்லை.ஆசியப் பிராந்தியத்தில் அமெரிக்க அணியினருக்கு ஓரளவாவது ஆதரவாக இருக்கும் ஒரே நாடான இந்தியாவை அமெரிக்க அணியினர் எக்காரணம் கொண்டும் எதிற்க்க மாட்டார்கள். இந்தியாவை எதிர்த்து நாம் அமெரிக்க அணியினரின் ஆதரவைப் பெற முடியாது. அப்படி இந்திய அமெரிக்க அணியினரின் ஆதரவை நாடும் நாம் ஓரளவு எமக்குப் பாதகமில்லாது அவர்களோடு ஒத்துழைக்க வேண்டியதும் தவிர்க்க முடியாதது தான்.

ஆகவே அவர்களோடு எவ்வளவுக்குப் பேரம்பேசி நாம் எம்மைப் பலப்படுத்தலாம் எதிரியை பலவீனப்படுத்தலாம் என்பதில்த்தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ராஜதந்திரச் செயற்பாடுகள் இருக்க வேண்டும். அதை அவர்கள் செய்தால் அதைப் பிழை என்று கூற முடியுமா?.

தமிழருக்கான தீர்வை தமிழரே நேரடியாகப் பெற்றால் என்ன, உலக உதவியால் பெற்றால் என்ன அன்றி உலகம் தானே பெற்றுக் கொடுத்தால் என்ன அது ஸ்ரீலங்கா அரசிடம் இருந்துதானே வரவேண்டும். அதாவது எப்படி யென்றாலும் இறுதியில் ஸ்ரீலங்கா அரசோடு பேசித்தான் பெறவேண்டும் என்பது யதார்த்தம். அதனால் ஒரு வெளிநாட்டு அனுசரணையில் அல்லது சர்வதேச அனுசரணை யில் சிறிலங்காவோடு பேசவேண்டும் என்பது தவிர்க்க முடியாததாகும். அதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செய்தால் குற்றமா?.

அமெரிக்கா தன் தேவைக்குக் கொண்டுவந்த ஜெனீவாப் பிரேரணையை தமிழரின் இனப் பிரச்னைத் தீர்வுக்கு அமேரிக்கா பிரேரணை கொண்டுவருகிறதென்று இல்லாத தொன்றைக் கூறிப் பின்னர் அமேரிக்கா நம்பிக்கைத் துரோகி இந்தியா எமது எதிரி என்று சன்னதம் கொள்வது சரிதானா?.

அமெரிக்கப் பிரேரணையில் தமிழ் வார்த்தை வரவில்லை சுயநிர்ணயம் வரவில்லை தனிநாடு வரவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதை ஆதரிக்கக் கூடாது அமெரிக்காவை எதிர்க்க வேணும் இந்தியாவுக்குப் போகக்கூடாது என்பது சரியான அணுகு முறையா?. வடமாகாண சபையால் தீர்வு வராது அரைகுறைத் தீர்வை ஏற்கக் கூடாது தேர்தலைப் பகிஷ்க்கரிக்க வேண்டும் என்றார்கள். அப்படிச் செய்திருந்தால் இப்போ எப்படி இருந்திருக்கும். அனந்தியும் சிவாஜிலிங்கமும் ஜெனீவா போய் இலங்கை திரும்ப முடியுமா?.

தமிழருக்கு பெரிதாக நன்மை செய்ய முடியா விட்டாலும் மகிந்த அரசின் இனவழிப்பை நிறுத்த முடியாவிட்டாலும் கட்டுப்படுத்த வாவது முடிந்துள்ள தல்லவா?.மக்கள் யாரும் போலிஷ் நிலையம் செல்லவே பயப்படும் நிலையில் மக்கள் சார்பாக மாகாண சபை உறுப்பினராவது சென்று முறையிட முடிகிற தல்லவா?. ஸ்ரீலங்கா செல்லும் வெளிநாட்டுத் தலைவர்கள் வடக்கே சென்று விக்னேஸ் வரனையும் கட்டாயம் சந்திக்க வேண்டும் என்று சந்திக்கும் வாய்ப்பு இருக்குமா?.

அதன் மூலம் செயற்பட முடியாத மாகாண சபையின் பலவீனத்தை அரசின் அழுங்குப் பிடியை வெளிநாடுகளுக்கும் புரிய வைக்க முடிந்துள்ளதல்லவா?.அரச உதவிகள் அதிகம் இல்லா விட்டாலும் மக்களை ஒன்றிணைத்து பல செயற்பாடுகளை முன்னெடுக்க முடிகிற தல்லவா?. சர்வதேச பார்வையில் மக்கள் பிரதிநிதி என்ற வகையில் கொடுமைகளைத் தட்டிக்கேட்கும் உரிமையாவது உள்ளதல்லவா?.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பலவீனப்படுத்த குமார் பொன்னம்பலம் அணியை உடைத்தெடுத்தது; ஸ்ரீதரன், அனந்தி, சிவாஜிலிங்கம் போன்றோரை உடைத்தெடுக்க முற்படுவது கூட்டமைப்புக் கட்சிகளிடையே விரிசலை ஏற்படுத்த முயல்வது எல்லாம் சரியான செயற்பாடுகளா?. ஜெனீவாத் தீர்மானத்திற்காக அமெரிக்கா தன் செல்வாக்கி னால் பல நாடுகளை மிரட்டியது என்றெல்லாம் கதை வருகிறது.

அது எப்படி இருந்தாலும் அமெரிக்க அணியினர் தம் இராஜதந்திரச் செயற்பாடுகளின் முழுப் பலத்தையும் பயன்படுத்தித் தான் பிரேரணையை வெல்லச் செய்தார்கள். எதிரிகள் மனித உரிமை ஆணையாளர் செயலக வெளிநாட்டு விசாரணையை நீக்க வேண்டுமென்று தனியான பிரேரணை கொண்டு வந்து தோற்றார்கள்.

இப்போ வரும் ஆபத்தைத் தடுக்க மகிந்த தன்னால் முடிந்த அனைத்தையும் செய்துகொண்டிருக்கின்றார். ஆனால் சில தமிழர் பிரேரணையில் எதுவுமே இல்லை அதைப் பகிஷ்கரிக்க வேண்டும் என்று ஜெனீவாவில் எதிர்ப் பிரசாரம் செய்து ஆதரவான இரண்டொரு நாடுகளையாவது குழப்பியது சரிதானா?.

சில தமிழ் நாட்டு அரசியல் வாதிகளையும் பணபலத்தால் தவறாக வழிநடத்தியதை ஏற்றுக்கொள்ளலாமா?. எமது பொது எதிரியோடு சேர்த்து இவர்களுக்கும் எதிராக நாம் நீச்சல் போடவேண்டிய துர்ப்பாக்கிய நிலை வேண்டும் தானா?.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மக்கள் பேராதரவைக் கொடுக்க வேண்டிய நிலையில் அவர்களுக்கு எதிராக மக்களை தவறாகத் தூண்டி விடுவதால் யாருக்கு நன்மை?. இவர்களின் பொய்ப்பிரச்சாரத்தை முறியடிக்க கூட்டமைப்பினரின் சக்தி வீண் விரயமாக வேண்டுமா?. இவர்களது இப்படியான செயற்பாடுகள் எம்மைப் பலவீனப் படுத்தி எதிரியைப் பலப்படுத்துவதை உணர முடியாதா?.

ராஜதந்திரச் செயற்பாடுகள் அவசியம் என்றாலும் அவை எல்லாவற்றையும் முழுமையாக அனைத்து மக்களாலும் புரிந்து கொள்ள முடியாது. அதனால் சிலவற்றைப் பகிரங்கப் படுத்த முடியாது. அரசியற் தலைவர்கள் ஏன் நேரம் பொருள் சக்தியைச் செலவழித்து நெடும்தூரம் பயணம் பண்ணி மற்ற அரசியற் தலைவர்களைத் தனியாகச் சந்திக்க வேண்டும்?. இருந்த இடத்தில் இருந்துகொண்டே நவீன தொழில்நுட்ப வாயிலாக உரையாட முடியாதா என்ன?. அந்த மேல்மட்டப் பேச்சுவார்த்தைகள் மூன்றாம் நபருக்குத் தெரியக்கூடாதென்பதற்காகத் தான் அப்படிச் செய்கிறார்கள்.

ஒபாமாவை நம்பேலாது அவர் இந்தியாவோடு என்ன பேசப்போறார் என்று எங்களுக்கும் விளங்கப்படுத்தித் தான் செய்யவேணும் என்று யாராவது கேட்பார்களா?. மன்மோகன்சிங் மலேசியாவில் மகிந்தவோடு என்ன கதைக்கப் போகிறார் என்று எங்களுக்கும் சொல்லி விளங்கப்படுத்த வேணும் என்று இந்தியர்கள் யாரும் கேட்பார்களா?.

சம்மந்தரை நம்பேலாது அவர் யாரோடு என்ன பேசப்போகிறார் என்று எங்களுக்கும் விளங்கப்படுத்தி எங்கள் சம்மதத் தோடுதான் பேசவேண்டும் என்று ஒருசிலர் அடம்பிடிக்கிறார்கள் என்றால் தமிழினத்தை யாரால்த்தான் காப்பாற்ற முடியும். சம்மந்தர் என்ன நேற்று முளைத்த காளானா?. அவரது மிக நீண்ட அரசியல் வாழ்வில் இருந்து அவர் எப்படியானவர் எப்படிச் செயற் படுவார் என்று உங்களுக்கு இன்னும் தெரியாதா?.

தம்மோடு வாழும் அவரை சாதாரண மக்கள் புரிந்துகொண்டுள்ளபோதும் அதை ஏற்கமறுக்கும் நீங்கள் யாருக்காக நிற்கிறீர்கள். சம்மந்தர், சுமந்திரன், விக்னேஸ்வரன் ஆகிய முன்னணிச் செயற்பாட்டாளரை ஏதுமறியா மக்கள் முன் சப்பித் துப்புவதால் இனத்திற்கு விடிவு வருமா?. நாம் பலம் பெற முடியுமா?. எதிரி பலவீனம் அடைவானா அல்லது அதனால்ப் பலம் பெறுவானா?. இந்தக் கோடரிக் காம்பு வேலை எதற்காக?. இவர்களது உள்நோக்கம் என்ன?.

இந்தியாவில் காங்கிரஸ் ஆட்சி எவ்வளவு அக்கிரமமாக இருப்பினும் அதற்கான காலம் முடியமுன் அதை இந்தியாவின் எதிரியாக யாரும் காட்டிக் கொடுக்க மாட்டார்கள். காரணம் அது ஒட்டுமொத்த இந்தியாவையும் தான் பாதிக்கும். தேவைப்பட்டால் சமயம் வரும் போது மக்கள் சரியான தீர்ப்பை வழங்குவார்கள்.

ஈழத்தமிழரைக் காப்பற்றும் பொறுப்பு புலம்பெயர் தமிழர் கையில்தான் உள்ளது என்று தலைமை சொன்னது. ஆனால் புலம்பெயர் தமிழர் சொல்வதைத்தான் ஈழத்தில் உள்ள தமிழர் ஏற்கவேண்டும் என்று சொன்னார்களா?. அவர்களுக்கு புலம் பெயர் தமிழர் உதவியாளரா?. அல்லது எசமானர்களா?.

அவர்களின் வலியையும் வேதனையையும் புரியாமல் தனிநாடு கேள் அல்லது செத்துமடி என்று சொல்லலாமா?. என்றோ கிடைக்கும் புரியாணி சாப்பிட வேண்டுமானால் இன்று கிடைக்கும் எதையாவது சாப்பிட்டு உயிரோடு இருக்க வேண்டும் தானே.

இறந்துவிட்ட பின் பிரியாணி யாருக்கு?. மகிந்தவின் இன அழிப்பு முடிந்தபின் தனி நாட்டை யாருக்கு எங்கே எப்படிப் பெறுவது?.
-TPN

SHARE