ஈழத்தின் முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட மனித உயிர்களின் ஓலம் அடங்கும் முன்பாகவே,மியான்மர் : மற்றுமொரு இனப்படுகொலை

373

 

ஈழத்தின் முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட மனித உயிர்களின் ஓலம் அடங்கும் முன்பாகவே, இதோ அதற்கு நிகரான இன்னொரு இனப்படுகொலை நிகழ்ந்து வருகிறது மியான்மரில். முன்பு பர்மா என்றழைக்கப்பட்ட இப்போதைய மியான்மரில் பௌத்தம்தான் பிரதான மதம். அங்கு வாழும் ரோஹிங்கியா முஸ்லிம்கள் சிறுபான்மையினர். இதுவரை கொல்லப்பட்டவர்கள், காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 20,000 என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் ஊடகங்களில் பெரிதாக இதுகுறித்த செய்திகள் வரவில்லை. இவ்வளவு பெரிய இனப்படுகொலை நடந்தபின்னும் உலகின் கவனம் மியான்மர் பக்கம் திரும்பவில்லை. இவை எல்லாமே ஈழத்தை நமக்கு நினைவுபடுத்துகின்றன. ஈழத்துக்காக ஒலித்த குரல்கள் எப்படி இலங்கைக்குள்ளும், தமிழ்நாட்டுக்குள்ளும் மட்டுமாக ஒலித்ததோ, அப்படியே ரோஹிங்கியா முஸ்லிம்களின் குரல்களும் சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்க்கவில்லை.
அகதிகளுக்கும் கூட ‘இது எங்கள் நாடு’ என்கிற உணர்வும் அங்கே திரும்பவும் சென்று வாழ முடியவில்லையே என்கிற ஏக்கமும் புலம் பெயர்ந்து வாழும் அகதிகளுக்கு இருக்கும். ஆனால் எந்த நாடென்றே தெரியாமல், எந்த நாட்டிலும் குடியுரிமை பெறாமல், ஒரு தேசிய இனமாகவும் ஐ.நா.சபையால் அங்கீகரிக்கப்படாமல் அநாதைகள் போல வாழிடத்திலேயே அலைய நேர்ந்ததுண்டா நீங்கள்? கண்ணெதிரே பெற்ற பிள்ளைகளையும், பெற்றோரையும் கொன்று, உடன்பிறந்த சகோதரியை ராணுவம் பாலியல் பலாத்காரம் செய்கையில் காப்பாற்ற வழிதெரியாமல் கதறியதுண்டா? நீங்களும் நானும் ஒரு பாதுகாப்பான சமூகத்தில் வாழ்கிறோம். ஆனால் மியான்மரில் உள்ள ரோஹிங்கியா முஸ்லிம்களின் நிலைமை இதுதான்.
எதற்காக இந்த படுகொலைகள்? மியான்மரின் ராகின் மாகாணத்தில் புத்த மதத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். இதைச் செய்தது என்று கூறி மூன்று முஸ்லிம்களை கைது செய்தது மியான்மர் அரசு. ஆனால் இளம்பெண்ணின் படுகொலைக்கு ரோஹிங்கியா முஸ்லிம்களை பழிவாங்கவேண்டும் என்று துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. மிகத் தீவிரமான இன எதிர்ப்புப் பிரசாரம் முடுக்கி விடப்பட்டது. முஸ்லிம்கள் மீதான வன்முறை தொடங்கியது. அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது.  தொடக்கத்தில் இருதரப்பிலும் உயிர்ச் சேதங்கள் இருந்தாலும் ஒரு கட்டத்தில் ராகின் பௌத்தர்களின் கை ஓங்கியது. கடைகள், கல்வி நிலையங்கள், வங்கிகள் என்று அனைத்தும் மூடப்பட்டன. ஊரடங்குச் சட்டம் முஸ்லிம்களை வீட்டுக்குள் முடக்கிப் போட்டதால், அவர்களை வேட்டையாடிய பௌத்த ராகின்களுக்கு மிக வசதியாகப் போய்விட்டது. அவர்களின் வீடுகளுக்குள்ளேயே சென்று அவர்களைக் கொன்றனர். ஊரடங்கு உத்தரவுக்கு ராகின் வன்முறையாளர்கள் செவிசாய்க்கவில்லை. காவல்துறையும் ராணுவமும் இவர்களுக்கு உதவின. உள்நாட்டில் வாழ வழியில்லாத முஸ்லிம்கள், உயிரைக் காத்துக்கொள்ள படகுகளில் வங்கதேசத்துக்கு அகதிகளாகச் சென்றனர். ஆனால் வங்கதேசமோ ஏற்கனவே 3 லட்சம் ரோஹிங்கியா அகதிகள் தங்கள் நாட்டில் இருப்பதால் மேற்கொண்டு அகதிகளை ஏற்றுக்கொள்ளமுடியாது என்று கூறி திருப்பி அனுப்பியது. நடுக்கடலில் போவதற்கு திக்கற்று அலைந்து திரிந்தே பசியிலும் பட்டினியிலும் நோயுற்றும் பலர் இறந்துபோயுள்ளனர். இது ஒருபுறம் என்றால் படகுகளில் தப்பித்துச் செல்லும் அகதிகளை குறிவைத்து ஹெலகாப்டர் மூலமும் தாக்குதல் நடத்தப்பட்டு கொல்லப்படுகிறார்கள். அகதிகளாகத் தப்பித்தவர்கள் கதி இதுவென்றால், உள்ளேயே இருந்தவர்கள் பேரினவாத குழுக்களிடம் சிக்கி தங்கள் உயிரை இழக்கின்றனர். படுகொலை செய்யப்பட்டு இறந்த முஸ்லிம்களின் தலைமுடியை அகற்றி மொட்டையடித்து, அவர்களுக்கு பௌத்த்த் துறவிகள் போன்று உடை அணிவிக்கப்பட்டு, புகைப்படங்கள் எடுக்கப்பட்டு முஸ்லிம்களால் கொல்லப்பட்ட்து போன்ற தோற்றம் உருவாக்கப்பட்டு கலவரங்கள் தூண்டப்படுவதாக சர்வதேச ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. ஆனால் இதை உண்மை என்று நம்பும் மியான்மர் நாட்டினர் முஸ்லிம்களுக்கெதிரான கலவரங்களில் தொடர்ந்து ஈடுபடுகின்றனர். ரோஹிங்கியா மக்கள் மத்தியில் வேலை செய்துகொண்டிருந்த தொண்டு நிறுவனமான கிலிஜிஷிணிகிழி ”இது போன்ற மோசமான நிலைமையை, நாம் இதற்கு முன்னர் சந்தித்திருக்கவில்லை. இனப்படுகொலை என்பதைக் குறிக்கும் சர்வதேச சட்டத்தினால் வரையறுக்கப் படக் கூடிய சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. ரோஹிங்கியா வங்காளிகள் என்ற இனம், மியான்மரில் அழிந்து கொண்டிருக்கிறது.” என்கிறது.
இந்த கோரத்தாக்குதல்களைக் கண்டித்து எகிப்து தலைநகர் கெய்ரோவில் லட்சக்கணக்கானோர் கலந்துகொண்ட போராட்டம் நடைபெற்றது. ஜெர்மன் தலைநகர் பெர்லினிலும் மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பாகிஸ்தான் அரசு இந்தப் படுகொலைகள் நிறுத்த மியான்மர் அரசை நிர்பந்திக்கவேண்டும் என்றும் அந்த நாட்டுடன் உள்ள ராஜிய உறவுகளைத் துண்டித்துக்கொள்ள வேண்டும் என்றும் தாலிபான்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அப்படிச் செய்யாவிட்டால், பாகிஸ்தானில் உள்ள மியான்மர் நாட்டினரைத் தாக்குவோம் என்றும் தாலிபான்கள் எச்சரித்துள்ளனர். மியான்மரில் உள்ள தனது பணியாளர்களை ஐ.நா.சபை திரும்ப அழைத்துக்கொண்ட்து. மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு தனது பார்வையாளர்களை மியான்மருக்குள் அனுமதிக்க வேண்டும் என்று மியான்மர் அரசைக் கேட்டுக்கொண்டிருக்கிறது. துருக்கி நாட்டு அரசு நிலைமையை நேரில் ஆய்வு செய்ய மியான்மருக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் அஹ்மத் தாவூத் ஓக்லுவை அனுப்பியது. ‘மேற்கு மியான்மரில் இனச் சுத்திகரிப்பு நடக்கிறது’ என்கிறது சவுதி அரேபியா பாகிஸ்தான் அதிபர் ஆஸிஃப் அலி சர்தாரி மியான்மர் அதிபர் தைன் சென்னுக்கு தாக்குதல்களை நிறுத்தக்கோரி கடிதம் எழுதினார். ஆனாலும் தாக்குதல்கள் நிற்கவில்லை. சீனாவும் இந்தியாவும் இதுகுறித்து கனத்த மௌனம் சாதிக்கின்றன. நோபல் பரிசு வென்ற மியான்மரின் எதிர்க்கட்சித் தலைவர் ஆங்-சாங்-சூ-கீயும் இது குறித்து மௌனம் சாதிக்கிறார். அமைதிக்கான நோபல் பரிசை வென்ற இன்னொருவரான தலாய் லாமாவும் இது குறித்து மௌனம் சாதிக்கின்றார். ஒருவேளை அமைதிக்கான நோபல் பரிசை, இதுபோன்ற சமயங்களில் அமைதியாய் இருப்பதற்காக வழங்கப்பட்டது என்று புரிந்துகொண்டார்களோ என்னவோ?
ரோஹிங்கியா முஸ்லிம்கள் 8 லட்சம் பேருக்கு குடியுரிமை வழங்கவில்லை மியான்மர் அரசு. திருமணம் செய்துகொள்ள ராணுவ உயர் அதிகாரிகளிடம் அனுமதி பெற வேண்டும்.  எல்லைக் காவல்படை உட்பட 4 இடங்களில் அனுமதிப் பத்திரம் பெறப்பட வேண்டும்.. திருமணம் செய்யாமல் ஓர் ஆணும் பெண்ணும் இணைந்து வாழ்வது அங்கு குற்றம். அப்படி வாழ்ந்து கருவுற்ற ஓர் இளம்பெண்ணின் கால்நடைகளையும் உடைமைகளையும் ராணுவத்தினர் அபகரித்துச் சென்ற சம்பவமும் நடந்தது. 2 குழந்தைகளுக்கு மேல் பெறக்கூடாது. மிகக் குறைவான ஊதியமே அவர்களுக்கு வழங்கப்படும். அவர்களுடைய நிலங்கள் பிடுங்கிக்கொள்ளப்படுகின்றன.
ஓரிடத்தில் இருந்து இன்னொரு இட்த்திற்கு நாட்டுக்குள்ளேயே இடம்பெயர அரசின் அனுமதியை அவர்கள் பெறவேண்டும். உயர்கல்வி வழங்கப்படுவதில்லை. பாஸ்போர்ட் கிடையாது. 7 வயது முதலே குழந்தைகள் தொழிலாளிகளாக்கப்படுகிறார்கள். நாட்டின் மிக அபாயகரமான, மோசமான தொழில்கள் செய்ய நிர்பந்திக்கப்படுகிறார்கள். பாலம் கட்டுவது, பாதைகளை சீரமைப்பது போன்ற பல கட்டுமானப் பணிகளிலும் இவர்களே குறைந்த கூலிகளில் அடிமைகள் போல வேலை வாங்கப்படுகிறார்கள். இவர்களின் வீடுகளுக்குள் எப்போது வேண்டுமானாலும் காவல்துறை நுழைந்து சோதனை செய்கிறது. அவர்கள் கூடும் இடங்களில் துப்பாக்கிச்சூடுகள் நடத்தப்படுகின்றன. ராணுவம் முஸ்லிம் பெண்களை பாலியல் வல்லாங்கு செய்வது வாடிக்கையாகிப் போனது. இத்தனை அடக்குமுறைகளைத் தாங்கிக்கொண்டிருக்கும் ஒரு சமூகம் இந்நேரம் பொங்கியெழுந்திருக்க வேண்டும். ஆனால், குர்துக்கள், பாலஸ்தீனியர்கள் போல அவர்களை வழிநடத்த ஒரு தலைவர் அவர்களுக்கு இல்லை என்பதால் அது நடக்கவில்லை.. ஆங்-சாங்-சூ-கீ போல ரோஹிங்கியாக்களுக்கு மக்களைக் கவர்ந்திழுக்கக் கூடிய தலைவர்கள் இல்லை. ’விஷீst யீக்ஷீவீமீஸீபீறீமீss ஜீமீஷீஜீறீமீ வீஸீ tலீமீ ஷ்ஷீக்ஷீறீபீ” என்று அகதிகளுக்கான ஐ.நா ஹைகமிஷனர் கிட்டி மெக்கின்ஸி இவர்களைக் கூறுகிறார்.
படகுகளில் தப்பித்து, கடலில் தத்தளித்து தடுமாறியவர்களைக் காப்பாற்றிக் கரைசேர்த்த்து இந்தோனேஷிய கடற்படை. மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் முகமது ஷஃபிருல்லாஹ் என்கிற சிறுவன ஊடகங்களிடம் கூறியது இது. ‘’நாங்கள் 200 பேர் தப்பித்து வந்தோம். எங்கள் மக்கள் பலர் சிறையில் வாடுகிறார்கள். எங்கள் குடும்பத்தின் நிலம் அபகரிக்கப்பட்டது. என் சகோதரன் காட்டுக்குள் இழுத்துச்செல்லப்பட்டு துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்துவிட்டான். அங்கேயுள்ள மக்களுக்கு மருத்துவ வசதிகளோ, உணவோ இல்லை”
மியான்மரில் நடப்பவை தொடர்பான விடியோ பதிவுகள் இணையத்தில் செய்தித்தொகுப்புகளாக்க் கிடைக்கின்றன. அவற்றை கண்கொண்டு பார்க்க முடியவில்லை. அத்தனை சித்திரவதைகள், மனித உரிமை மீறல்கள், படுகொலைகள். வங்கதேசத்தில் அனுமதி மறுக்கப்பட்டு திருப்பி அனுப்பப்படும் அகதிகள் நடுக்கடலில் படகுகளில் அமர்ந்து கதறியபடியே விண்ணை நோக்கி இரு கைகளையும் நீட்டி ‘அல்லாஹ்! இந்த வேதனை வேண்டாம். நாங்கள் எங்கு செல்வோம். எங்களை அழைத்துக்கொள்.’ என்று பிரார்த்திப்பதைப் பார்ப்பவர்களின் கல் மனமும் கரைந்துவிடும். இப்படி வங்கதேசத்தால் திருப்பி அனுப்பப்படும் படகுகளின் கதி என்னவென்பதே தெரியவில்லை.
இத்தனை பேரை பலிகொண்டிருக்கும் இந்த இனப்படுகொலை குறித்து இந்திய ஊடகங்களில் பெரும்பகுதி, அரசைப் போலவே மௌனம் சாதிக்கின்றன. சென்னையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் இந்த இனப்படுகொலைகளை எதிர்த்து ஓர் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதைத் தவிர பெரிய எதிர்வினைகளோ, ஊடகப்பதிவுகளோ தமிழகத்தில் இல்லை. இந்திய அளவிலும் இல்லை. மியான்மர் குறித்து தெரிந்துகொள்ள இணையம் மட்டுமே ஒரே ஒரு வழியாக இருக்கிறது . ஆனால் அதே இணையம்தான் மியான்மரில் முஸ்லிம்களுக்கெதிரான கலவரத்தைப் பரப்பவும் காரணமாக இருந்தது.
அண்டை நாடு என்கிற முறையில் இந்தப் படுகொலைகளைப் பார்த்துக்கொண்டு சும்மா இருக்கப்போகிறதா இந்தியா? அல்லது ஒரு கண்டன அறிக்கையாவது இந்திய அரசு வெளியிடுமா என்கிற எதிர்ப்பார்ப்பு இந்திய முஸ்லிம்களிடையே உள்ளது. அதையாவது நிறைவேற்றுமா அரசு?
SHARE