மகிந்த அடுத்த சனாதிபதித் தேர்தலில் போட்டியிட சட்டம் இடம் கொடுக்காவிடில் -சட்டத்தில் திருத்தம் கொண்டுவர முடியாவிடில்………..
ஜனாதிபதித் தேர்தலில் மூன்றாவது முறையாக ஜனாதிபதி மஹிந்த போட்டியிட முடியாது போனால், கோத்தபாயவை வேட்பாளராக நிறுத்துவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
கோத்தபாயவை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக்குவதே, மகிந்த ராஜபக்ஷவுக்கு மூன்றாது முறையாக போட்டியிட முடியாது என முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா முன்வைத்து வரும் சட்ட வாதத்தின் இறுதி இலக்கு என அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் கூறியதாக சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மகிந்த மூன்றாவது முறையாக போட்டியிட முடியுமா? முடியாதா? என்ற சட்ட விளக்கத்தை வழங்கும் அதிகாரம் உயர்நீதிமன்றத்திற்கே உள்ளது.
உயர்நீதிமன்றத்தின் பிரதம நீதியரசரான மொஹான் பீரிஸ், பாதுகாப்புச் செயலாளரின் நெருங்கிய ஆதரவாளர்.
பாதுகாப்பு அமைச்சின் ஆலோசகராக இருந்த மொஹான் பீரிஸை, பிரதம நீதியரசராக நியமிக்க வேண்டும் என்று பரிந்துரைத்தவர் கோத்தபாய எனக் கூறப்படுகிறது.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியாது போனால், அவரது ஆசியையும் பெற்று கோத்தபாய ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தும் நடவடிக்கைக்கு சரத் என் சில்வா மற்றும் கொழும்பில் உள்ள பிரதான விகாரை ஒன்றின் ஆதரவும் கிடைத்துள்ளது.
கோத்தபாய ராஜபக்ஷவை தேசிய தலைவராக்கும் நடவடிக்கைக்கு பொதுபல சேனாவும் ஆதரவு வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.