ஈ.என்.டி.எல்.எவ் ஒட்டுக்குழுவின் ஐரோப்பிய தலைவருக்கு பிரித்தானியாவில் மூன்றாண்டு சிறைத்தண்டனை!

431

 

kudu-musthapa-2சிங்கள-இந்திய புலனாய்வு நிறுவனங்களின் ஒட்டுக்குழுவான ஈ.என்.டி.எல்.எவ் ஆயுதக் குழுவின் ஐரோப்பிய தலைவரான குடு முஸ்தாபா என்றழைக்கப்படும் வீரையா ராம்ராஜிற்கு பிரித்தானிய குற்றவியல் பட்டய நீதிமன்றத்தால் மூன்றாண்டு கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இலண்டனில் இயங்கி வரும் கம்பியன் தூதரகத்தின் மூத்த அதிகாரிகளுடன் இணைந்து 4.8 மில்லியன் பவுண்கள் பெறுமதியான சுருட்டு இறக்குமதி வரிமோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட ராம்ராஜ் செவ்வாய்க்கிழமை இலண்டன் சதக் பகுதியில் இயங்கி வரும் குற்றவியல் பட்டய நீதிமன்றத்தால் குற்றவாளியாக இனம்காணப்பட்டார்.

இதனையடுத்து சிறையில் அடைக்கப்பட்ட இவருக்கு  நீதிமன்றத்தால் மூன்றாண்டு கால சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.

தமிழீழ தாயகத்தில் இந்தியப் படைகள் இயங்கிய 1987ஆம் ஆண்டு முதல் 1990 வரையான காலப்பகுதியில் படுகொலைகள், ஆட்கடத்தல்கள், ஆட்களைக் காணாமல் போகச் செய்தல், ஆட்பிடிப்புக்கள் எனப் பல்வேறு பாரதூரமான மனித உரிமைகளில் ஈடுபட்ட ஈ.என்.டி.எல்.எவ் ஒட்டுக்குழுவின் முக்கிய தலைவராக விளங்குபவர் ராம்ராஜ்.

1990ஆம் ஆண்டு தமிழீழத்தை விட்டு இந்தியப் படைகள் வெளியேறியதை அடுத்து நாட்டை விட்டுத் தப்பியோடிய இவர், பிரித்தானியாவில் இருந்தவாறு பல்வேறு தமிழ்த் தேசிய எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னின்று முன்னெடுத்தவர்.

சிங்கள-இந்திய புலனாய்வு நிறுவனங்களின் நிதியுதவியுடன் இலண்டனை தளமாகக் கொண்டு ரி.பி.சி என்ற வானொலியை நடத்திய இவர், அரசியல் ஆய்வு என்ற பெயரில் சமூக விரோதிகளையும், தேச விரோதிகளையும் ஒன்றிணைத்து தமிழ்த் தேசிய எதிர்ப்புக் கருத்துக்களையும், சிங்கள அரசுக்கு சார்பான பரப்புரைகளையும் முன்னெடுத்து வந்தவர்.

அத்தோடு தனது வானொலிக்கு மகிந்த ராஜபக்சவே நிதியுதவி வழங்குவதாகவும் பல இடங்களில் இவர் பகிரங்கமாகக் கூறி வந்தவர்.

ஊடகவியலாளர் என்ற முத்திரையைக் குத்தியவாறு 2009 மே 18இற்குப் பின்னர் தனது தமிழ்த் தேசிய எதிர்ப்பு முகத்தை மறைப்பதற்குப் பகீரத பிரயத்தனங்களை இவர் மேற்கொண்டு வந்ததோடு, தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்களாக முகமூடி அணிந்து புலம்பெயர் தேசங்களில் வசிக்கும் வங்கிக் கடன் அட்டை மோசடியாளர்கள் உட்பட பல சமூக விரோதிகள் இந்தியாவிற்கு பயணம் செய்வதற்கு இந்திய உள்ளக புலனாய்வு அமைப்பான ஐ.பி. நிறுவனத்துடன் தனக்கு உள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி ஏற்பாடுகளையும் இவர் புரிந்தார்.

இந்நிலையில் கம்பிய தூதரக அதிகாரிகளுடன் இணைந்து இவர் புரிந்த 4.8 மில்லியன் பவுண்கள் சுருட்டு வரிமோசடிக்காக இவருக்கு  பிரித்தானிய குற்றவியல் பட்டய நீதிமன்றத்தால் மூன்றாண்டு கால சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

பாரதூரமான குற்றச்செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளின் குடியுரிமையை இரத்துச் செய்யும் புதிய சட்டம் ஒன்றை விரைவில் நிறைவேற்றுவதற்கு பிரித்தானிய அரசு தயாராகி வரும் நிலையில், ஈ.என்.டி.எல்.எவ் ஒட்டுக்குழுவின் ஐரோப்பிய தலைவரான ராம்ராஜ் சிறையில் அடைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

 

SHARE