உக்ரைன் அமைதி ஒப்பந்தத்துக்கு முழு ஆதரவு: ரஷிய அதிபர் அறிவிப்பு

312
உக்ரைனின் கிழக்கு பகுதியில் கிளர்ச்சியாளர்களுக்கும், ராணுவத்துக்கும் இடையே கடந்த பிப்ரவரி மாதம் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது. ஆனால் அதையும் மீறி தற்போது அங்கே தாக்குதல்கள் தொடங்கி உள்ளன. இதனால் அங்கு மீண்டும் பதற்றம் ஏற்பட்டு உள்ளது.

இந்த நிலையில் அங்கு அமைதியை ஏற்படுத்தும் நடவடிக்கைக்கு ரஷியா ஆதரவளிக்கும் என அதிபர் விளாடிமிர் புதின் கூறியுள்ளார். இது தொடர்பாக இத்தாலி பத்திரிகை ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியின் போது கூறுகையில், ‘உக்ரைனில் அமைதி ஏற்படுத்தும் வகையில் போடப்பட்ட ‘மின்ஸ்க் ஒப்பந்தங்களை’ எந்த வித நிபந்தனையும் இன்றி அமல்படுத்த ரஷியா ஆர்வமாக உள்ளது. இதற்காக நாங்கள் முழு முயற்சி மேற்கொள்வோம்’ என்று கூறினார்.

அங்கு தற்போதைய தேக்க நிலைக்கு உக்ரைனே காரணம் என குற்றம் சாட்டிய அவர், இதற்கு தங்களால் எதுவும் செய்ய முடியாது என்றும் தெரிவித்தார். இதில் ஐரோப்பிய மற்றும் அமெரிக்க கூட்டாளிகளே தங்கள் செல்வாக்கை பயன்படுத்த வேண்டும் என்றும் புதின் கூறினார்.

உக்ரைனின் கிழக்கு பகுதி தாக்குதல்களுக்கு ரஷியாவே காரணம் என அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் குற்றம் சாட்டி வரும் நிலையில், ரஷிய அதிபரின் இந்த அறிவிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

SHARE