கிழக்கு உக்ரைனில் 10-க்கும் மேற்பட்ட நகரங்களில் அரசு கட்டிடங்களை ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் பிடித்து வைத்துள்ளனர். அங்கிருந்து அவர்கள் வெளியேற மறுத்து விட்டனர். அவர்களை தனது செல்வாக்கை பயன்படுத்தி ரஷியா வெளியேற்ற வேண்டும் என்று அமெரிக்கா நிர்ப்பந்தித்தாலும், ரஷியா இதில் தனக்கு தொடர்பே இல்லை என்கிற வகையில் நடந்து கொண்டு வருகிறது.
ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்களோ கிரிமியா போன்று வரும் 11-ந்தேதி பொதுவாக்கெடுப்பு நடத்தி, உக்ரைனிலிருந்து விடுதலை பெற்று ரஷியாவுடன் இணைய வேண்டும் என திட்டமிட்டுள்ளனர்.
இதற்கு இடையே ரஷிய ஆதரவாளர்களை வீழ்த்தி, மீண்டும் அரசு கட்டிடங்களை தன்வசப்படுத்த பாதுகாப்பு படையினர் தாக்குதல் தொடுத்து வருகின்றனர். குறிப்பாக ஸ்லாவியான்ஸ்க் நகரில் இருதரப்புக்கு இடையே பலத்த சண்டை நடந்து வருகிறது.
இந்த சண்டையில் ஒரேநாளில் குறைந்தது 9 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
இந்த நிலையில், அங்கு கருங்கடலோரப் பகுதியில் அமைந்துள்ள ஒடேஸ்சா என்ற நகரத்திலும் ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்களுக்கும், உக்ரைன் படையினருக்கும் இடையே பயங்கர சண்டை நடந்து வருகிறது.
இதில் அங்கு ஒரு அரசு கட்டிடத்துக்கு தீ வைக்கப்பட்டது. இந்த தீயினால் பெரும் புகை எழுந்தது. இதில் புகையில் சிக்கியும், தீயிலிருந்து உயிர்பிழைக்கும் ஆவலில் ஜன்னலில் இருந்து குதித்தும் பலர் உயிரிழந்தனர். மொத்தம் 31 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
இதுபற்றி உக்ரைன் உள்துறை அமைச்சகம் கூறுகையில், “இந்த தீயில் சிக்கி குறைந்தது 31 பேர் உயிரிழந்து விட்டனர். அந்தக்கட்டிடம் தீப்பற்றி எரிந்தபோது ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் அதனுள் இருந்தனர்” என்றார்.
இதற்கிடையே பல்வேறு நகரங்களில் உக்ரைன் பாதுகாப்பு படையினரின் கவச வாகனங்கள் நிலை கொண்டுள்ளன. ரஷிய ஆதரவாளர்கள் தங்கள் மக்களை கேடயமாகப் பயன்படுத்துவதாக உக்ரைன் குற்றம்சாட்டுகிறது. ஆனால் ஸ்லாவியான்ஸ்க் நகரில் உக்ரைன் படையினர் தண்டிக்கும் விதமாக அப்பாவி மக்கள் மீது வான்வழி தாக்குதல் நடத்தி உள்ளதாகவும், இது சர்வதேச அமைதி திட்டத்தை சீர்குலைப்பதாக அமைந்துள்ளதாகவும் கூறி ரஷியா தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது.