உண்மைகளை யாரும் மறைக்க முடியாது! – ச. வி. கிருபாகரன் – பிரான்ஸ்

733
ஐ.நா. மனித மனித உரிமை சபையின் 25வது கூட்டத்தை தொடர்ந்து அங்கு நடைபெற்ற பல உண்மைகளை மக்கள் அறிந்திருக்க வேணடுமென்ற காரணத்தினால், பல ஆதாரங்களுடன், “ஜெனிவா மனித உரிமை சபையில், கோமாளிகளின் கும்மாளமும், நாசகார வேலையும்” என்ற தலைப்பில் கட்டுரை எழுதியிருந்தேன்.

இக் கட்டுரையுடன் எனது மின்னஞ்சலும் சில இணையத்தளங்களில் வெளியிடப்பட்டிருந்த காரணத்தினால், எல்லாமாக 27 மின்னஞ்சல்கள் கிடைக்கப் பெற்றன. இதில் மூன்று மின்னஞ்சல்கள் தவிர்ந்த மற்றைய மின்னஞ்சல்கள் யாவும் எனது கட்டுரையை பாராட்டி எழுதியிருந்ததுடன், அங்கு நடைபெற்றவை பற்றி மேலும் எழுதுமாறும் வேண்டுகோள் விட்டிருந்தனர்.

இவற்றில் ஒரு மின்னஞ்சல், கோமாளிகள் எனக் குறிப்பிடும் நபர்களின் அரசியல் பிரவேசத்தை நன்றாக அறிந்தவர்களில்; நீங்களும் ஒருவர் என்பது எமக்கு தெரியுமென குறிப்பிடப்பட்டிருந்தது. இன்னுமொரு மின்னஞ்சல் இக் கோமாளிகள் தாம் இல்லையேல் தமிழர்களுக்கு அரசியலும் இல்லை, சுயநிர்ணய உரிமையும் இல்லை என எண்ணுகிறார்களா? என வினாவப்பட்டிருந்தது. வேறு ஒரு மின்னஞ்சலில், கோமாளிகள் மீண்டும் பாராளுமன்ற உறுப்பினர்களாக தெரிவாவதற்கு தலையால் நடக்கிறார்களென எழுதப்பட்டிருந்தது.

நடந்த ஒரு சம்பவத்தின் உண்மைகளை மக்களுக்கு எழுதுவதற்கு நான் யாரிடமும் அனுமதி பெறவேண்டிய அவசியம் இல்லை. முள்ளிவாய்க்காலின் பின்னர் இவர்கள் யாரிடம் அனுமதி பெற்று இந்த நாசகார வேலைகளை செய்கிறார்கள்?

ஸ்கைப்பில் வந்த தகவல்

இதேவேளை எனது சில நண்பர்கள் கூறியதாவது, சில இழிவு தளங்கள் என்னைப்பற்றி, தனிப்பட்ட முறையில் தாக்கியுள்ளதாகவும், இதற்கான வேண்டுகோளும், தகவல்களும் யாழ்ப்பாணத்திலிருந்து “ஸ்கைப்” மூலம் வந்ததாகவும் கூறினார்கள்.

ஆனால் இவ் இழிவு தளங்களினாலோ அல்லது, யாழ்ப்பாணத்திலிருந்து “ஸ்கைப்”; மூலம் கதைத்தவர்களினலோ, எனது கட்டுரையில் வெளியான எந்த தகவல்களையும், மறுக்க முடியவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.

உண்மையில் இவர்கள் இழிவுதளங்கள் அல்லாது நேர்மையான ஊடக தர்மத்தை பேணும் இணையத்தளங்களாக இருந்திருந்தால், ஜெனிவாவில் இக் கோமாளிகளினால், “பத்திரிகை மாநாடு” என்று பெயரில் கூட்டப்பட்ட பரப்புரை கூட்டத்தில் நடைபெற்ற உண்மைச் சம்பவங்களை, தணிக்கை செய்து வெளியிட்டவை பற்றி, இக் கோமாளிகளிடம், வினாவி, அதற்கான பதிலை கூறியிருப்பார்கள்.

அதற்கு மாறாக உண்மைகள் யதார்த்தங்களை மறைத்து, தனிப்பட்ட கற்பனை தாக்குதல்களை மேற்கொண்டிருக்க மாட்டார்கள். பானையிலிருந்தால் தானே அகப்பையில் வருவதற்கு.

சிறிலங்கா அரசு எங்கள் மீது பல தசாப்தங்களாக ஆங்கிலம், தமிழ், சிங்களம் ஆகிய மூன்று மொழிகளிலும் பல விதப்பட்ட குற்றச்சாட்டுக்களை தொலைக்காட்சி, வானொலி, பத்திரிகை போன்றவற்றின் மூலம் முன்வைத்து, இப்பொழுது சலிப்பு அடைந்துள்ளதுடன், இன்று என்ன செய்வதென தெரியாது திகிலடைந்துள்ளனர். இவற்றிற்கு மேலாக, இவ் இழிவு தளங்களினால் எமக்கு என்ன செய்ய முடியும்?

சந்திரனை பார்த்து நாய்கள் குலைப்பதும், மோதிரக் கையால் யாரும் எமக்கு குட்ட மாட்டர்களா? என ஏங்குவதும் எமக்குத் தெரியும்.  எலிகள் இல்லாத வீட்டில்; முள்ளிவாய்க்காலில் பின்னர் உதயமான தலைவர்களும், உளவாளி தொழிலை செய்யும், மிக அண்மையில் உருவாகிய செயற்பாட்டாளரும், ஊடகவியலாளர் என தமக்கு தாமாகவே பெயரிட்டவர்களும் சன்னதம் கொள்கிறார்கள். இதைவிட்டால் மோசடி ஊழியத்திற்கு இவர்களால் வேறு என்ன வேலை செய்ய முடியும்?

எனது “…………கோமாளிகளின் கும்மாளமும், நாசகார வேலையும்” என்ற கட்டுரையில் எந்த இடத்திலும் “துரோகி” என்ற பதமோ, அல்லது “சுமந்திரன்” என்ற பதமோ, பாவிக்கப்படவில்லை. அப்படியாக எழுதியிருந்தால், அதை மறுப்பவனும் அல்ல. கட்டுரையை ஒழுங்காக வாசிக்க தெரியாத இழிவு தளங்களுக்கு பார்ப்பதெல்லாம்……. தெரியுது.

இவை ஒரு புறமிருக்க, எனது கட்டுரையில் எழுதிய விடயங்களை சகலரும் முழுதாக ஏற்றுள்ளமைக்கு முதலில் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன். 25வது கூட்டத் தொடரிற்கு நேரில் சமூகமளித்தவர்களில், கோமாளிகள் உட்பட எவரும், என்னால் எழுதப்பட்ட விடயங்கள் உண்மைக்கு புறம்பானவை என்று குறை கூறவில்லை என்பதை, இக் கோமாளிகளும், இவர்களது பரிதாப நிலையை கண்டு உதவிய இழிவு தளங்களும் தெரிந்து கொள்ள வேண்டும்.

இவற்றிற்கு நடுவில், அவுஸ்திரேலியாவிலிருந்து ஒரு குழு, எரியும் நெருப்பிற்கு எண்ணெய் ஊற்றுகிறார்கள்.

இவ் இழிவு தளங்களுக்கும், யாழ்ப்பாணத்திலிருந்து “ஸ்கைப்”; மூலம் உத்தரவு கொடுத்தவர்களுக்கும் ஒன்றை மட்டும் மிக அழுத்தம் திருத்தமாக சொல்வது என்னவெனில், தனிப்பட்ட கற்பனைக் கதைகளை உங்களால் எழுத முடியுமானால், எம்மால் உங்கள் சிலருடைய கற்பனை கதைகள் அல்லாது, உண்மையான தனிப்பட்ட கதைகளை – இவர்களது போக்குவரத்து, நண்பர்கள், விருந்தோம்பல், தங்குமிடங்கள், நட்பு போன்ற பல விடயங்களை ஆதாரங்களுடன் எழுத முடியும். இப்படியான நிலை ஏற்பட்டால், சிலர் அரசியலிலிருந்தே ஒதுங்க வேண்டிய நிலை ஏற்படலாம்.

அர்த்தமற்ற இராணுவ ஆய்வும், பொருளாதர விடயங்களில் ஆங்கிலத்திலிருந்து தமிழிற்கு ‘ஈ அடிச்சான் கொப்பி’ செய்து களைத்து முடங்கியுள்ள, முகம் காட்ட விரும்பாத பெயர்வழிகளும், இவற்றிற்கு உடந்தையாகவுள்ளதாக நண்பர்கள் கூறினார்கள். இவர்களையும் வரவேற்கிறேன்.

மீசையில் மண்படவில்லையாம்!

இழிவு தளங்கள் நடத்தும் சில நபர் பற்றி நாம் தினமும் வாசித்து கொண்டுதான் இருக்கிறோம். தம்மீது தினமும் மேற்கொள்ளப்படும் குற்றச்சாட்டுகளுக்கு பதில் கூறமுடியாத இவர்கள், கோழைத்தனமாக அனாமதேயக் கட்டுரைகளை புலம்பெயர் தேசத்தின் ஆஸ்தான எழுத்தாளர் போலும், சுன்னாகத்து சந்தையில் நிற்கும் சண்டியர் போலும், தமது சிறிய அறிவிற்கு ஏற்ப கற்பனைக் கதைகளை வடிப்பது எமக்கு விசித்திரமான விடயம் அல்ல.

தனிப்பட்ட கதைகள் எழுதுவதனால், முதன் முதலில் நோர்வேயில், தமிழீழ விடுதலை புலிகளின் பொறுப்பாளர் பிரிகேடியர் தமிழ்ச்செல்வனை, இவர்கள் சந்தித்ததிலிருந்து பல உண்மை விடயங்களை எம்மால் எழுத முடியும். கண்ணாடி அறையில் தாம் இருக்கிறோம் என்பதை இவர்கள் மறந்தால், எம்மால் நினைவூட்ட முடியும்;!

இன்னுமொரு வேடிக்கை என்னவெனில், கடந்த தேர்தலில் படுதோல்வி அடைந்தவர்கள், முன்னைய தேர்தல்களின் புள்ளி விபரங்களை தொகுத்து, கடந்த தேர்தலில் தாம் தோல்வி அடையவில்லையென நிரூபிக்க முனைவது, “விழுந்தும் மீசையில் மண் படவில்லையென்ற” கதையாகவுள்ளது.

இவற்றை சிறிலங்காவின் தேர்தல் ஆணையாளருக்கு கொடுத்து மூன்று பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இவர்களால் பெற்றுக் கொள்ள முடியுமா?

மீண்டும் கூற விரும்புவதென்னவெனில், “பேய்க்காட்டப்படுகிறவர்கள் இருக்கும் வரை, பேய்க்காட்டுகிறவர்களும் இருப்பார்களே என்பதே உண்மை.

வெள்ளைக் கொடியின் உண்மை!

மட்டக்களப்பில் அம்பாறை மாவட்டத்தை சார்ந்த மறைந்த மாமனிதர் சந்திரநேருவின் பரம்பரையினர், கிழக்கில் விசேடமாக அம்பறையில் தமிழ் தேசிய அரசியலின் முன்னோடிகள் என்பதை யாவரும் அறிவார்கள்.

மறைந்த மாமனிதர் சந்திர நேருவின் துணிகரமான சேவையை தொடர்ந்து, இவரது மகன் சந்திரநேரு (யூனியர்), பாரளுமன்ற உறுப்பினராக திகழ்ந்தவர். கிழக்கில் தமிழ் தேசியம் வளர்ப்பது பேசுவது மிக கடினமான விடயம். இன்று சிங்கள பிரதேசமாக மாற்றப்பட்டு வரும் அம்பாறை மாவட்டத்தில் அரசியல் செய்வதற்கு விசேட திறமைகள் செல்வாக்குகள் வேண்டும்.

மிக அண்மையில் சந்திரநேரு யூனியருடன் உரையாடிய வேளையில், இவர் கூறியதாவது, பி. பி. சி. முன்னாள் செய்தியாளர் திருமதி பிரான்ஸிஸ் கரிசன் அவர்களினால் அண்மையில் ஒர் புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது. இதில் “வெள்ளைக் கொடி” விவகாரத்தில், தனது பெயரைவிட வேறு யாருடைய பெயரும் அதில் குறிப்பிடப்படவில்லையென்றும், ஆனால் வன்னியிலிருந்து அன்று வந்த தொலைபேசி அழைப்புக்களுக்கு பதில் கூறாமல், தொலைபேசியை அணைத்து வைத்தவர்கள், இன்று தம்மை வெள்ளைக் கொடி விவகாரத்தின் கதாநாயகர்களாக காட்ட முனைவது, புதுமையானதுவென கூறினார்.

வெள்ளை கொடி விவகாரம் என்பது எதிர்காலத்தில் போர்க்குற்ற விசாரணைக்கு முக்கியமானவை. ஆகையால் இவ் விவகாரத்தில் யார் யார் உண்மையில் சம்பந்தப்பட்டுள்ளார்கள் என்பதை, செவ்வி அல்லது நேரடி விவாதம் மூலமாக மக்களுக்கு சரியான செய்தியை கொடுப்பது ஊடகங்களின் கடமையாகும்.

6வது திருத்தச் சட்டம்

விடிய விடிய இராமன் கதை, விடிந்த பின்னர் இராமர் சீதைக்கு என்ன முறை என்பது தமிழ் பழமொழி.

தமிழர் கூட்மைப்பு உட்பட பெரும்பான்மையான தமிழர் ஒவ்வொருவரும, “தமிழ் ஈழ” இலட்சியத்தை மனதில் கொண்டவர்களாகவே வாழ்கின்றனார். இவ் விடயத்தில், நாம் 6வது திருத்தச் சட்டத்தினாலான அபாயங்கள், கஷ்டங்கள் பற்றி பல தடைவ பிரஸ்தாபித்த பொழுதெல்லாம், மக்களுக்கு அரசியல் டிமிக்கி காட்டியவர்கள், மிக அண்மையில் தான் 6வது திருத்தச் சட்டம் பற்றி ஒழுங்காக வாசித்தவர்கள் போல் தெரிகிறது. 6வது திருத்தச் சட்டம் இருக்கும் வரை தமிழ் ஈழம் சாத்தியமில்லையாம். இதை, 21ம் ஆண்டில் மிகப் பெரிய கண்டுபிடிப்பாக நாம் கொள்ளலாமா?

தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ஜெனிவா மனித உரிமைச் சபைக்கு வருவதில்லையென முன்பு குறை கூறியவர்கள், இன்று வடமாகாண சபையின் முதலமைச்சர் ஜெனிவா வர வேண்டுமென கூக்குரலிடுகிறார்கள்.

உண்மையை கூறுவதானால், வடமாகாண சபையின் முதலமைச்சர் திரு விக்னேஸ்வரனது தகமைக்கு, இவர் உலகில் எங்கும் செல்ல வேண்டிய அவசியமில்லை. உலக தலைவர்களே இவரை நேரில் சென்று சந்தித்தார்கள், சந்திப்பார்கள்.

கடந்த வருடம், பிரித்தானியாவின் பிரதமர் திரு டேவிட் கமரோன், ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் திருமதி நவநீதம்பிள்ளை ஆகியோருடன் வேறு பல நாட்டின் இராஜதந்திரிகளும் முதலமைச்சரை தினமும் அவரின் காரியலயத்திலே சந்தித்துக் கொண்டு இருக்கிறார்கள். அதுமட்டுமல்லாது, கடந்த வருடம் இந்தியாவின் பிரதமர், திரு மன்மோகன் சிங் அவர்களும் அங்கு செல்வதற்கு தயாரகியிருந்தார் என்பதை இவர்கள் அறியவில்லையா?

விடுதலைப் புலி முத்திரை

தாம் முன்வந்த பாதைகளை மறந்தவர்கள், தமிழ் தேசிய கூட்டமைப்பை தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் தொடக்கினார் என்ற ஒரு காரணத்திற்காக, தவறுகளை செய்யும் தமிழர் கூட்டமைப்பை தாம் தொடர்ந்து ஆதரிக்க வேண்டுமா என கருத்து கூறுகிறார்கள்.

இதே நபர்கள் இன்று புலம்பெயர் தேசத்தில் யாருடன் கூட்டு வைத்துள்ளோம் என்பதை ஒரு கணம் எண்ணுவதுண்டா? இவர்கள் புலம்பெயர் தேசங்களில் தொடர்பு வைத்துள்ளவர்களில் பெரும்பான்மையானோர்கள், தவறு ஒன்றும் செய்யாத நல்ல மனிதர்களா? ஆகையால் தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் விடயத்தில், இவர்கள் இரு வேறுபட்ட நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதை “அரசியல் விபச்சாரம்” என்று தான் கூறமுடியும்.

அது மட்டுமல்லாது, 2009 மே மாதத்திற்கு முன்னர், புலம் பெயர் தேசத்தில் எப்படியானவர்களுடன் தாம் வேலை செய்தோம், இன்றைய நிலையில் எப்படியானவர்களுடன் வேலை செய்து கொண்டிருக்கிறோம் என்பதை சிந்திக்க முடியாதவர்களாக இருக்க முடியாது.

தமிழ் தேசிய கூட்டமைப்பு

எனது இறுதிக் கட்டுரைக்கு கருத்து கூறியவர்களின் வேண்டுகோளுக்கு அமைய, இங்கு, தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஜெனிவா மனித உரிமைச் சபையின் பங்கு பற்றி மிகச் சுருக்கமாக கூற விரும்புகிறேன்.

தமிழ் தேசிய கூட்டமைப்பினரின் சில விடயங்களை கண்டித்து, கட்டுரைகள் எழுதியவனில் நானும் ஒருவன் என்பதை நேயர்கள் மறந்திருக்கமாட்டர்கள். இவ்வடிப்படையில், நான் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நண்பணும் அல்ல பகைவனும் அல்ல. யதார்த்தத்தை இங்கு கூற விரும்புகிறேன்.

ஜெனிவா மனித உரிமைச் சபையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்குபற்றியது பற்றி எழுதுவதானால் பல பக்கங்கள் எழுதலாம். அங்கு தமிழ் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான – திரு மாவை சேனாதிராஜா, திரு சிறிதரன், திரு சுரேஷ் பிரேமச்சந்திரன், திரு. செல்வம் அடைக்கலநாதன், திரு சுமந்திரன் ஆகியோருடன், முன்னாள் பாரளுமன்ற உறுப்பினரும், இன்றைய வடமாகாண சபை உறுப்பினருமான, திரு சிவாஜிலிங்கம், திருமதி அனந்தி சசிதரன் ஆகியோர் வருகை தந்திருந்தார்கள்.

இதேவேளை தவிர்க்க முடியாத சில காரணங்களினால, அங்கு வருகைதரவிருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான, திரு யோகேஸ்வரன், திரு சரவணபவன் ஆகியோர் இறுதி நேரத்தில் ஜெனிவாவிற்கான தமது பிரயாணத்தை ரத்து செய்தனர்.

தமிழ் தேசிய கூட்மைப்பின் பிரதிநிதிகளது வருகையை பல நாட்டு இராஜதந்திரிகள், ஐ. நா. வின் முக்கிய புள்ளிகள், சர்வதேச மனித உரிமை, மனித நேய அமைப்புக்களின் பிரதிநிதிகள், பன்னாட்டு பத்திரிகையாளர்கள் இவர்களை அன்போடு வரவேற்று, இலங்கைத்தீவின் வடக்கு கிழக்கில் வாழும் தமிழீழ மக்களது நாளாந்த பிரச்சினைகள், அரசியல் நெருக்கடிகள், சர்ச்சைகள், இடம்பெயர்ந்த மக்களதும், முன்னைய போராளிகளது நிலைமைகளை சரியான முறையில் அறிந்து கொண்டார்கள்.

ஐ.நா. மண்டபத்தில் நடைபெற்ற அமெரிக்கா தீர்மானம் பற்றிய சில முக்கிய கூட்டங்களில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பாக, திரு சுமந்திரன் கருத்துக்களை முன்வைத்து உரையாற்றியிருந்ததோடு, சிறிலங்கா மீதான அமெரிக்கத் தீர்மானத்தில் அதிகூடியளவு விடயங்களை உள்ளடக்குவதற்காக மிகவும் கடுமையான பரப்புரைகளை மேற்கொண்டனர்.

அமெரிக்கா தீர்மானம் பற்றிய ஓர் கூட்டத்தில், இராணுவம் வடமாகணத்திலிருந்து விலக்கப்பட வேண்டும் என்ற விடயம், தீர்மானத்திலிருந்து விலக்கப்படுவதை திரு சுமந்திரன் கடுமையாக எதிர்த்து உரையாற்றினார் என்பதை சபையிலிருந்த யாவருமே அறிவார்கள்.

அது மட்டுமல்லாது, இறுதி நேரத்தில், சில ஐ. நா. மனித உரிமை அங்கத்துவ நாடுகளுக்கு, அவசர பயணங்களை மேற்கொண்டு, அந்தந்த நாடுகளது நிலைப்பாடுகளை, அமெரிக்கத் தீர்மானத்திற்கு சார்பாக வாக்களிக்க வைத்தவர்கள் இவர்களே.

இத் தீர்மானம் மிக வெற்றியாக நிறைவேறுவதற்கு, தமிழ் தேசியக்  கூட்டமைப்பின் பிரதிநிகள் மிக கடுமையாக ஜெனிவாவில் உழைத்தனர் என்பதை அங்கிருந்த சகலரும காணக் கூடியதாகவிருந்தது.

டக்ளஸின் நாடகம்

அமெரிக்க அலன் தம்பதிகளை அன்று கடத்திய டக்ளஸ் தேவனந்தாவின் இன்றைய நாடகம் மிக புதுமையானது.

முன்னைய ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழு, இன்றைய ஐ.நா. மனித உரிமை சபை, ஆகியவற்றிற்கு இலங்கையிலிருந்து வருகை தந்த பல தமிழ் பிரதிநிதிகள், இலங்கையில் இன அழிப்பு நடைபெறுவதாகவும், நடை பெற்றுள்ளதாகவும் பிரதான மண்டபத்திலேயே பல தடவை, கூறியுள்ளார்கள்.

இப்படியான நிலையில், ஏன் இன்று மட்டும், ஐ.நா. மனித உரிமை சபையின் 25வது கூட்டத் தொடரில், உத்தியோகப்பற்றற்ற கூட்டமொன்றில், திருமதி அனந்தி சசிதரன் ஆற்றிய ஒரு சிறிய உரையை எடுத்து வைத்து டக்ளஸ் தேவனந்தா நாடாகம் ஆடுகிறார்? இவ்விடயத்தில் டக்ளஸின் போக்கு மிகவும் விளங்காத ஓர் புதிராகவுள்ளது.

யார் இந்த யாழ். சிவில் அரங்கு?

யாழ்ப்பாணத்திலிருந்து இயங்குவதாக கூறப்படும் சிவில் அரங்கு என்பது யார்?

வெளிநாடுகளில் நடைபெறும் மாநாடுகளுக்கு, இவ் சிவில் அரங்கு சார்பாக ஒருவர் தவிர்ந்த வேறு யாரும் கலந்து கொள்வதில்லை.

அது மட்டுமல்லாது, தமிழர் தேசிய கூட்மைப்பை வெற்றிகரமாக பிரித்த குழுவினர்களுடனேயே, இவர்கள் வெளிநாடுகளில் விடுதிகளில் தங்குவது மட்டுமல்லாது, அவர்கள் தோன்றும் மேடைகளில் மட்டுமே தோன்றி, அவர்களது கருத்திற்கு வக்காளத்து வாங்குபவர்களாக காணப்படுகிறார்கள்.

அப்படியானல், தமிழர் தேசிய கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்ற குழுவினர் தமது அரசியல் நிலைப்பாட்டிற்கு பக்கத் துணையாக ஆரம்பிக்கப்பட்டதா, இவ் சிவில் அரங்கு? அப்படி இல்லையானால், இவர்கள் எப்பொழுது ஆரம்பிக்கப்பட்டார்கள், இவர்கள் அரசியல் கலப்பற்றவர்களா என்ற பல கேள்விகள் உருவாகிறது.

இப்படியாக அரசியல் கட்சி ஒன்றுக்கு வக்காளத்து வாங்கும் சிவில் அரங்கு எனப்படுவோரின் துஷ்பிரயோகங்கள், சிறிலங்கா அரசினால் மற்றைய சங்கங்களை மிக இலகுவாக பயங்கரவாதப் பெயர் சூட்டவும், தடை செய்யவும், அதனைத் தொடர்ந்து நியாயப்படுத்தவும் வழிவகுக்கின்றது என்பதை இந்த யாழ் சிவில் அரங்கின் அங்கத்தவர்கள் தெரிந்திருக்கவில்லையா?

இவ் உண்மைகளை வெளிப்படையாக எழுதியற்காக என்னை திட்டி எந்த பிரயோசனமுமில்லை. மக்களுக்கு பித்தலாட்டல்கள் அற்ற தெளிவான விளக்கங்களை கொடுங்கள்.

tchrfrance@hotmail.com

 

SHARE