உயர்ந்த மலை சிகரத்தில் இருந்து விழுந்தும் 7 நாட்களாக உயிர் வாழ்ந்த அதிசய இந்தியர்

423
சிங்கப்பூரில் வாழ்ந்து வரும் இந்தியர்களில் ஒருவர் சஞ்சய் ராதாகிருஷ்ணன்(26). மலை ஏறுவதில் அதிக ஆர்வம் கொண்ட இவர் உலகில் உள்ள கடும் ஆபத்தான மலை சிகரங்களின் மீது எல்லாம் ஏறி பயிற்சி பெற்று வருகிறார்.

இதன் ஒரு கட்டமாக, கம்போடியா நாட்டில் உள்ள கம்ப்போங் ஸ்பியு பகுதியில் அமைந்துள்ள ஃப்னோம் அவுரல் மலையின் மீதுள்ள மிக உயர்ந்த சிகரத்தில் கடந்த வாரம் ஏறினார்.

சிகரத்தில் இருந்து கீழே இறங்கி வரும் போது, கால் சறுக்கி தடுமாறி பாதாளத்தில் உருண்டு விழுந்ததில் உடைகளை எல்லாம் கிழித்துக் கொண்டு, உடலில் காயங்களடைந்து, திரும்பி வரும் வழியறியாமல் 7 நாட்களாக வெறும் மலையருவி நீரை மட்டும் பருகி இவர் உயிர் வாழ்ந்துள்ளார்.

செல்போனின் பேட்டரி ‘சார்ஜ்’ தீர்ந்துப் போய், யாருடனும் தொடர்பு கொண்டு உதவிக்கு அழைக்க முடியாத நிலையில், கொடிய மலைப்பாம்புகளுக்கு இடையில் குளிரான கட்டாந்தரையில் படுத்துறங்கி, உடலின் 60 இடங்களில் ரத்தத்தை உறிஞ்சும் காட்டு அட்டை பூச்சிகளிடம் கடிபட்டு, மலை அருவி எங்கிருந்து புறப்பட்டு வருகிறதோ… அந்த வழித்தடத்தின் எதிர் திசையை நோக்கி மலை பாறைகளைகளில் ஏறி இறங்கியும், மரக்கிளைகளில் தொங்கித் தாவியும், உடல் சோர்ந்துப் போன நிலையிலும் விடா முயற்சியுடன் ஒரு வாரமாக மலையடிவாரத்துக்கு வரும் பாதையை தேடி, ஒரு வழியாக கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கம்போடியாவின் ஒரு குக்கிராமத்தை அவர் கண்டுபிடித்தார்.

மலையடிவாரம் வழியாக மோட்டார் சைக்கிளில் சென்ற ஒரு நபரிடம் ‘லிப்ட்’ கேட்டு அந்த கிராமத்தை சென்றடைந்தார்.

இதற்கிடையில், கடந்த மாதம் 30-ம் தேதி கம்போடியா நாட்டுக்கு மலையேறும் பயிற்சிக்காக சென்ற சஞ்சய் ராதாகிருஷ்ணனை காணவில்லை என்று அவரது உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தும், விளம்பரங்களை வெளியிட்டும் தேடி வந்துள்ளனர்.

தன்னை மோட்டார் சைக்கிளில் அழைத்து வந்த அந்த நண்பர் அளித்த ஒரு பழுக்காத வாழைக்காயை தின்று பசியாற்றிக் கொண்டு, ஒரு வாரத்துக்கு பின்னர் உணவு கிடைத்த மகிழ்ச்சியுடன் அருகாமையில் உள்ள கம்போங் ஸ்பியு போலீஸ் நிலையத்துக்கு சென்று, தனது செல்போனை ‘சார்ஜ்’ செய்து திறந்து பார்த்த போது, அவரை தேடியும் நலம் விசாரித்தும் அனுப்பப்பட்டிருந்த சுமார் 200 ‘பேஸ்புக்’ மற்றும் 300 ‘வாட்ஸப்’ குறுந்தகவல்களை கண்ட சஞ்சய் ராதாகிருஷ்ணன், மனம் நெகிழ்ந்துப் போனார்.

பல ஆண்டுகளுக்கு முன்னர் ‘127 ஹவர்ஸ்’ என்ற பெயரில் ஒரு ஆங்கிலப் படம் வெளியானது. அந்த படத்தின் கதாநாயகன் இதே போல் மலையேறும் பயிற்சியில் ஈடுபடும் போது, அவரது உடல் இரு மலை முகடுகளின் இடையில் சிக்கிக் கொள்ளும்.

அதில் இருந்து விடுபட, மலை இடுக்கில் மாட்டிக் கொண்ட தனது ஒரு கையைவெட்டி விட்டு, கதாநாயகன் உயிர் பிழைப்பார்.

அந்த படத்துக்கு இணையான ஒரு வார கால சாகசத்துக்கு பின்னர் உயிருடன் திரும்பி வந்துள்ள சஞ்சய் ராதாகிருஷ்ணன், தனக்கு நேர்ந்த ‘த்ரில்’ அனுபவத்தைப் பற்றி குறிப்பிடுகையில், ‘நான் சிக்கிக் கொண்ட இடம், மிகவும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக இருந்தது. கத்துவதாலோ.., கதறுவதாலோ.., அழுது புலம்புவதாலோ.., எனக்கு உதவி வந்து சேரப்போவதில்லை என்பது உறுதியாக தெரிந்து விட்டது.

ஆனால், அந்த 7 நாட்களாக சிங்கப்பூரில் என்ன நடந்தது? என்பதை தெரிந்துக் கொள்ளாமல் இருக்க நேர்ந்தது துயரமான அனுபவம். இந்த அனுபவத்தின் மூலம் நான் நிறைய கற்றுக் கொண்டேன்’ என்று சோர்வு கலந்த புன்னகையுடன் கூறுகிறார்.

SHARE