உலகக்கோப்பை கால்பந்து: பந்துகளை தயாரிக்கும் பணியில் பாகிஸ்தான் பெண்கள்

467
தென் அமெரிக்க நாடான பிரேசிலில் வரும் 12-ம் தேதி பிபா நடத்தும் உலகக் கோப்பை கால்பந்து போட்டி துவங்க உள்ளது. உலகமே ஆவலுடன் எதிர்நோக்கும் இந்த கால்பந்துத் திருவிழா அங்கு ஒரு மாதத்திற்கு நடக்க உள்ளது.

ஆனால் இந்தப் போட்டிக்குத் தேவையான பந்துகளைத் தயாரிக்கும் இறுதிக்கட்ட பணியில் மும்முரமாக உள்ள பாகிஸ்தான் கால்பந்து தரவரிசையில் உலகளவில் 159ஆவது இடத்தில் உள்ளது வியப்பை ஏற்படுத்தும் ஒரு விஷயமாகும்.

பாகிஸ்தானின் சியால்கோட் நகரில் உள்ள பார்வேர்ட் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் கடந்த 1995ஆம் ஆண்டிலிருந்து அடிடாஸ் நிறுவனத்திற்காக இந்த பந்துகளை தயாரித்து சப்ளை செய்துவருகின்றது. இங்கு பணிபுரியும் பெண்களுக்கு லியொநெல் மெஸ்சியையோ, தங்கள் நாடு இந்தப் போட்டியில் பங்கேற்காததோ தெரிய வாய்ப்பில்லை.

ஆனால் பிரேசிலும், குரேஷியாவும் அங்கு துவக்கும் முதல் போட்டியில் விளையாடப் பயன்படுத்தப்படுவது தாங்கள் தயாரிக்கும் பந்துகளாக இருக்கக்கூடும் என்பதுவே அவர்களுக்கு உற்சாகத்தைக் கொடுக்கின்றது.

கிரிக்கெட்டில் தீவிர விருப்பம் கொண்டுள்ள பாகிஸ்தானியர்களுக்கு கால்பந்து போட்டிகளின் மீது பெரிதளவான நாட்டம் இல்லாதபோதிலும் தங்களின் தயாரிப்புகள் பயன்படுத்தப்படுவதாலேயே இந்தப் போட்டிகளைக் காண இருப்பதாக அந்தப் பெண்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து தாங்கள் மிகவும் பெருமைப்படுவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.  பிரிட்டிஷ் காலனியாக இருந்த காலத்தில் பாகிஸ்தானில் தங்கியிருந்த பிரிட்டிஷ் வீரர்கள் கிழிந்த தங்களின் பந்தை சரி செய்யுமாறு ஒரு செருப்பு தைக்கும் தொழிலாளியிடம் கொடுக்க அதிலிருந்து இந்த வெற்றிகரமான தொழில் தொடங்கப்பட்டது என்று தகவல்கள் கூறுகின்றன.

ஆனால் குழந்தைத் தொழிலாளர்கள் பிரச்சினையினால் கடந்த 1990களில் இந்த நிறுவனம் முற்றிலும் மூடப்படும் ஒரு நிலைமை ஏற்பட்டது.தற்போது அடிடாஸ் உட்பட தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இந்த நிறுவனத்தின் நடைமுறையை நெருக்கமாகப் பின்பற்றி வருகின்றன.

இங்கு பணிபுரிவோர் தங்களின் வயது குறித்த அரசு அடையாளச் சான்றினை வைத்திருக்கவேண்டும் என்பது இங்கு விதிமுறையாக்கப்பட்டுள்ளது.

வெற்றிகரமாக இயங்கும் இந்த நிறுவனத் தயாரிப்பான கால்பந்துகள் சாம்பியன் லீக், ஜெர்மனியின் பண்டஸ்லிகா மற்றும் உலககோப்பை போட்டிகளில் பயன்படுத்தப்படுகின்றது என்பது அவர்கள் பெருமைப்படும் ஒரு செய்தியாகும்.

SHARE