உலகத் தரத்திலான அங்கீகாரத்தை தமிழ் சினிமா அடையும்: இயக்குநர் மகேந்திரன்….

342

உலகத் தரத்திலான அங்கீகாரத்தை தமிழ் சினிமா அடையும் என்று திரைப்பட இயக்குநர் மகேந்திரன் தெரிவித்தார். மேலும், தமிழ் சினிமா புரட்சிகரமான மாற்றங்களை அடையும் என்றும் அவர் தெரிவித்தார்.

திரைப்படத் தயாரிப்பாளர் யு.டி.வி. தனஞ்செயன் “புளு ஓஷன் பிலிம் அண்ட் டெலிவிஷன் அகாதெமி’ என்ற பெயரில் திரைப்படக் கல்லூரியை சென்னையில் தொடங்கியுள்ளார். சினிமாவின் அனைத்துத் துறைகள் குறித்த ஓராண்டு பட்டய படிப்புகள் ஜூலை மாதத்தில் தொடங்கவுள்ளன.

திரைப்பட இயக்குநர்கள் மகேந்திரன், பாக்யராஜ், நடிகர் நாசர், ஒளிப்பதிவாளர் மது அம்பாட், படத்தொகுப்பாளர் பி.லெனின், தயாரிப்பாளர் டி.சிவா, தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பாளர் குட்டி பத்மினி, கார்ட்டூனிஸ்ட் மதன் உள்ளிட்ட ஆளுமைகளின் கீழ் அந்தந்தத் துறை சார்ந்த 21 படைப்பாளிகள் மாணவர்களுக்கு வகுப்புகள் எடுக்கவுள்ளனர்.

இதன் தொடக்க விழா சென்னையில் புதன்கிழமை நடைபெற்றது. விழாவில் இயக்குநர் மகேந்திரன் பேசியதாவது:

இந்தக் கல்லூரியின் மூலம் மாணவர்களுக்கு நான் கற்றுக் கொடுப்பதை விட அவர்களிடமிருந்து நான் கற்றுக் கொள்ளவே விரும்புகிறேன். சினிமா என்றாலே இயக்குநர்தான் முதலில் ஞாபகத்துக்கு வருகிறார். அந்த இயக்குநரின் பின்னால் ஒளிப்பதிவாளர், படத்தொகுப்பாளர் என்ற பெரிய வட்டம் இருக்கிறது. ஆனால், இயக்குநரே பெயரைத் தட்டிக் கொண்டு போய் விடுகிறார்.

சினிமா என்பது ஒரு கூட்டு உருவாக்கம்தான். இயக்குநரை மட்டும் பிரித்துப் பார்க்க வேண்டாம். இங்கே நானும் ஒரு மாணவனாகத்தான் வந்திருக்கிறேன். ஒரு யோகா குரு தன்னிடம் வருபவர்களுக்கு கற்றுக் கொடுக்கும்போது, தானும் யோகா செய்து கொள்கிறார். இதனால் இரு தரப்புக்குமே பயன்தான். கற்றது கையளவு என்பார்கள். அது போல, சினிமா பற்றி நானும் கையளவுதான் கற்றுள்ளேன். கல்லாதது இன்னும் உலகளவு உள்ளது.

இப்போதுள்ள மாணவர்கள் திறமைசாலிகள். அவர்களிடமிருந்து வரும் கேள்விகள் நம்மைத் திணறடித்து விடும். கற்றுக் கொடுப்பவர்கள் அந்தக் கேள்வியை புறம் தள்ளாமல், அந்தக் கேள்வி நன்றாக இருக்கிறதே என்று நினைத்தால் அங்கே நல்ல நிலை உருவாகும். இப்படி ஒரு கொடுக்கல் வாங்கல் நிலைதான் கற்பிக்கும் இடத்துக்கு நல்லது.

இப்படி ஒரு தளத்தை உருவாக்கியுள்ள தனஞ்செயனுக்கு நன்றி. மாற்றங்களை நிறைய பேர் விரும்பினாலும், அதை முன்னெடுப்பது யார் என்ற கேள்வி எல்லோருக்குள்ளும் உள்ளது. அதை முன்னெடுத்த தனஞ்செயனின் துணிச்சல் பாராட்டுக்குரியது.

தனஞ்செயன், தான் எடுக்கும் முயற்சிகளில் எல்லாம் வெற்றி பெற்று வருகிறார். உலக சினிமா, இந்திய சினிமா, தமிழ் சினிமா என அனைத்து சினிமாக்களையும் பற்றித் தெரிந்த மனிதர் அவர். ஏராளமான, அற்புதமான புத்தகங்களை எழுதியுள்ளார்.

சினிமா குறித்த கட்டுரைகளைத் தொடர்ந்து எழுதி வருகிறார். அதனால் அவர் மீது எனக்கு மிகுந்த நம்பிக்கை உண்டு. பெரிய திட்டமிடலுடன், நல்ல நோக்கத்துடன் இந்தச் செயலில் அவர் இறங்கியுள்ளார். அவருக்கு என் வாழ்த்துகள்.

தமிழ் சினிமா இன்னும் மிகப் பெரிய உயரத்துக்குப் போகும். புரட்சிகரமான மாற்றங்களை அடையும். உலகத் தரத்திலான அங்கீகாரம் கிடைக்கும். அப்படி நான் நினைப்பது உங்களுக்குப் பேராசையாகத் தெரியலாம். சில சமயங்களில் பேராசைகள்தான் லட்சியங்களாக உருமாறுகின்றன.

தமிழ் சினிமாவுக்கும் இந்திய சினிமாவுக்கும் ஒரு தனித்துவத்தை ஏற்படுத்தும் மாணவர்கள் இதன்மூலம் உருவாக வேண்டும் என வாழ்த்துகிறேன் என்றார் இயக்குநர் மகேந்தின்.

 

“இந்தியாவின் மிகச் சிறந்த கல்லூரியாக உருவெடுக்கும்’

 

பல்துறை சாதனையாளர்களின் பங்களிப்பில் உருவாகவுள்ள “புளு ஓஷன் பிலிம் அண்ட் டெலிவிஷன் அகாதெமி’ இந்தியாவின் மிகச் சிறந்த திரைப்படக் கல்லூரியாக உருவெடுக்கும் என்றார் தனஞ்செயன்.

திரைப்படத் தயாரிப்பாளரும் “புளு ஓஷன் பிலிம் அண்ட் டெலிவிஷன் அகாதெமியின்’ நிர்வாக இயக்குநருமான தனஞ்செயன் விழாவில் பேசியதாவது:

திரைத் துறையில் சாதிக்க விரும்பும் மாணவர்களுக்கு இந்தக் கல்லூரி சிறந்த வழிகாட்டியாக அமையும். தினசரி பாடம் என்பது இல்லாமல் ஒவ்வொரு வல்லுநரும் மாணவர்கள் மீது சிறப்பு கவனம் எடுத்து பாடங்கள் நடத்தவுள்ளனர்.

தமிழ் சினிமாவுக்குக் கிடைத்துள்ள வெளிச்சம் பன்மடங்கு மாறியுள்ளது. அதை முன்னெடுக்க புத்தம் புது தலைமுறையின் உத்வேகம் தேவைப்படுகிறது. அதற்குத் துணையாக இந்தக் கல்வி மையம் அமையும்.

இயக்குநர்கள் மகேந்திரன், பாக்யராஜ் போன்ற தமிழ் சினிமா ஆளுமைகள் முதலில் தயக்கம் காட்டினர். பின்னர், என் ஆர்வத்தைப் புரிந்து கொண்டு ஒப்புக் கொண்டனர்.

ஓராண்டாகத் திட்டமிட்டு இப்போது இந்த கல்லூரி உருப் பெற்றுள்ளது என்றார் தனஞ்செயன்.

SHARE