தமிழரசு தலைவராக பதவியேற்றுள்ள அண்ணன் மாவை சேனாதிராசாவுக்கு வாழ்த்துக்களுடன் இரண்டு யோசனைகளை முன்வைக்க விரும்புகின்றேன். முதலாவது, வடக்கு கிழக்கு தமிழர்கள், மலையக தமிழர்கள், முஸ்லிம் மக்கள், புலம் பெயர் தமிழர்கள், தமிழ்நாட்டு ஆதரவு சக்திகள், சிங்கள முற்போக்கு சக்திகள் ஆகிய ஆறு தரப்பினரையும் கூட்டிணைக்கும் பொறிமுறை ஒன்றை தோற்றுவியுங்கள். இரண்டாவது, 1960 களில் தந்தை செல்வா காலத்தில் தமிழரசு கட்சி முன்னெடுத்த அறவழி போராட்ட வரலாற்றை மீண்டும் இன்று எழுதுங்கள் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்
வவுனியாவில் நடைபெற்ற இலங்கை தமிழரசு கட்சி மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றியபோது மேற்கண்டவாறு தெரிவித்த மனோ கணேசன் தமது உரையில் மேலும் கூறியதாவது,
இன்று தலைமை பொறுப்பை ஏற்றிருக்கும் மாவை சேனாதிராசா, அன்றைய தமிழ் இளைஞர் பேரவை நட்சத்திரம். நான் மாணவனாக தமிழ் தேசியத்தை திரும்பி பார்த்த போது அங்கு இந்த நட்சத்திரம் ஒளிர்விட்டு கொண்டிருந்தது. இன்று அந்த நட்சத்திரம் பிரகாசித்து உச்சி வானிலே ஏறி நின்று உரிய பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளது. தமிழரசு தலைவருக்கும், விழா காணும் கட்சிக்கும், தலைநகர தமிழர்களின் வாழ்த்துக்களை இங்கே என்னுடன் வந்திருக்கும் எங்கள் ஊடக செயலாளர் பாஸ்கராவையும் இணைத்துக்கொண்டு தெரிவித்து கொள்கின்றேன்.
வவுனியாவில் இருந்து விடைபெற்று, பிரச்சார பணிகளுக்காக உடனடியாக ஊவா மாகாணத்தை நோக்கி பயணிக்க வேண்டிய நீண்ட இரவுநேர பயணம் என்னை அழைகின்றது. ஆதலால் இங்கு நான் நீண்ட உரையாற்ற முற்படவில்லை. உங்களுக்கு வாழ்த்துகளுடன் சேர்த்து இரண்டு யோசனைகளை மாத்திரம் முன்வைக்க விரும்புகின்றேன்.
முதலாவது, வடக்கு கிழக்கு தமிழர்கள், மலையக தமிழர்கள், முஸ்லிம் மக்கள், புலம் பெயர் தமிழர்கள், தமிழ்நாட்டு ஆதரவு சக்திகள், சிங்கள முற்போக்கு சக்திகள் ஆகிய ஆறு தரப்பினரையும் ஒரு நேர்கோட்டில் கொண்டு வாருங்கள். இந்த தரப்புகளை அரவணைத்து கூட்டிணைக்கும் தோழமை பொறிமுறை ஒன்றை தோற்றுவியுங்கள். இந்த பொறிமுறை உள்நாட்டிலே கட்டாயமாக தேர்தல் கூட்டமைப்பாக அமைந்திட வேண்டும் என்பது இல்லை. அப்படி இருக்க கூடாது என்பதும் இல்லை. தேர்தல்களின் போது அவசியப்படுமானால் நாம் கூட்டாக முடிவுகள் எடுக்கலாம். ஆனால், இங்கே நான், தேர்தல் இலக்குகளுக்கு அப்பாற்பட்ட கூட்டிணைவு ஒன்றையே பிரேரிக்கின்றேன். இங்கே உரையாற்றிய முதலமைச்சர் விக்னேஸ்வரன் சொன்னது போல், பல்வேறு சிறு நிறுவனங்களை கூட்டிணைத்து பெரிய ஒரு நிறுவனத்தை உருவாக்குவது என்பது போன்றதாகும் இந்த யோசனை. இந்த இணைவு, சிங்கள மக்களுக்கு எதிரானது அல்ல. இனவாதத்திற்கு எதிரானது. சிங்கள மக்களுக்கு உண்மையை எடுத்து கூறும் இணைவாகும்.
இரண்டாவது, இங்கே விடுதலை புலிகளின் போராட்டம் தொடர்பாக பல்வேறு கருத்துகள் கூறப்பட்டன. புலிகளின் சரிகளையும், பிழைகளையும் பற்றி பேசப்பட்டன. ஒரு விடயத்தை நாம் மனதில் கொள்ள வேண்டும். இன்று உலகம், சர்வதேச சமூகம், ஐநா சபை என்று எம்மை திரும்பி பார்க்கின்றதென்றால், அதற்கு அடித்தளமிட்டது, புலிகளின் போராட்டமே. போராடாமல் உலகம் எம்மை திரும்பி பார்க்காது. இலங்கை அரசின் மீது அழுத்தம் செலுத்துங்கள் என்று நாம் அமெரிக்காவையும், இந்தியாவையும், ஐநாவையும் கோருன்றோம். நாம் இங்கே தொடர்ச்சியாக போராடினால், அந்த போராட்டமே, அமெரிக்காவையும், இந்தியாவையும், ஐநாவையும் செயற்படுத்தும் அழுத்தமாக மாறும். போராட்டம் என்றால் ஆயுதபோராட்டத்தை நான் இங்கே கூறவரவில்லை. ஜனநாயக அறவழி போராட்டங்களை ஆரம்பியுங்கள் என்றே கூறுகின்றேன். 1960 களில் தந்தை செல்வா தலைமையில், தமிழரசு கட்சி முன்னெடுத்த அறவழி போராட்டங்களை திட்டமிட்டு மீண்டும் ஆரம்பியுங்கள். உலகம் எம்மை திரும்பி பார்க்கும். இலங்கை அரசுக்கு புரியும் பாஷையும் அதுதான்.
தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள்ளே, காத்திரமான இந்த இரண்டு பணிகளையும் உங்கள் தலைமையின் கீழ் இலங்கை தமிழரசு கட்சி முன்னெடுக்க வேண்டும். அதற்கு நாம் தோழமை கட்சி என்ற அடிப்படையில் துணையிருப்போம். இதைவிட இங்கே சொல்ல எதுவும் என்னிடம் இல்லை. விடை பெறுகின்றேன்.
TPN NEWS