உலக கோப்பை கால்பந்து: ஜெர்மனி-கானா இடையேயான ஆட்டம் சமநிலை

460

உலக கோப்பை கால்பந்து போட்டியில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் ஜெர்மனி- கானா அணிகள் மோதின. மிகுந்த விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் இரு அணிகளும் தலா இரண்டு கோல் அடித்து ஆட்டத்தை சமநிலை செய்தன.

இரு அணிகளும் முதல் பாதியில் ஒரு கோல் கூட அடிக்காத நிலையில், இரண்டாவது பாதியில் இரு அணிகளும் மாறி மாறி கோல் அடித்துக்கொண்டு வந்தன. ஆட்டத்தின் 51வது நிமிடத்தில் ஜெர்மினியின் கோட்சே தலையால் மோதி அற்புதமான கோல் அடித்து தங்கள் அணியின் கோல் கணக்கை துவக்கினார். அடுத்து மூன்றே நிமிடங்களில் கானா அணியும் ஜெர்மனி அணிக்கு தக்க பதிலடி கொடுத்தது. 52வது நிமிடத்தில் பிரின்சுக்கு பதிலாக ஆட வந்த அயேவ் 54வது நிமிடத்தில் கோல் அடித்து அசத்தினார்.

இதன் மூலம் இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருந்தன. மீண்டும் கானா அணியின் கியான் ஆட்டத்தின் 63வது நிமிடத்தில் அருமையான கோல் அடித்து தங்கள் அணியை 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலைப்படுத்தினார். இந்நிலையில் ஆட்டத்தின் 69வது நிமிடத்தில் ஜெர்மனியின் கோட்சேவுக்கு பதிலாக க்ளோஸ் இறங்கினார். 71வது நிமிடத்தில் கார்னர் கிக்கை பயன்படுத்தி க்ளோஸ் அற்புதமான கோல் அடித்து மீண்டும் கோல் கணக்கை சமன் செய்தார்.

இறுதி வரை இரு அணிகளும் மேலும் கோல் எதுவும் அடிக்காததால் 2-2 என்ற கோல் கணக்கில் ஆட்டம் சமநிலை  ஆனது. ஆட்ட நாயகனாக ஜெர்மனியின் கோட்சே தேர்ந்தெடுக்கப்பட்டார்.

SHARE