உலக கோப்பை போட்டிகளில் எங்களது மோசமான ஆட்டம் இது: இலங்கை கேப்டன் மேத்யூஸ் வருத்தம்

365
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் இன்று பரபரப்பாக நடைபெற்ற உலக கோப்பை காலிறுதி போட்டியில் இலங்கை அணி தென் ஆப்பிரிக்காவிடம் தோல்வியடைந்தது. அந்த அணியின் சங்ககாரா, மகேலா ஜெயவர்தனே இருவரும் உலக கோப்பை போட்டியுடன் சர்வதேச ஒரு நாள் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தனர்.

இந்நிலையில் போட்டி குறித்து இலங்கை அணியின் கேப்டன் மேத்யூஸ் கூறுகையில் “நாங்கள் 250 ரன்கள் எடுத்திருந்தால், அது எங்கள் பந்து வீச்சாளர்கள் அணியை வெற்றி பெற வைக்க ஒரு வாய்ப்பை உருவாக்கிக்கொடுத்திருக்கும். ஆனால் நாங்கள் முதல் பந்திலிருந்தே ஆட்டத்தை தக்க வைக்க தவறி விட்டோம். தென் ஆப்பிரிக்க அணி மிகவும் சிறப்பாக விளையாடியது.

உலக கோப்பை போட்டியில் எங்கள் மோசமான ஆட்டம் இது. குமார் சங்ககாரா மற்றும் மகேலா ஜெயவர்தனே இருவருக்கும் என்றும் நினைவில் நிற்கும் போட்டியாக இன்றைய போட்டி அமையாதது வருத்தமளிக்கிறது. இருவரும் 16-17 வருடங்கள் அணிக்காக விளையாடியவர்கள். அவர்களை இறுதி போட்டி வரை விளையாட வைத்திருப்பதே அவர்களின் பங்களிப்பிற்கு நன்றி செலுத்தும் விதமாக இருந்திருக்கும். ஆனால் எதிர்பாராத விதமாக அது எங்களால் முடியவில்லை” என்றார்.

தென் ஆப்பிரிக்க கேப்டன் டி வில்லியர்ஸ் கூறுகையில் “பேசுவதற்கு என்னிடம் அதிகமாக ஒன்றும் இல்லை. இன்றைய போட்டிக்கு மிகவும் தயாரிப்போடு நாங்கள் இருந்தோம். எங்கள் வீரர்கள் சிறப்பாக ஆடினர். குறிப்பாக எங்கள் பவுலர்கள் மிகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். நான் மிகவும் தன்னம்பிக்கையுடன் இருக்கிறேன். எங்கள் அணி வழியெங்கும் இன்னும் பல வெற்றிகளைக் குவிக்கும். இப்போதைக்கு இன்றைய வெற்றியை கொண்டாட பீர் குடித்து விட்டு அடுத்து போட்டியை பற்றி யோசிப்போம்” என்றார்.

SHARE