உள்ளுராட்சி சபைகளில் நிதி மோசடி! – சி.வி.கே.சிவஞானத்திற்கு வல்வை நகரபிதா கண்டனம்.
360
வடமாகாண சபையின் பேரவைத் தலைவர் திரு.சி.வி.கே.சிவஞானம் கடந்த 5 ஆம் திகதி பேரவைச் செயலகத்தில் வைத்த, பத்திரிகையாளர் மகாநாட்டில், வல்வெட்டித்துறை நகரசபையில் 10 இலட்சமும், பருத்தித்துறை பிரதேச சபையில், 7 இலட்சம் ரூபாவும் முறைகேடான கொடுப்பனவுகள் இடம் பெற்றதாகக் குறிப்பிட்ட செய்திகள் அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களில் வெளியிடப்படபொழுது அதிர்ச்சியாக இருந்தது.
இச் செய்தியின் சாராம்சத்தை வாசித்தவர்கள் மேற்படி சபைகளிலேயே மோசடிகள் இடம் பெற்றதாகத் தவறாக விளங்கிக் கொள்வார்கள் என்று தெரிந்தும் திரு.சி.வி.கே.சிவஞானம் இவ்வாறான குற்றச் சாட்டுக்களைச் சுமத்தியுள்ளார்.
அண்மையில், உள்ளுராட்சி மன்றங்களில் இடம் பெற்ற நெல்சிப்திட்டத்தின் அபிவிருத்திகளுக்கான கொடுப்பனவுகள் தொடர்பாக சுமார் 100 மில்லியன் ரூபா வரை மோசடிகள் இடம் பெற்றதாக, பாராளுமன்ற உறுப்பினர் திரு. சுரேஸ் பிரேமச்சந்திரன் அவர்கள் ஊடகங்களுக்குத் தெரியப் படுத்தியதைத் தெடர்ந்து, இதில் சம்பந்தப்பட்ட செயல்திட்டப் பொறியியலாளர் ஒருவர்,ஆளுநரினால், பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டதுடன், விசாரணைக்குழு ஒன்றும், அமைக்கப்பட்டதாகவும் அறிய வருகின்றது.
மேற்படி 100 மில்லியன் ரூபாவும் எந்தெந்த வேலைத்திட்டங்களுக்கான கொடுப்பனவுகளில் இருந்து மோசடி செய்யப்பட்டன என்ற விபரங்கள் வெளியிடப்படவில்லை. இந்த நிலையில்திரு.சி.வி.கே.சிவஞானம், அவைத் தலைவர் என்ற பொறுப்பான பதவியையும் மறந்து,தனிப்பட்ட முறையில் என்மீது உள்ள கோபம் காரணமாக, பழிவாங்கும் நோக்கில்,தற்பொழுது சபை இயங்காததைத்தனக்குச் சாதகமாக்கிக் கொண்டு, இத்தகைய ஒரு அறிக்கையை எவ்வித ஆதாரமும் இன்றி வெளியிட்டதற்காக,எனதும் வல்வெட்டித்துறை மக்களினதும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
வடமாகாண சபையின் பேரவைத் தலைவர் என்ற வகையில், மிகவும் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டியவர், தேவையற்ற முறையில் வல்வெட்டித்துறை நகரசபைக்கும், மக்களுக்கும் களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் இவ்வாறான அறிக்கைகளை வெளியிடுவதற்கான அதிகாரத்தை யார் வழங்கியது?. வடமாகாண சபையின் நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துவதே ஒரு பேரவைத் தலைவரின் கடமையே தவிர, உள்ளுராடசி மன்றங்களுக்குள் தேவையற்ற வகையில் தலையிட்டு, அவற்றைக் குழப்ப முயற் சிப்பது அல்ல என்பதை திரு.சி.வி.கே.சிவஞானம் புரிந்துகொள்ள வேண்டும்.
திரு.சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தது போல், வல்வெட்டித்துறை நகர சபையில் எவ்வித முறையற்ற கொடுப்பனவுகளும் மேற்கொள்ளப்படவில்லை.அதேவேளை நெல்சிப் தொடர்பான அனைத்து முடிவுகளும் உள்ளுராட்சி உதவி ஆணையாளர் அலுவலகத்திலேயே மேற்கொள்ளப்படுவதால்,இத்தகைய கொடுப்பனவுகளுக்கும், நகரசபை நிர்வாகத்திற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை.
2011 ஆம் ஆண்டு உள்ளுராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள் வெளிவந்த பின் ஒன்பது உறுப்பினர்களில்,ஆறாவதாகத் தெரிவு செய்யப்பட்டு வல்வை மக்களின் ஆதரவைப் பெறத்தவறிய, தனது நெருங்கிய சகாவும், தமிழரசுக் கட்சியின் நிர்வாகச் செயலாளருமான திரு.சூ.சே.குலநாயகத்திற்கு நகரசபை தலைவர் பதவியை நான் விட்டுக்கொடுக்க வில்லை என்ற ஒரே காரணத்திற்காக என்னையும், எனது நகர,மக்களையும் பழிவாங்கும் நடவடிக்கையில் தொடர்ச்சியாக ஈடுபட்டுவரும் திரு.சி.வி.கே.சிவஞானம்,பேரவைத் தலைவர் என்ற பதவியையும் துஸ் பிரயோகம் செய்யும் வகையில் வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தில் அவரது சகாக்களைத் தூண்டி வருவது பற்றியும் எமது மக்களிடையே ஒரு கோபம் இருந்து கொண்டு வரும்நிலையில் மேலும் தனது பழிவாங்கும் நடவடிக்கையை இவ்வாறான அறிக்கை மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.
இதே போன்று, திரு.குலநாயகமும்,அவரது குழுவினரும்,வல்வெட்டித்துறை நகரசபையை, முடக்கிய பொழுது, எனது வேண்டுகோளுக்கு அமையவே, கௌரவ முதலமைச்சர் அவர்களினால், ஜுலை மாதம் 28 ஆம் திகதியில் இருந்து,ஒக்ரோபர் மாதம் 28 ஆம் திகதி வரை வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தின் சபை நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப் பட்டிருந்தன. அதே வேளை இது தொடர்பான பக்கச்சார்பற்ற தனிநபர்,விசாரணையும் நடை பெற்றது.அந்த விசாரணை அமர்வுகள் மிகவும் நேர்மையாகவும்,அரசியல் சார்பற்ற முறையிலும் நடந்து கொண்டிருந்த பொழுது,திரு.குலநாயகம் குழுவினரின் கடந்த கால நடவடிக்கைகளுக்கு எதிராகவே சாட்சியங்கள் அமைந்திருந்ததுடன், அவர்கள் இழைத்த குற்றங்கள் தொடர்பான அனைத்து உறுதிப்படுத்தப்பட்ட ஆவணங்களும் விசாரணை மன்றில் என்னாலும், செயலாளராலும் சமர்ப்பிக்கப்பட்டன.
அந்த நிலையில் அவரது, விசாரணைக்கு முட்டுக்கட்டை போடுவது போல், விசாரணையின் தீர்ப்பை மாற்றும் வகையிலான ஒரு கடிதத்தை விசாரணைஅதிகாரிக்கு, அனுப்பி வைத்த திரு.சி.வி.கே.சிவஞானம் எப்படியாவது,எனக்குப் பாதகமாகவும், திரு.குலநாயகம் குழுவினருக்குச் சாதகமாகவும் தீர்ப்பு வரக்கூடிய வகையில் அழுத்தத்தைக் கொடுத்திருந்ததால், அந்தக் கடிதம் தொடர்பான கண்டனமும் குறி;த்த அதிகாரியினால் தெரிவிக்கப்பட்டது.
முதலமைச்சர் அவர்களினால் விதிக்கப்பட்ட அந்தக் காலஅவகாசம், கடந்த 28 ஆம் திகதியுடன் முடிவடைந்த நிலையில்,நான் மீண்டும் சட்ட ரீதியாகத் தலைமைப் பதவியைப் பொறுப்பேற்க முடியுமாயினும் கௌரவ முதலமைச்சரின் தீர்ப்புக்காகக் காத்திருக்கும்வேளையில் பேரவைத் தலைவரான திரு.சி.வி.கே.சிவஞானம், இவ்வாறான, குற்றச்சாட்டுக்களைத் தெரிவித்து கௌரவமாக வாழ்கின்ற எனக்கும், நேர்மையுடன் செயலாற்றி வரும், செயலாளர்,தொழில் நுட்ப அலுவலர்கள் மற்றும் கொடுப்பனவு தொடர்பான,அலுவவலர்களுக்கு அபகீர்த்தியையும் ஏற்படுத்தியுள்ளார்.
எனவே திரு.சி.வி.கே.சிவஞானம் அவர்கள் இவ்வாறான மோசடிகள் வல்வெட்டித்துறையில் நடைபெற்றுள்ளது என்று ஊடகங்களினூடாகத் தெரிவித்த தவறான கருத்துக்களுக்காகத் தனது மனவருத்தத்தைத் தெரிவிப்பதுடன், அச்செய்தி தொடர்பான சரியான விளக்கத்தையும்,உண்மையான
நிலையையும் தெளிவுபடுத்தும் வகையிலும் மீண்டும், ஊடகங்களின் ஊடாகப் பொது மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கின்றேன்.
அல்லாவிடின் என்னையும் எமது வல்வெட்டித்துறை மக்களையும்,நகரசபையின் செயலாளரையும், மற்றைய அலுவலர்களையும் புண்படுத்தி, அவதூறை ஏற்படுத்தியதற்காக,சட்ட நடவடிக்கை எடுக்க நேரிடும் என்பதையும் மனவருத்தத்துடன் அறியத்தருகின்றேன்.
இதன் பிரதிகள் உரிய நடவடிக்கைக்காக, முதலமைச்சரும்,உள்ளுராட்சி அமைச்சருமான கௌரவ.சி.வி.விக்னேஸ்வரன், கௌரவ ஆளுநர், தமிழரசுக் கட்சியின் தலைவர் திரு.மாவை சேனாதிராஜா ஆகியோருக்கும்,தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஏனைய தலைவர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
நடராஜாஅனந்தராஜ்
தலைவர்,
வல்வெட்டித்துறை நகராட்சி மன்றம்.
தொடர்புடைய செய்தி – அவைத்தலைவர் ஊடகங்களுடாக பதிலடி.
வடமாகாண சபைக்கு 5831 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டதாகவும், அதனை அவர்கள் செலவிட முடியாமல் இருக்கின்றார்கள் எனவும் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை என சுட்டிக்காட்டியிருக்கும் அவை தலைவர்,
வடமாகாண சபைக்கு 5831 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டதாகவும், அதனை அவர்கள் செலவிட முடியாமல் இருக்கின்றார்கள் எனவும் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை என சுட்டிக்காட்டியிருக்கும் அவை தலைவர், மாகாண சபைக்கு ஒதுக்கப்பட்ட மூலதன செலவீனம் 1876 மில்லியன் ரூபா மட்டுமே என குறிப்பிட்டுள்ளார்.மேற்படி நிதி விடயம் தொடர்பில் இன்றைய தினம் வடமாகாண சபையில் நடைபெற்ற விசேட பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
வடமாகாண சபைக்கு 19481 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டதாக கூறப்பட்டாலும், அதில் மீண்டுவரும் செலவீனம் மற்றும் எமது நிதி கையாளுகைக்குட்பட்ட 1876 மில்லியன் உள்ளடங்கலான 15,526 மில்லியன் ரூபா நிதி மட்டுமே மாகாண சபையின் நிதி கையாளுகைக்கு உட்பட்டிருக்கின்றது.
மீதமாகவுள்ள 3955 மில்லியன் ரூபா நிதி எமது நிதி கையாளுகைக்குட்பட்டதல்ல. அந்த நிதி மாகாண சபையின் திறைசேரிக்கு ஊடாக ஒதுக்கப்படாமல் நேரடியாக திணைக்களங்களுக்கே ஒதுக்கப்படுகின்றது.
இந்த நிதியில் வடமாகாண சபையினர் அல்லது மாகாணசபை அதிகாரிகள் தலையீடு செய்ய முடியாத வகையில் சட்டம் இருக்கின்றது.
இந்நிலையில் வடமாகாண சபைக்கு 5831 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டதாகவும், அதனை அவர்கள் செலவிடவில்லை. எனவும் முன்வைக்கபடும் குற்றச்சாட்டுக்கள்,
பொருத்தமற்றவை என அவைத்தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அவ்வாறான விமர்சனங்களை முன் வைப்பவர்கள், மாகாணசபையின் ஆளும் தரப்பினராகிய தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் ஒரு ஆட்சியை நடத்த முடியாமல் இருக்கின்றார்கள் என மக்களுக்கு காண்பிக்க நினைக்கின்றார்கள்.
ஆனால் அவ்வாறான விமர்சனங்களில் உண்மையில்லை என்பதுடன், எமக்கு ஒதுக்கப்பட்ட மூலதன ஒதுக்கீட்டு நிதியினை இவ்வருட இறுதிக்குள் அரச நிதி கையாளுகை நியமங்களுக்கு அமைய செலவிட்டு முடிப்போம் எனவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை மாகாண சபையின் அமைச்சர்கள், முதலமைச்சர், அவைத் தலைவர், உறுப்பினர்கள் ஆகியேரை விமர்சித்து மொட்டைக் கடிதங்கள் தமக்கு கிடைத்துக் கொண்டிருப்பதாக அவைத்தலைவர் தெரிவித்துள்ளார்.
அவ்வாறான விமர்சனங்களை முன்வைக்கும் விமர்சகர்கள் தங்களை முதலில் அடையாளப்படுத்திக் கொண்டு உண்மையானதும், நேர்மையானதுமான விமர்சனங்களை முன்வைத்தால் அது இரு பகுதியிருக்கும் நன்மையளிக்கும் எனவும் கூறியிருக்கின்றார்.