ஊடகவியலாளர்களுக்கு அரசாங்கம் போதியளவு எரிபொருள் வழங்கவேண்டும் – சட்டவிரோத செயற்பாடுகளும் அதிகரிப்பு

22

இன்றைய நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பிரச்சினை காரணமாக உடனுக்கு உடன் கள நிலமைகளை படம்பிடித்து செய்திகளை வழங்கிக்கொண்டிருக்கும் ஊடக நிறுவனங்கள் மற்றும் அதில் பணிபுரியும் ஊடகவியலாளர்கள் தங்கு தடையின்றி தமது கடமைகளை செய்வதற்கு அரசாங்கம் எந்த சந்தர்ப்பத்திலும் அனுமதி வழங்கியுள்ளபோதிலும், தற்போது தலைதூக்கியுள்ள எரிபொருள் பிரச்சினையால் ஊடக நிறுவனப் பணியாளர்கள் நீண்ட நேரம் எரிபொருளுக்காக வரிசையில் நிற்பதும், மட்டுப்படுத்தப்பட்ட வகையில் பெற்றோல் வழங்குவதும் ஏற்புடையதல்ல.

குறிப்பாக நாளொன்றுக்கு குறைந்தது 2 லீட்டர் பெற்றோல் ஒரு ஊடகவியலாளருக்குத் தேவைப்படுகின்றது. செய்திகளைச் சேகரிப்பதற்காக தூர இடங்களுக்குச் செல்லவேண்டிய தேவை உள்ளது. தொடரும் எரிபொருள் நெருக்கடியால் தமது கடமைகளை உரிய நேரத்தில் செய்ய முடியாத நிலை தொடர்கின்றது. நாட்டில் இடம்பெறுகின்ற வன்முறைகள், இன்னல்களை மூடிமறைப்பதற்கு அரசாங்கம் இவ்வாறு திட்டமிட்டுச் செயற்படுகின்றதா என்கிற கேள்வியும் எழுப்பப்பட்டுள்ளது.

எரிபொருளைப் பதுக்கிவைக்கின்ற நடவடிக்கையும் அதிகூடிய விலைக்கு விற்கின்ற செயற்பாடும் நாட்டில் அதிகரித்துள்ளது. விசேட குழுக்களை நியமித்து உடனடியாக இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகளை முடிவுக்குக் கொண்டுவரவேண்டும்.

எனவே உடனடியாக இந்த விடயத்திற்குப் பொறுப்பாகவுள்ள அமைச்சு, ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஊடகவியலாளர்களுக்கும், நாட்டு மக்களுக்கும் எரிபொருள் வழங்குவதில் விசேட பொறிமுறை ஒன்றினை விரைவில் உருவாக்கவேண்டும். அந்தப் பொறிமுறை ஒழுங்கான முறையில் நடைமுறைப்படுத்தப்படவேண்டும். எல்லோருக்கும் எரிபொருள் என்பது அத்தியாவசியமானது என்பதனையும் கருத்திற்கொள்ளவேண்டும். ஊடக நிறுவனங்களையும் ஊடகவியற் பணிகளையும் முடக்க நினைப்பது ஏற்புடையதல்ல என்பதையும் சுட்டிக்காட்டுவதோடு, சம்பந்தப்பட்ட தரப்பினர் உரிய நடவடிக்கைகளை சகல ஊடகவியலாளர்களுக்கும் ஏற்படுத்திக்கொடுக்குமாறு தினப்புயல் ஊடக நிறுவனம் அரசிடம் கோரிக்கை ஒன்றினை முன்வைக்கின்றது.

 

SHARE