ஊவா மாகாண சபையில் ஏனைய கட்சிகளுடன் இணைந்து கூட்டணி ஆட்சியொன்றை முன்னெடுப்பது தொடர்பில் ஐ.தே.க. கலந்துரையாடல்களில் ஈடுபட்டுள்ளது.
இன்று நடைபெற்றுள்ள ஊவா மாகாண சபையின் தேர்தல் முடிவுகள் நாளைக்குள் வெளியாகிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தத் தேர்தலில் ஆளுங்கட்சிக்கு பின்னடைவு ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும் ஐக்கிய தேசியக் கட்சி, ஜே.வி.பி மற்றும் சரத் பொன்சேகாவின் ஜனநாயக தேசிய முன்னணி ஆகிய கட்சிகள் ஆளுங்கட்சியை விட அதிக ஆசனங்களைக் கைப்பற்றும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த மூன்று கட்சிகளும் இணைந்து மாகாண சபையில் கூட்டணி ஆட்சியொன்றை முன்னெடுப்பது தொடர்பிலான கலந்துரையாடல்களை ஐ.தே.க. முன்னெடுத்துள்ளது.
இதனை இலகுவாக்கும் வகையில் முதலமைச்சர் பதவியைக் கூட இரண்டரை வருடங்கள் வீதம் பகிர்ந்து கொள்ள தான் தயாராக ஐ.தே.க.வின் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
எனினும் ஊவா மாகாண சபையை எப்பாடுபட்டேனும் தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பதில் ஆளுங்கட்சி தீவிரமாக கவனம் செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஊவா மாகாணசபை வாக்களிப்பு நிறைவு : மொத்தம் 80% வாக்குப் பதிவு
இன்று காலை 7.00 மணிக்கு ஆரம்பமான ஊவா மாகாண தேர்தலிலுக்கான வாக்களிப்பு மாலை 4.00 மணியளவில் நிறைவடைந்தது.
இந்நிலையில்,பதுளை, மொனராகலை மாவட்டங்களில் இருந்து முறையே 78% மற்றும் 80%பேர் வாக்களித்திருப்பதாக மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி ரோஹண கீர்த்தி திசாநாயக்க தெரிவிவித்தார்.
இவ்விரு மாவட்டங்களிலும் நிறுவப்பட்டிருந்த 832 வாக்குச்சாவடிகளில் மொத்தம் 10 இலட்சத்து 31 ஆயிரத்து 820 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்ததாக தெரிவிக்கபப்டுகிறது.
பதுளை மாவட்டத்தில் 9 தேர்தல் தொகுதிகளும் மொனறாகலை மாவட்டத்தில் மூன்று தேர்தல் தொகுதிகளும் உள்ளன. இவற்றில் இருந்து 32 பிரதிநிதிகள் தெரிவுசெய்யப்படவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
832 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. மாலை 6 மணியளவில் தபால் மூல வாக்குகள் எண்ணப்படும். நள்ளிரவுக்கு முன்னர் முதலாவது பெறுபேற்றை வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தேர்தல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது
இரு மாவட்டங்களிலும் இன்றைய வாக்குப் பதிவு சுமூகமான முறையில் நிறைவுபெற்றுள்ளது.