எங்களை வெளியில் எடுப்பதற்கு பிரதான எதிர்க்கட்சி அவசரப்படுவதன் காரணம், எங்களைப் பயன்படுத்தி இன்னும் சில விக்கட்டுகளை வீழ்த்துவதற்கே ஆகும். அது மிகவும் பிழையானது. அதற்கு நாங்கள் சோரம் போக முடியாது. அது எங்களைப் பற்றி தவறான பார்வையைக் கொடுக்கும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலில் எந்த வேட்பாளரை ஆதரிப்பது என்பது தொடர்பில் கண்டியில் நடந்த கலந்துரையாடலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மக்கள் பிரதிநிதிகளின் கருத்துக்களை உள்வாங்கியதன் பின்னர் ஆற்றிய முடிவுரையில் கட்சியின் தலைவரும், நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 8ம் திகதி ஜனாதிபதித் தேர்தலுக்கான நியமனப் பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து நான் மிகவும் மகிழ்ச்சியோடு இருக்கிறேன்.
ஏனென்றால் எமது மவுசு கூடிக்கொண்டே போகிறது. இன்னும் கொஞ்சம் நாளைக்கு இவ்வாறு நீடிக்குமானால் எவ்வளவு நன்றாக இருக்கும்.
இந்தச் சந்தர்ப்பத்தை தவறவிட்டால் இவ்வாறு வேறு காலம் வாய்க்காது. இரண்டு தரப்பினரும் எங்களது ஆதரவுக்காக ஏங்கி நிற்கிறார்கள். நான் மிகவும் நிதானமாக இருக்கிறேன்.
இந்தக் கட்சியை மிகக் கவனமாக இப்போதுள்ள கட்டத்திலிருந்து தாண்ட வைப்பது முக்கியமாகும். இந்த விடயத்தின் உண்மையான பரிமாணத்தை புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்தக் கூட்டத்தை கூட்டினேன்.
ஏனென்றால், மக்கள் மிகவும் ஆத்திரத்தோடு இருக்கிறார்கள். எமது போராளிகள் மிகவும் ஆவேசத்தோடு இருக்கிறார்கள். இதுவொரு பலமான இயக்கம். வெறும் அரசியல் அதிகாரத்திற்கு பின்னால் அள்ளுண்டு போகும் இயக்கமல்ல.
பிச்சை வேண்டாம். நாயைப் பிடி என்று போனதால் தான் எங்களுக்குத் தலை குனிவு ஏற்பட்டது.
என்னைப் பொறுத்தவரை எந்த அரசாங்கமாக இருந்தாலும் அமைச்சுப் பதவிகளை எடுக்காமல் ஆதரவு அளிப்பது கட்சிக்கு மிகப் பெரிய கௌரவமாக இருக்கும் என்று நம்புகிறேன்.
அமைச்சுப் பதவிக்காக பல்லிளிப்பது மிகவும் கேவலமானது எனவும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் கூறியுள்ளார்.