எச்சில் துப்பிய சஞ்சு சாம்சன்!

152

அவுஸ்திரேலிய வீரர்கள் மீது இந்திய ‘ஏ’ அணியின் வீரர் சஞ்சு சாம்சன் எச்சில் உமிழ்ந்ததாக அந்த அணியின் தலைவர் கவாஜா வேதனை தெரிவித்துள்ளார்.

இந்திய ‘ஏ’ – அவுஸ்திரேலியா ‘ஏ’ அணிகளுக்கிடையிலான முத்தரப்பு கிரிக்கெட்டின் இறுதிப்போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்றது.

இதில் இந்திய ‘ஏ’ அணி, அவுஸ்திரேலிய ‘ஏ’ அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.

இந்தப் போட்டியில் கடைசி நேரத்தில் இந்தியாவின் வருங்கால விக்கெட் கீப்பரான சஞ்சு சாம்சன் ஆட்டமிழக்காமல் 24 ஓட்டங்கள் எடுத்து வெற்றிக்கு உதவினார்.

முன்னதாக அவுஸ்திரேலிய ‘ஏ’ அணி துடுப்பெடுத்தாடும் போது சஞ்சு சாம்சனுக்கும் அந்த அணி வீரர்களுக்கும் இடையே அடிக்கடி வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் கோபம் அடைந்த சாம்சன் எதிரணி வீரர்களின் கால்பகுதியில் மூன்று முறை எச்சில் உமிழ்ந்துள்ளார்.

சாம்சனின் இந்த செயல் தங்களுக்கு மிகுந்த வருத்தம் அளித்ததாக அந்த அணியின் தலைவர் கவாஜா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், சஞ்சு சாம்சன் எங்கள் அணியைச் சேர்ந்த வீரர்கள் முன்பு மூன்று முறை எச்சில் உமிழ்ந்து உள்ளார்.

அவரது செயலால் எங்கள் அணியின் வீரர்கள் மிகுந்த வருத்தம் அடைந்துள்ளனர்.

எங்கள் அணியின் ஒரு வீரர், அவரிடம் ஏதோ சொல்லியிருக்கிறார். அதனால் அவர் எச்சில் உமிழ்ந்திருக்கிறார். அதை நான் புரிந்து கொள்கிறேன்.

எங்கள் அணியின் வீரர் அவரை எதாவது சொல்லியிருந்தால், அவர் திரும்ப ஏதாவது சொல்லியிருக்கலாம். அதற்குப் பதிலாக எச்சில் உமிழ்ந்திருக்கக்கூடாது.

இதற்கு முன் சந்தீப் சர்மாவுடன் எங்கள் வீரர்கள் வார்த்தை போரில் ஈடுபட்டுள்ளனர். அதற்கு அவரும் வார்த்தையால் மோதியுள்ளார். இது ஆரோக்கியமான விடயம்.

மைதானத்தில் நடந்ததை ஒரு பெரிய பிரச்சனையாக நான் கொண்டு செல்ல விரும்பவில்லை. சிறந்த அணி வெற்றி பெற்றுள்ளது. துரதிர்ஷ்டவசமாக இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது என்று கூறியுள்ளார்.

SHARE