“நீங்கள் உங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தை நாளை மறுதினம் 8 ஆம் திகதி என்னிடம் கையளிக்க உள்ளீர்கள். உங்கள் பிள்ளைகளைப் பாதுகாத்து, இந்த நாட்டை மட்டுமல்ல, முழு உலகத்தையும் வெல்லக் கூடியவர்களாக மாற்றுவேன் என உறுதியளிக்கின்றேன். அந்தப் பொறுப்பு எனக்குள்ளது.” – இவ்வாறு ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
கெஸ்பேவயில் நேற்றிரவு இடம்பெற்ற இறுதிப் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், “நான் நாட்டின் அனைத்து இடங்களுக்கும் சென்று வந்துள்ளேன். யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், வவுனியா, முல்லைத்தீவு ஊடாக அப்படியே கிழக்கு மாகாணமும் சென்று, தொகுதிகளுக்கும் சென்று முழு இலங்கைக்கும் சென்று வந்து நேற்று (நேற்று முன்தினம்) பொலனறுவை சென்றேன். அங்கு 8 ஏக்கர் மைதானம் முழுமையாக நிறைந்து இலட்சக்கணக்கான மக்கள் திரண்டிருந்தனர்.
வீதிகளிலும் மக்கள் இருந்தனர். முழு ஊரே திரண்டுவந்து எனக்கு ஆதரவு வழங்கியது. இன்று (நேற்று) பிபிலயில் இருந்து தற்போது உங்களது கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளேன். எனக்கு தெளிவாகக் கூறமுடியும். 45 வருட அரசியல் அனுபவமிக்க எனக்கு – வெற்றி, தோல்வியை நன்கு அறிந்து வைத்துள்ள எனக்கு அதி சிறந்த வெற்றி கிடைக்கும். இந்ந நேரத்தில் நான் உங்களுக்கு ஒன்று கூறுகின்றேன்.
எதிர்க்கட்சியினருக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டாம். நாம் எவரையும் தாக்கத் தேவையில்லை. நாம் நிச்சயமாக வெல்வோம். அதனால், சமாதானமாக – ஜனநாயகமாக இந்த ஜனாதிபதித் தேர்தலில் செயற்படுவோம் என உங்களிடம் நான் கேட்டுக்கொள்கின்றேன்” – என்றார்